Showing posts with label Jaffna News. Show all posts
Showing posts with label Jaffna News. Show all posts

Wednesday, September 21, 2022

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம் - யாழில் சம்பவம்..!!!

போதைப்பொருளுக்கு எதிரான ஆசிரியைக்கு உடன் இடமாற்றம் - யாழில் சம்பவம்..!!!


யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் , போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த மாணவன் ஒருவனை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பிய ஆசிரியை ஒருவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தனது விசனத்தை வெளியிட்டார் .

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இடம்பெற்ற , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது :

அண்மையில் பண்டதரிப்புப் பகுதியில் மாணவர் ஒருவர் போதைப் பாவனைக்கு அடிமையாகியமை ஆசிரியை ஒருவரால் அடையாளங்காணப்பட்டது.
உடனடியாக சாவகச்சேரியில் உள்ள மறுவாழ்வு சிகிச்சை நிலையத்துக்கு குறித்த ஆசிரியரால் அந்த மாணவன் அனுப்பப்பட்டுள்ளார் .

இந்த நிலையில் , குறித்த பாடசாலையின் அதிபர் பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில், குறித்த ஆசிரியை இடமாற்றலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த ஆசிரியை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சென்று முறையிட்டுள்ளார் - என்றார்.


யாழில் 3 பாடசாலை வீதிகள் ஒருவழிப் பாதையாகின்றன..!!!

யாழில் 3 பாடசாலை வீதிகள் ஒருவழிப் பாதையாகின்றன..!!!


யாழ்.ஆரோக்கிய நகரத்திட்டத்தின் கீழ் 3 பாடசாலை வளாக வீதிகள் தெரிவுசெய்யப்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதை வீதிகளாக நடைமுறைப்படுத்தி துவிச்சக்கரவண்டிப் பாவனைக்கென மாத்திரம் விடப்படவுள்ளது என யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:

யாழ்.ஆரோக்கிய நகரத்திட்டத்தின் கீழ் சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கவும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடனும் பல்வேறு அரச மற்றும அரச சார்பற்ற பங்குதாரர்களின் ஆதரவுடன் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதன்படி யாழ்.இந்துக்கல்லூரி மற்றும் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப்பாதையாக குறிப்பிட்ட நேரத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதாவது பாடசாலை வேளைகளான காலை 6.45 மணிமுதல் 8 மணிவரையும் பின் பிற்பகல் ஒரு மணிமுதல் 2 மணிவரையும் இவ்வாறு துவிச்சக்கரவண்டி பாவனைக்கென ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுகின்றது.

இதன்போது பின்வரும் 3 வழிமுறைகளை மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்.

முதலாவது வழிமுறையாக கஸ்தூரியார் வீதி ஒரு வழிப்பாதையாகக் கொண்டுவரப்படுகின்றது. அரசடி வீதியிலிருந்து கஸ்தூரியார் வீதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியை (roundabout) அடைந்து வலது பக்கமாக கல்லூரி வீதிக்குள் திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது கே.கே.எஸ். வீதியிலிருந்து சுற்றுச்சந்தி வரையான கல்லூரி வீதி ஒரு வழிப்பாதையாக கொண்டுவரப்படுகின்றது. இங்கு கே.கே.எஸ் வீதியிலிருந்து யாழ். இந்துக்கல்லூரி நுழைவாயிலை அடையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியை அடைந்து வலது மற்றும் நேரான வீதிகளினூடாக வெளிச் செல்ல முடியும்.

மூன்றாவதாக கல்லூரி ஒழுங்கை துவிச்சக்கரவண்டிப்பாவனைக்கு மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பனவாகும்.

இந்தத் திட்டமானது பாதுக்காப்புமிக்க வீதிகளை பாடசாலைச் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி வழிமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் குறிப்பிட்ட வீதிகளில் இன்றுமுதல் வைக்கப்படும்– என்றுள்ளது.










யாழில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது..!!!

யாழில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது..!!!



யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் "சாதா" எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடையில் சோதனையிட்ட போது ஒரு தொகை சாதா எனும் போதை பொருளை கைப்பற்றினர்.

அதனை அடுத்து கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Tuesday, September 20, 2022

நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடியவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!!

நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடியவருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!!


யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு செய்தவரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பனின் ஏரிஎம் அட்டையை திருடி 30 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார்.

அது தொடர்பில் ஏரிஎம் அட்டையின் உரிமையாளரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்திய போது , வழக்கினை விசாரணை செய்த நீதவான் சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.


வீதியில் நடந்துசென்றவரை கத்தியால் வெட்டி பணம், நகை கொள்ளை - யாழில் சம்பவம்..!!!

வீதியில் நடந்துசென்றவரை கத்தியால் வெட்டி பணம், நகை கொள்ளை - யாழில் சம்பவம்..!!!


யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டிக்காயப்படுத்திய பின்னர் நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு , தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடை மறித்து , கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.


Monday, September 19, 2022

வடமாகாணத்தில் துரிதமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனை..!!!

