Tuesday 6 September 2022

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை..!!!

SHARE

நடப்பு சம்பியன் இந்தியாவுக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற மிகவும் தீர்மானமிக்க ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

சுப்பர் 4 சுற்றில் 2 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றுள்ள போதிலும் அதன் இறுதிப் போட்டி வாய்ப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வெற்றிகொண்டால் இலங்கையும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் மற்றைய 2 போட்டிகளின் முடிவுகளை வைத்தே இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவாகும்.

இப் போட்டியில் கட்டாய வெற்றியை இலக்கு வைத்து இந்திய துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்ட போதிலும் பந்துவீச்சாளர்கள் இறுதியில் கோட்டை விட்டனர்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

டில்ஷான் மதுஷன்க, சாமிக்க கருணாரட்ன ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் சகலதுறை ஆட்டம், பெத்தும் நிஸ்ஸன்க, குசல மெண்டிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், பானுக்க ராஜபக்ஷவின் சிறந்த துடுப்பாட்டம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து இந்தியாவுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர்.இந்த இணைப்பாட்டம் இவ்வருட ஆசிய கிண்ணத்தில் அதிசிறந்த ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக பதிவானது.

பெத்தும் நிஸ்ஸன்க 37 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டமிழந்தார்.

பெத்தும் உட்பட 4 விக்கெட்கள் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தமை இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தது,

சரித் அசலன்க (0), தனுஷ்க குணதிலக்க (1) ஆகிய இருவரும் வந்த வேகத்திலேயே களம் விட்டகன்றனர். (110 – 3 விக்,)

இதே மொத்த எண்ணிக்கையில் குசல் மெண்டிஸும் ஆட்டமிழந்தார்.
அவர் 37 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 5 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த பானுக்க ராஜபக்ஷ, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்திய பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

ரோஹித் ஷர்மா குவித்த அபார அரைச் சதமும் சூரியகுமார் யாதவ்வின் ஓரளவு திறமையான துடுப்பாட்டமும் இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு வலுசேர்த்தன.

முதல் 3 ஓவர்களுக்குள் கே.எல். ராகுல் (6), விராத் கோஹ்லி (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 13 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 3ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். (110 – 3 விக்.)

ரோஹித் ஷர்மா 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 10 ஓட்டங்கள் சேர்ந்தபோது சூரியகுமார யாதவ் 34 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

ஹார்திக் பாண்டியா (17), ரிஷப் பன்ட் (17), ரவிச்சந்திரன் அஷ்வின் (15 ஆ.இ.) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

இலங்கை பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 4 ஒவர்களில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்து வீச்சுப் பெறுதியை சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் பதிவுசெய்தார்.

அவரைவிட சாமிக்க கருணாரட்னவும் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: தசுன் ஷானக்க.
SHARE