Sunday 27 March 2022

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்..!!!

SHARE

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை டி வை பட்டில் ஸ்போர்ட்ஸ் அக்கடமி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட இப் போட்டியில் ஷாருக் கான், ஓடியன் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6 ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் பகிர்ந்த 52 ஓட்டங்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி றோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பவ் டு ப்ளெசிஸ் 57 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 88 ஓட்டங்களைக் குவித்தார்.

முதலாவது விக்கெட்டில் அனுஜ் ராவத்துடன் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த டு ப்ளெசிஸ், 2ஆவது விக்கெட்டில் விராத் கோஹ்லியுடன் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ராவத் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து கொஹ்லி, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இதில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார். கோஹ்லி 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முன்வரிசையில் மயான்க் அகர்வால் (32), ஷிக்கர் தவான் (43), பானுக்கு ராஜபக்ஷ (43) ஆகிய மூவரும் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றனர்.

இவர்களைத் தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டோன் (19), ராஜ் பவா ஆகியோர் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் கிங்ஸ் 14.5 ஓவர்களில் 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும் ஷாருக் கான் (24 ஆ.இ.), ஓடியன் ஸ்மித் (25 ஆ.இ.) ஆகிய இருவரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து பஞ்சாபின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அவர்களில் ஓடியன் ஸ்மித் 8 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்களையும் ஒரு பவுண்ட்றியையும் விளாசி ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.
SHARE