வடமாகாணத்தில் துரிதமாகப் பரவிவரும் போதைப்பொருள் பாவனை..!!!



போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,
போதைப்பொருள் பாவனை பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்தியசாலைகள் வளாகங்ககளினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது. காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது. போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன. போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம். போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம்.போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்.
போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.

போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்தல், மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

இதனை நிறைவேற்றுவதில் வைத்தியர்களாகிய எமக்குள்ள தார்மீகக் கடைமையை உணர்ந்துள்ள நாம், தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது ஏனைய அனைத்துப் பொறிமுறைகளினூடும் எமது நேரடியான பங்களிப்பை நல்குவதென்னும் தீர்க்கமான முடிவினை மேற்கொண்டுள்ளோம். இதற்கு அனைத்து பொறுப்புமிக்க அதிகாரிகள், பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மேலான ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.



நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உருவானது..!!!

நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உருவானது..!!!


தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(17)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்றைய தினமர இடம்பெற்றது.

கடந்த கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கான அழைப்பாளர் குழு தெரிவு செய்யப்பட்டநிலையில் அந்தக் குழு, கலந்துரையாடலில் பங்கேற்காத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நினைவேந்தலை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டநிலையில், மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


யாழ்.நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் மகாராணியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு..!!!

யாழ்.நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் மகாராணியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு..!!!


யாழ்ப்பாணம் - நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்களது சேவைகளைப் பாராட்டி 1953ஆம் ஆண்டு பிரித்தானியாவின் 2ஆம் எலிசபெத் மகாராணியாக முடிசூட்டு விழாவின் போது பாராட்டுப் பத்திரமும் வெள்ளிப்பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து எலிசபெத் மாகாராணிக்கு மேற்படி பாடசாலையில் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி உரையை ஆற்றியிருந்தார்.












மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின்வெட்டு நேரம்..!!!

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின்வெட்டு நேரம்..!!!



இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.



Sunday, September 18, 2022

உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்தன..!!!

உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்தன..!!!


உடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக எரிந்து கருகியுள்ளன.

யாழ்ப்பாணம் தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினை சூழ பனை மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.

பனை மரங்கள் திடீரென தீ பற்றி எரிவதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையை அடுத்து , அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டமையினால் , தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும் , அதனால் அயலில் இருந்த தென்னம் தோட்டம் மற்றும் மேலும் பல பனை மரங்கள் தீயினால் அழிவடைந்திருக்கும் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

குறித்த தீயினால் 20 பனை மரங்கள் எரிந்து கருகியுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்..!!!

தேசிய சாதனை படைத்துள்ள யாழ்ப்பாணத்தின் வீரர்..!!!



அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு நடாத்தப்படுகிற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகளின், கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.15M உயரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 5.11 மீட்டர் உயரத்தைத் தாவிய இலங்கை விமானப்படை வீரர் இஷார சந்தருவன் நிலைநாட்டிய ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் தேசிய சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார்.

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் அண்மைக்காலமாக தேசிய ரீதியில் பல வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்து வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான அருந்தவராசா புவிதரன், எதிர்காலத்தில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச போட்டிகளில் சாதிக்க வாழ்த்துகிறேன்.



ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்..!!!

ஹெரோயினின் பிடியில் யாழில் 20 கிராமங்கள்..!!!


உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயினைப் பயன்­ப­டுத்­திய 10 பேர் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ள­னர். இதற்கு அடி­மை­யான 320 பேர் வரை­யில் யாழ்ப்பாணம் சிறைச்­சா­லை­யில் மறி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்­கும் நிலை­யம் திறக்­கப்­பட்டு, இரண்டு மாதங்­க­ளுக்­குள் 134பேர் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும், யாழ். மாவட்­டத்­தில் 20 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பல­ரும் ஹெரோயின் பாவ­னைக்கு முற்­றாக அடி­மை­யா­கி­யுள்­ள­னர் என்ற அதிர்ச்சித் தக­வ­லும் வெளி­வந்­துள்­ளது. ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளில் அதி­க­மா­னோர் 18 – 23 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்­ப­து­டன், யாழ். நக­ரி­லுள்ள பிர­பல பாட­சா­லை­க­ளின் மாண­வர்­க­ளும் இதற்­குப் பழக்­கப்­பட்­டுள்­ள­னர் என்ற உண்­மை­யும் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

கொரோனா, பொரு­ளா­தார நெருக்­கடி எனப் பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் யாழ். குடா­நாட்­டில் உயிர்க்­கொல்­லிப் போதைப் பொரு­ளான ஹெரோயின் பயன்­பாடு பல்­கிப் பெரு­கி­யுள்­ளது.

கொழும்­பி­லி­ருந்து தொடர்ச்­சி­யாக உயிர்க்­கொல்­லி ஹெரோயின் யாழ்ப்­பா­ணத்­துக்கு கொண்டு வரப்­ப­டு­கின்­றது. இங்­குள்ள பல நூற்­றுக்­க­ணக்­கான முக­வர்­கள் ஊடாக அவை குடா­நாட்­டின் சகல பகு­தி­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன.

