தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 2010, 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எந்தவொரு ஆசனத்தையும் பெறாது தோல்வி அடைந்தது.
அதேவேளை 2013ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல்களை புறக்கணித்தது. இந்நிலையில் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிடத்தக்களவு வெற்றியினை பதிவு செய்தது. அத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 85 ஆயிரத்து 198 வாக்குகளை பெற்றிருந்தது.
குறித்த தேர்தல் மூலம் யாழ்.மாநகர சபையில் கிடைக்கப்பெற்ற ஆசனங்கள் ஊடாக விகிதாசார அடிப்படையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகர சபை உறுப்பினரானார்.
மாநகர சபை உறுப்பினராக கட்சியினால் நியமிக்கப்பட்டு ஓரிரு மாதத்தில், யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவரை உறுப்பினராக தேர்ந்தெடுத்தமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல். எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் எனக் கோரி மாநகர சபை எல்லையில் வதியும் வாக்காளர் ஒருவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்தார்.
குறித்த மனு மீதான விசாரணைகளை அடுத்து மணிவண்ணன் சபை அமர்வுகளில் பங்கெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.
கட்சிக்குள் உட்பூசல்கள் ஆரம்பம்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வந்தன. இந்நிலையில் , 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அத்தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணன் போட்டியிட்டார். தேர்தல் பிரசார கால பகுதியில் மணிவண்ணனுக்கு கட்சிக்கும் இடையில் பூசல்கள் ஏற்பட்டன.
தேர்தல் காலத்தில் நீறு பூத்த நெருப்பாக கட்சி உட்பூசல் இருந்தது. தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 55ஆயிரத்து 303 வாக்குகள் கிடைக்கப்பெற்றன (2010ஆம் ஆண்டு தேர்தலில் 6ஆயிரத்து 362 வாக்குகள். 2015ஆம் ஆண்டு 15ஆயிரத்து 22 வாக்குகள்) அதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (31,658 வாக்குகள்) யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக அக்கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (24,794 வாக்குகள்) கட்சியினால் தெரிவு செய்யப்பட்டார். அத்தேர்தலில் மணிவண்ணன் 22,741 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
தேர்தல் காலத்தில் கட்சிக்கும் மணிவண்ணனுக்கு இடையில் காணப்பட்ட உட்பூசல்கள் தேர்தல் முடிவடைந்த பின்னர் பகிரங்கமானது. மணிவண்ணன் தரப்பு கஜேந்திரர் தரப்பு (நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்) பிரிந்து நின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஒரு தரப்பு மீது ஒரு தரப்பு குற்றம் சாட்டி விமர்சனங்களை முன் வைத்து கருத்து மோதல்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மணிவண்ணனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். அத்துடன் மணிவண்ணனுடன் சேர்ந்தவர்களையும் நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முடிவெடுத்தனர்.
மணிவண்ணனை நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மணிவண்ணன் மாநகர சபை உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என தொடர்ந்த மனுவை கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி மீள பெற்றுக்கொண்டார். அதனால் மணிவண்ணன் மீண்டும் மாநகர சபை உறுப்பினராக சபை அமர்வுகளில் கலந்து கொண்டார்.
அந்நிலையில் அப்போது மாநகர சபை முதல்வராக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவான இமானுவேல் ஆர்னோல்ட் 2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சபையில் சமர்ப்பித்த போது அது தோற்கடிக்கப்பட்டது. அதனால் ஆர்னோல்ட்டின் பதவி பறிபோனது.
அதனை அடுத்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி முதல்வர் தெரிவு இடம்பெற்றது. அதில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்னோல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து மணிவண்ணன் போட்டியிட்டார். அதில் ஒரு வாக்கு அதிமாக பெற்று மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.
மணிவண்ணனுக்கு ஆதரவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரும் (ஈ.பி.டி.பி.) வாக்களித்திருந்தனர். அதனை அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மணிவண்ணனை தோழர் எனவும் , ஈபி.டி.பி எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். சிலர் அநாகரிகமான விமர்சனங்களையும் முன் வைத்தனர்.
கடந்த வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் நாடாளுமன்றில் யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட குழு குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஈ.பி.டி.பி யின் ஆதரவு சபை தான் என்ற தொனி பட கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு இடையில் மணிவண்ணன் உள்ளிட்டவர்களை தாம் நீக்கி விட்டதாகவும் , அவர்களின் உறுப்புரிமையை நீக்குமாறும் தேர்தல் ஆணையகத்திடம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கோரியது. அதற்கு எதிராக மணிவண்ணன் தரப்பினால் யாழ்.மாவட்ட நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் மணிவண்ணன் உள்ளிட்டோரின் உறுப்புரிமையை நீக்க மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
அதனை எதிர்த்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாகாண குடியியல் மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். குறித்த மனு மீதான விசாரணையை அடுத்து மேன் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் உறுப்பினர்களாக நீடிக்கின்றனர்.
இந்த நிலையில் மணிவண்ணனின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த புதன்கிழமை யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எண்ணக்கருவில் மாநகர சபை புதிய குழு ஒன்றினை உருவாக்கியது.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் , ஒழுங்கு விதிகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறைகளை கண்காணித்தல் என்பவற்றுடன் , அவற்றை மீறுபவர்களுக்கு அவ்விடத்தில் தண்டப்பணம் அறவிடும் பணிகளை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த குழு உருவாக்கப்பட்டது.
மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் 5 பேர் அக்குழுவில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான புதிய சீருடைகளும் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த குழு தமது பணிகளை கடந்த புதன்கிழமை 7ஆம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் அக்குழுவினரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியது.
அக்குழுவின் சீருடை தமிழீழ விடுதலை புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்தது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சிலர் புலிகளின் மீள் உருவாக்கும் சிந்தனையில் சீருடைகள் அமைந்துள்ளன எனவும் , மணிவண்ணன் எதிர்ப்பு அணியினர் புலிகளின் காவல் துறையை கொச்சைப்படுத்தும் நோக்குடன் மணிவண்ணன் செயற்படுகின்றார் எனவும் கருத்துக்களை முன் வைத்தனர்.
அது மாத்திரமன்றி புலிகளின் காவல் துறையின் படங்களையும் , மாநகர சபையின் புதிய குழுவின் படங்களையும் ஒன்றாக இணைந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துக்களை முன் வைத்தனர்.
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு யாழ்.மாநகர ஆணையாளர் ஜெயசீலனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
அதன் பின்னர் குறித்த குழுவை சேர்ந்தவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களின் சீருடைகளை ஒப்படைக்குமாறு கோரி சீருடைகளை பெற்றுக்கொண்டனர்.
அந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 08ஆம் திகதி தென்னிலங்கை சமூக , இணைய ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களிலும் யாழ்.மாநகர சபை குழுவையும் , தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறையினரையும் ஒப்பிட்டும் , பொலிஸாரின் கடமைகளில் தலையீடு செய்யவே அக்குழு உருவாக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகின. அதனால் மாநகர சபையின் குழு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் சர்ச்சைகள் ஏற்பட்டன. குழு தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திலும் பேசப்பட்டன
அதேவேளை யாழ். மாநகர சபையின் குழு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து அக்குழு தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
அதன்போது, "கொழும்பு மாநகர சபையை முன்மாதிரியாக கொண்டே ஐந்து ஊழியர்களை கொண்ட குழுவை அமைத்து, மாநகர சபையின் தூய்மையையும், ஒழுங்கையும் பேண நடவடிக்கை எடுத்தோம். இந்த ஐந்து ஊழியர்களும் சபையில் ஊழியர்களாக செயற்பட்டவர்களே அவர்களையே இந்த விசேட பணிக்கு நாங்கள் நியமித்திருந்தோம்.
அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்போது மக்கள் அவர்களை இலகுவாக அடையாளம் காணவேண்டிய தேவை இருந்ததாலும், அவர்களுக்கு வேண்டத்தகாத பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக சீருடை ஒன்றையும் அறிமுகப்படுத்தி வழங்கியிருந்தோம்.
கொழும்பு மாநகர சபை பின்பற்றுகின்ற, பாவிக்கின்ற சீருடையையே நாங்களும் இந்த ஊழியர்களுக்கு வழங்குவதென யோசித்து அதே மாதிரியான சீருடையை வழங்கியிருந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமோ, திட்டமோ எங்களுக்கு இருக்கவில்லை. என தெரிவித்தார்.
அந்நிலையில் வியாழக்கிழமை இரவு 08 மணியளவில் யாழ்ப்பாண முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகிய இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சுமார் 06 மணி நேர விசாரணைகளின் பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபனை விடுவித்த பொலிஸார் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் முதல்வரை வெள்ளிக்கிழமை அதிகாலை 01.40 மணிக்கு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முதல்வரை உடனடியாகவே மேலதிக விசாரணைகளுக்கு என வவுனியாவாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
யாழ். மாநகரத்தின் தூய்மையை பேணும் நோக்குடன் அமைக்கப்பட்ட குழு ஒன்றின் சீருடை புலிகளின் காவல்துறையின் சீருடை போல் உள்ளது என சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணைய ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் வெளியான கருத்துக்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து முதல்வரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் புலிகளை மீள் உருவாக்க முனைந்தார் என குற்றம் சாட்டி கைது செய்திருப்பதனை தமிழ் அரசியல் வாதிகள் பலரும் கண்டித்து தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 15 மணி நேரங்களுக்கு மேலாக தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், மணிவண்ணனை தண்டனை சட்டக்கோவை பிரிவு 120, 132 மற்றும் 143 ஆகிவற்றின் கீழ் (கைது செய்தது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.
அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் பெண் சட்டத்தரணிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மணிவண்ணன் சார்பில் முன்னிலையாகி பிணை விண்ணப்பம் செய்தனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் பிணைக்கு ஆட்சேபணை தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் அடுத்து நீதவான் பொலிஸாரிடம் "பணியாளர்களிடம் சீருடைகளை கைப்பற்றி உள்ளீர்கள்தானே, அதில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் ஏதாவது பொறிக்கப்பட்டு இருந்தனவா? " என கேள்வி எழுப்பினார். அதற்கு பொலிஸார் இல்லை என பதில் அளித்தனர்.
அதனை அடுத்து நீதவான் மணிவண்ணனை 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதும் நீதிமன்றின் முன் கூடி இருந்த ஆதரவாளர்கள் மணிவண்ணனை கட்டித்தழுவி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
மணிவண்ணனின் அரசியல், கொள்கைகள் எவ்வாறு இருந்தாலும் மாநகரத்தை தூய்மையாக அழகாக மாற்ற யாழ். மாநகர முதல்வராக மணிவண்ணன் காத்திரமான பங்களிப்பை முன்னெடுக்க வேண்டும் என்பதே மாநகரத்திற்குள் வாழும் மக்களின் எதிர்ப்பார்ப்பு.
-மயூரப்பிரியன்-
