Sunday 27 March 2022

மும்பையை வீழ்த்தியது டில்லி கெப்பிட்டல்ஸ்..!!!

SHARE

மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் டில்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையில் மும்பை ப்ராபோன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்களால் டில்லி கெப்பிட்டல்ஸ் வெற்றியீட்டியது.

மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்திய இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் இஷான் கிஷான் கடைசிவரை துடுப்பெடுத்தாடி 48 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 81 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவர் ஆரம்ப விக்கெட்டில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார். ரோஹித் ஷர்மா 41 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களை விட திலக் வர்மா 22 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கலீல் அஹ்மத் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டில்லி கெப்பிட்டல்ஸ் 18.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

டில்லி கெப்பிட்டல்ஸ் 14 ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றுவிடும் என கருதப்பட்டது.

ஆனால், லலித் யாதவ், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து டில்லி கெப்பிட்டல்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தனர்.

லலித் யாதவ் 38 பந்துகளில் 48 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 17 பந்துகளில் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
SHARE