பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (ஏப்.,17) அதிகாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 59.
சென்னை, சாலிக் கிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று (ஏப்.,16) காலையில் பேசி கொண்டிருந்த போது, லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை வல்லுநர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் . அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
மருத்துவமனையில், உயிர் காக்கும், ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் 1961ம் வருடம் நவம்பர் 19ம் திகதி விவேக் பிறந்தார். அவருடைய இயற்பெயர் விவேகானந்தன். அவருக்கு அருள்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் வழங்கியதை பாராட்டி 2015ம் ஆண்டு கௌரவ கலாநிதிப் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் ஆதரவாக பல்வேறு கருத்துக்களை அவர் முன்வைத்து வந்தார்
Tags:
cinema news
