Friday 10 June 2022

இந்துக்களின் பெரும் சமரில் சம பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகள்..!!!

SHARE

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 11ஆவது இந்துக்களின் போர் இன்றைய தினம் ஆரம்பித்தது.

இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டு திடலில் இந்த போட்டி சம்பிரதாய நிகழ்வுகளுடன் ஆரம்பித்தது.

போட்டியின் ஆரம்பத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, துடுப்பெடுத்தாடியது.

அதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக் குழாமில் இடம்பிடித்துள்ள கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசி கௌரவிக்கப்பட்டார்.

அதன்படி களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மதியபோசன இடைவேளையின்போது, T.சம்சனின் 70 ஓட்டங்களின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மதியபோசன இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரி அணிக்கு, கொழும்பு இந்துக் கல்லூரி பந்துவீச்சாளர் R. சகிதரன் மற்றும் அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் இணைந்து கடுமையான அழுத்தத்தை கொடுக்க தொடங்கினர்.

இதில் அணிக்காக அதிகமாக ஓட்டங்களை பெற்றிருந்த சம்சன் 77 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்த துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். L.பிரியந்தன் ஒரு பக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், தேநீர் இடைவேளையின் போது யாழ். இந்துக் கல்லூரி அணி 201 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

தேநீர் இடைவேளையின் பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரி அணிசார்பாக L.பிரியந்தன் அரைச்சதம் கடந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பாக R. சகிதரன் 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக R. டிலுக்ஷன் 34 ஓட்டங்களையும், R. சகிதரன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பிரகாசித்த யாழ். இந்துக் கல்லூரி அணித்தலைவர் T. கஜனாத் 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

சுருக்கம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 230/10, (59.3), சம்சன் 77, L.பிரியந்தன் 58, T.கிருஷ்ணாத் 30*, R. சகிதரன் 5/56
கொழும்பு இந்துக் கல்லூரி – 81/3, (28), டிலுக்ஷன் 34*, R. சகிதரன் 18*, T. கஜனாத் 1/25,

முதல் நாள் முடிவு – யாழ். இந்துக் கல்லூரி அணி 149 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை























SHARE