Thursday 21 April 2022

வடக்கின் போர் ஆரம்பம்..!!!

SHARE

யாழ். மத்தியக் கல்லூரி மைதானத்தில் இன்று (21) ஆரம்பித்திருக்கும் 115வது வடக்கின் பெரும் சமரில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள மத்தியக் கல்லூரி அணி விக்கெட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு வழங்கியது.

அதன் அடிப்படையில் களமிறங்கிய சென். ஜோன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சச்சின் கணபதி மற்றும் குகணேசன் கரிசன் ஆகியோர் நிதானமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். மதியபோசன இடைவேளையை விக்கெட்டிழப்பின்றி சென். ஜோன்ஸ் கல்லூரி கடக்க வாய்ப்பிருந்த போதும், 41 ஓட்டங்களை பெற்றிருந்த கரிசன் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

எனவே தங்களுடைய முதல் நாள் ஆட்டத்தின் மதியபோசன இடைவேளையின் போது, சென். ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரியின் சார்பில் சச்சின் கணபதி 20 ஓட்டங்களுடன் வெளியேற, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினர்.

யாழ். மத்தியக் கல்லூரியின் விநாயகசெல்வம் கவிதர்ஷன் மற்றும் ஜெயதீஷ்வரன் விதுசன் ஆகியோர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்த நிலையில், தேநீர் இடைவேளையின் போது சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 136 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தேநீர் இடைவேளையின் போதும், அதன் பின்னரும் அண்டன் அபிஷேக் சிறப்பாக ஓட்டங்களை குவிக்க துரதிஷ்டவசமாக தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்ய தவறி 40 ஓட்டங்களுடன் ரஞ்சித்குமார் நியூட்டனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அண்டன் அபிஷேக்கின் ஆட்டமிழப்பின் பின்னர் தங்களுடைய அனைத்து விக்கெட்டுகளையும் விரைவில் விட்டுக்கொடுத்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 84.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மத்தியக் கல்லூரியின் பந்துவீச்சில் அற்புதமாக செயற்பட்ட விதுசன் மற்றும் கவிதர்ஷன் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை பகிர்ந்துக்கொண்டனர்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள யாழ். மத்தியக் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது 3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி விக்கெட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்றுள்ளது. எனவே, சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு மத்தியக் கல்லூரி அணி 161 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுருக்கம்

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி – 167/10 (84.1), கரிஷன் 41, அபிஷேக் 40, கவிதர்ஷன் 41/3, விதுசன் 13/3, நியூட்டன் 50/1, கௌதம் 27/1
யாழ். மத்தியக் கல்லூரி – 6/0 (3), விதுசன் 5*

படங்கள் – ஐ.சிவசாந்தன்











































SHARE