உயிர்­கொல்லி ஹெரோயினை ஊசி மூலமே அதி­க­ள­வா­னோர் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்­கம் 300 மில்லி கிராம் வரை­யில் நுகர்­கின்­ற­னர்.

18 – 23 வய­துக்­கும் இடைப்­பட்ட இளை­ஞர்­களே உயிர்க்­கொல்­லி போதைப் பொரு­ளான ஹெரோயினை அதி­க­ள­வில் நுகர்­கின்­ற­னர். இத­னைத் தவிர பாட­சாலை மாண­வர்­க­ளும் நுகர்­கின்­ற­னர். ஹெரோயின் நுக­ரும் பெரும்­பா­லான இளை­ஞர்­க­ளின் பெற்­றோர் இது தொடர்­பில் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்து தாமே தமது பிள்­ளை­களை பொலி­ஸில் ஒப்­ப­டைக்­கின்ற சம்­ப­வங்­க­ளும் இடம்­பெ­று­கின்­றன. சில பெற்­றோர் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

‘எவ்­வ­ளவு காலம் சென்­றா­லும் பர­வா­யில்லை. இவனை நீங்­கள் வைச்­சி­ருங்கோ. வெளி­யில விட்­டால் பெரிய பிரச்­சினை’ என்று தெரி­வித்து தாய் ஒரு­வர் அண்­மை­யில் தனது மகனை மருத்­து­வ­ம­னை­யில் ஒப்­ப­டைத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யான சுமார் 320 பேர் வரை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர். உயிர்­கொல்லி ஹெரோயி­னுக்கு அடி­மை­யா­ன­மை­யால் பல்­வேறு குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்டு கைதா­ன­வர்­க­ளும் இதற்­குள் உள்­ள­டங்­கு­கின்­ற­னர்.

உயிர்க்­கொல்­லி போதை­யான ஹெரோயின் பாவ­னைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் தொடர்ந்­தும் யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­வ­தால், யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் விசேட சிகிச்­சைப் பிரிவு இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு இது­வரை 134 பேர் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

யாழ். மாவட்­டத்­தில் சுமார் 20 கிரா­மங்­கள் ஹெரோயின் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளின் கூடா­ர­மாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது. இந்­தக் கிரா­மங்­க­ளி­லுள்ள இளை­ஞர்­க­ளில் அநே­கர் இத­னைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­மை­யும் பல்­வேறு தரப்­புக்­கள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.

தொடர்ச்­சி­யாக யாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துச் செல்­லும் இந்­தப் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முறை­யான வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சி­யல் தலை­வர்­கள், மதத் தலை­வர்­கள், சிவில் சமூ­கத்­தி­னர் முன்­வ­ர­வேண்­டும் என்று சமூக ஆர்­வ­லர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.


Saturday, September 17, 2022

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை..!!!

திருக்கோணேஸ்வரம் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை..!!!


திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.




முழுமையான பொதுக்கட்டமைப்பை உருவாக்க பஷீர் காக்கா தலைமையில் குழு..!!!

முழுமையான பொதுக்கட்டமைப்பை உருவாக்க பஷீர் காக்கா தலைமையில் குழு..!!!


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு முன்னதாக பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்கி அதன் ஊடாக நிகழ்வு ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி,மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் , அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் , யாழ்ப்பாண மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், மூத்த முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் பெற்றோர்கள் , என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். " அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பாக இது உருவாக வேண்டும். அரசியல்வாதிகள் தமது அரசியலுக்கு அப்பால் இக் கட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட வேண்டும்" என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது.

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்து பகிர்வுகளை தொடர்ந்து முதல் கட்டமாக பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவதற்காக மாவீரர்களின் தந்தையும் மூத்த போராளியான பஷீர் காக்கா தலைமையில் மூத்த போராளிகள் , பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது எதிர்வரும் நாட்களில் மதகுருமார்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் , பொது அமைப்புக்கள் , என அனைத்து தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு பொதுக்கட்டமைப்பின் உருவாக்கம் , அதன் நோக்கம் , எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பில் எடுத்துக்கூறி அவர்களையும் ஒன்றிணைத்து முழுமையான பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.


வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதிகள் போராட்டத்தினை இடைநிறுத்தியுள்ளனர்..!!!

வடக்கு ஆளுநரின் உறுதிமொழியை அடுத்து அரசியல் கைதிகள் போராட்டத்தினை இடைநிறுத்தியுள்ளனர்..!!!


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வாக்குறுதிக்கமைய போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகளான அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடி, விரைவில் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்ததை சிறையில் தமது உறவுகள் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு ஆதரவாக யாழில் தாங்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் கைவிடுவதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர் .

ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொலைபேசி வாயிலாக உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதிகளுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமாவதை கருத்திற்கொண்டு தகுந்த வாக்குறுதியை அவர்களுக்கு வழங்கி உணவுத் தவிர்ப்பை முடிவுறுத்தி பிணையிலோ பொதுமன்னிப்பிலோ விடுதலை செய்யுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.