Friday 30 July 2021

தரப் பரிசோதனை: 39 மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு..!!!

SHARE





மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆந்திரத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்தும், கா்நாடகத்தில் தயாரிக்கப்பட்ட இரு மருந்துகளும் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 681 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 642 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, காய்ச்சல், தொண்டை அலா்ஜி பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 39 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோன்று கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும் தரமின்றி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
SHARE