Friday 16 October 2020

கொவிட்-19: பிரான்ஸில் நோய்த் தொற்று உச்சம்..!!!

SHARE


பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் மேலும் எட்டு நகரங்களில் நாளை(17)  தொடக்கம் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த வியாழக்கிழமை மேலும் 30,621 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்திய தினத்தில் 22,591 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையிலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

உயிர்களை காப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐரோப்பாவில் இரண்டாம் அலை கொரோனா தாக்கம் தீவிரம் கண்டிருக்கும் நிலையில் அங்கு மில்லியன் கணக்கான மக்கள் புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை தொடக்கம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உட்புறங்களில் சமூக ஒன்றிணைவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளிலும் கொவிட்–19 அபாய நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரான்ஸ், இத்தாலி, போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த வியாழக்கிழமை தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை சாதனை அளவுக்கு உச்சம் பெற்றிருந்தது.

இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் ஒருநாளில் அதிகபட்சம் 286 பேர் உயிரிழந்தனர்.

இந்த பிராந்தியத்தில் தினசரி 1,000 உயிரிழப்புகள் என்ற கட்டத்தை தாண்டி இருப்பதால் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவரும்படி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

SHARE