Friday 9 September 2022

இலங்கை அணி அபார வெற்றி..!!!

SHARE

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மோதி ஆசிய கிண்ண இருபதுக்கு -20 சுப்பர் 4 கடைசிப் போட்டி இரண்டு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முந்தைய ஒத்திகையாக அமைந்தன

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்கவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

3 விக்கெட்களை வீழ்த்திய வனிந்து ஹசரங்க 2 பிடிகளை எடுத்ததுடன் ஒரு ரன் அவுட்டிலும் பங்காற்றியிருந்தார். துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை துடுப்பெடுத்தாடியபோது முதல் இரண்டு ஓவர்களில் குசல் மெண்டிஸ் (0), தனுஷ்க குணதிலக்க (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். (2 - 2 விக்.)

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய சரித் அசலன்கவுக்கு பதிலாக அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட தனஞ்சய டி சில்வா 9 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றபோது இலங்கையின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் பானுக்க ராஜபக்ஷவும் 4ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நம்பிக்கை ஊட்டினர்.

பானுக்க ராஜபக்ஷ 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பெத்தும் நிஸ்ஸன்க 5ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தசுன் ஷானக்கவுடன் 33 ஓட்டங்களைப் பகர்ந்ததன் பலனாக இலங்கை வெற்றி இலக்கை அண்மித்தது.

தசுன் ஷானக்க 21 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டமிழந்த பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவும் வனிந்து ஹசரங்க டி சில்வாவும் வெற்றி இலக்கை அடைய உதவினர்.

பெத்தும் நிஸ்ஸன்க 55 ஓட்டங்களுடனும் வனிந்து ஹசரங்க டி சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் ஹஸ்நய்ன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

14ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அதன் பின்னர் கடைசி 7 விக்கெட்களை 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிஸ்வானும் அணித் தலைவர் பாபர் அஸாமும் 3.3 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

இந்த சுற்றுப் போட்டியில் திறமையாக விளையாடிவந்த ரிஸ்வான் இன்றைய போட்டியில் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து பாபர் அஸாமுடன் 2ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த பக்கார் ஸமான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாபர் அஸாம் 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார். (68 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது குஷ்தில் ஷா 4 ஓட்டங்களுடன் களம்விட்டகன்றார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

மததிய வரிசையில் இப்திகார் அஹ்மத் (13), மொஹமத் நவாஸ் (26) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 2 விக்கெட்களையும் அறிமுக வீரர் ப்ரமோத் மதுஷான் 2.1 ஓவர்களில் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். மூவரும் தலா 21 ஓட்ங்களைக் கொடுத்திருந்தனர்.

இலங்கையும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் ஆசிய சம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதவுள்ளன.
SHARE