Thursday 25 April 2024

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்..!!!

இரா சம்பந்தரை வீட்டுக்கு அனுப்பிய நாடாளுமன்றம்..!!!


முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ள்ஸ் நிர்மலநாதன் தீர்மானத்தை ஆதரித்தார்.

91 வயதாகும் ஆர் சம்பந்தன் அவர்கள் தற்போது நோய்வாய்ப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!!

தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!!!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜீன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், திருகோணமலையில் அவரது சரியான முகவரிக்கு மீண்டும் அழைப்பு கட்டளை அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது முதலாம் மற்றும் மூன்றாம் எதிராளிகள் தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கோரினார்.

இதனையடுத்து எதிராளிகள் தமது சமர்ப்பணங்களை முன்வைக்க அவகாசம் வழங்கி ஜீன் 20ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றதை தொடர்ந்து வழக்கு எதிர்வரும் மே 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு..!!!



யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த ஜோன் திரவியம் குமரசேன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுநாள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூளை காய்ச்சல் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 292.7078 ஆகவும் விற்பனை விலை ரூபா 302.5848 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,




கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு சீல் வைப்பு..!!!

கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு சீல் வைப்பு..!!!


யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கான பிரயாண சீட்டு விற்பனை பணம் உள்ளிட்ட புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான சுமார் 20 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளமை கணக்காய்வில் தெரிய வந்துள்ளமையால் , பொறுப்பதிகாரிக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் புகையிரத நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் , பிரயாண சீட்டினை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் , காட்சிப்படுத்தப்பட்ட , நிலைய அலுவலக கதவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் புகையிரத நிலையம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளமையால் கொக்குவில் , திருநெல்வேலி பகுதி மக்களும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் , திறந்த பல்கலைக்கழகம் , தொழிநுட்ப கல்லூரி , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் என பெரும்பாலானோர் புகையிரத பயணங்களை மேற்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


க. பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!!!

க. பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு..!!!



நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மே 6 முதல் 15ம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெற உள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பொதுச் சான்றிதழ் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை..!!!

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை..!!!



நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது ,குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதன் போது , நேற்றைய தினம் புதன்கிழமை நீதிபதி இளஞ்செழியன் மன்றில் தோன்றி, தனது சாட்சியங்களை பதிவு செய்தார்.

சம்பவ தினத்தன்று மேல் நீதிமன்றில் இருந்து எனது காரில் யாழ். - கண்டி வீதி வழியாக சென்று , கோவில் வீதி வழியாக எனது உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி பயணித்தேன்.

காரினை எனது சாரதி ஓட்டினார். அவருக்கு அருகில் எனது ஒரு மெய்ப்பாதுகாவலர் அமர்ந்திருந்தார். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தேன்.

எனது கார் சாரதியின் மோட்டார் சைக்கிளை எனது மற்றுமொரு மெய்ப்பாதுகாவலர் செலுத்தி வந்தார்.

நல்லூர் ஆலய பின் வீதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமையால் , மோட்டார் சைக்கிளில் முன்னே சென்ற எனது மெய்ப்பாதுகாவலர் வீதியின் போக்குவரத்தினை சீர் செய்து எனது காரினை சந்தியால் பருத்தித்துறை வீதி பக்கம் அனுப்பினார்.

அவ்வேளை காரின் பின் புறமாக இருந்த நான் காரின் கண்ணாடி வழியாக பின் புறம் அவதானித்த போது , சிவில் உடை தரித்த நபர் ஒருவர் வீதியில் போக்குவரத்தினை சீர் செய்து கொண்டிருந்த எனது மெய்ப்பாதுகாவலரின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்டார்.

அதனை அவதானித்து காரினை நிறுத்துமாறு சத்தமிட்டேன். மெய்ப்பாதுகாவலர் சிவில் உடை தரித்தவரிடம் இருந்து தனது துப்பாக்கியை பறிக்க மல்லுக்கட்டினார்.,

நான் காரினை விட்டு இறங்கி துப்பாக்கியை கீழே போடுமாறு கத்தினேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் 12 - 15 அடி இடைவெளி இருந்தது. துப்பாக்கியை பறித்தவர் துப்பாக்கியை லோர்ட் செய்தார். சிறிது நேரத்தில் " மகே அம்மே " என கத்தியவாறு எனது மெய்ப்பாதுகாவலர் வயிற்றை பிடித்தவாறு சரிந்து விழுந்தார்.


அடுத்து துப்பாக்கியுடன் நின்றவர் என்னை நோக்கி சுட்டார் உடனே என்னுடன் காரில் பயணித்த மற்றைய மெய்ப்பாதுகாவலர் , என்னை காரின் இடது புறம் தள்ளி விட்டு கீழே படுத்துக்கொண்டார்.அவ்வேளை அவரது இடது தோள் புறத்தில் துப்பாக்கி சூடு பட்டது. பதிலுக்கு எனது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருவரது துப்பாக்கி ரவைகளை தீர்ந்த நிலையில் , சிவில் உடை தரித்தவர் எனது காரின் எதிர்புறமாக பருத்தித்துறை வீதி வழியாக ஓடி தப்பினார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை சுமார் 12 நிமிடங்கள் நேரில் பார்த்தேன் என்பதால் , எதிரி கூண்டில் நிற்கும் எதிரி தான் துப்பாக்கி சூட்டினை நடாத்தினார் என நன்கு தெரியும் என கூறினார்.

குறுக்கு விசாரணையின் போது , எதிரியின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , " முச்சக்கர வண்டி சாரதிக்கு இடையிலான முரண்பாட்டின் போது , உங்கள் மெய்ப்பாதுகாவலர் தலையீடு செய்தமையால் , ஏற்பட்ட முரணாலையே துப்பாக்கி சூடு இடம்பெற்றது, உங்களை கொல்லவேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை" என குறிப்பிட்டதை , நீதிபதி மறுதலித்து " நல்லூர் ஆலய சூழல் சுட்டு விளையாடும் திடல் அல்ல என தெரிவித்தார்.

நீதிபதியின் சாட்சியம் நிறைவுற்றதை அடுத்து , நீதிபதி பலத்த பாதுகாப்புடன் , நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினார்.

அதேவேளை , சம்பவ தினத்தன்று , நீதிபதியின் மற்றுமொரு மெய்ப்பாதுகாவலராக கடமைக்கு சென்று , துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது சாட்சியத்தின் போது , துப்பாக்கி சூட்டில் எனது நண்பர் படுகாயமடைந்த நிலையில் , நான் எனது நண்பரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. அதனால் சூழலை என்னால் முழுமையாக அவதானிக்க முடியவில்லை. என கண்ணீருடன் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.

குறித்த வழக்கு விசாரணைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.