Showing posts with label cinema news. Show all posts
Showing posts with label cinema news. Show all posts

Tuesday, November 30, 2021

உதயநிதி படத்தில் வடிவேலு?

உதயநிதி படத்தில் வடிவேலு?


காமெடியில் பட்டாஸாக வெடிக்கத் தொடங்கி அணுகுண்டாக அதகளம் செய்து கொண்டிருந்தவர் வடிவேலு. கடைசியாக 2017-ல் விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்தார். இப்படம், இவருக்கு மிகப்பெரிய ரீ-எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடிவேலுவுக்கு பெரிதாக இப்படம் கைகொடுக்கவில்லை.

சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படமும் இல்லையென்றாகிவிட்டது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைவதாக கூறப்பட்ட செய்தியும் பொய்யாகிவிட்டது. இறுதியாக, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதி படத்தில் வடிவேலு சாத்தியமா எனும் கேள்வி எழலாம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் ஒன்றிரண்டாக வந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்குப் பின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் வடிவேலு. உதயநிதியுடனான நட்பும் இன்று வரை வடிவேலுவுக்குத் தொடர்கிறது.

அதனடிப்படையில், உதயநிதி படத்தில் வடிவேலு நடிப்பதில் அதிகளவில் சாத்தியம் இருப்பதாகவே சொல்கிறார்கள். மாரிசெல்வராஜ் படமொன்பதால் காமெடியனாக மட்டுமில்லாமல், நல்ல குணச்சித்திர கதாபாத்திரத்தில் வடிவேலுவை எதிர்பார்க்கலாம். முன்னதாக, உதயநிதி தயாரித்த ஆதவன் படத்தில் நடித்திருந்தார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு சர்வதேச விருது..!!!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு சர்வதேச விருது..!!!


எகிப்தில் நடைபெற்று வரும் 43ஆவது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்.

ரஜினியின் முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

தேசிய விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ள அவர் "ஸ்லம் டாக் மில்லியனியர்" என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்து உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் "பத்ம பூஷன்" விருது பெற்றார்.

இந்த நிலையில் இன்னொரு சர்வதேச அங்கீகாரமாக எகிப்தில் நடைபெற்று வரும் 43-வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Sunday, November 28, 2021

‘ஜெயில்’ படத்துக்குத் தடை கோரி வழக்கு..!!!

‘ஜெயில்’ படத்துக்குத் தடை கோரி வழக்கு..!!!


கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஒடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமைகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு வழங்கி அக்டோபர் மாதம் 24ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ஜெயில் படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அது தவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஒட்டுமொத்த விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்ட விரோதமாகப் படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று முன்தினம் (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் இரட்டை ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் கையெழுத்தான பின் ஒப்பந்த அடிப்படையில் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பது போன்ற சம்பவங்கள் நிறைய உண்டு. 

ஜெயில் பட ஒப்பந்தத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தபோது, 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது உண்மை. ஆனால், இரண்டு விஷயங்களில் ஸ்டூடியோ கிரீன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. ஒன்று, அந்த ஒப்பந்தப்படி படத்தின் விலை எட்டு கோடி ரூபாய். அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்ட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஒரு ரூபாய் கூட முன்பணம் தரவில்லையாம். ஒவ்வொரு உரிமையும் விற்பனை ஆகும்போது படிப்படியாகப் பணம் தருவதாகச் சொன்னார்களாம். இரண்டாவது, டிசம்பர் 9ஆம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்று சொன்னதை முதலில் ஒப்புக்கொண்டு அதன்பின் 2022 ஜனவரி மாதம் பொங்கலின்போது வெளியிடலாம் என்று கூறியுள்ளார்கள். இவ்விரண்டு விஷயங்களும் ஜெயில் படத் தயாரிப்பாளருக்கு ஒத்துவராததால் எஸ்.எஸ்.ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம். அவர்கள் மூன்றரை கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு டிசம்பர் 9ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவித்து விட்டார்கள். ஸ்டூடியோ கிரீன் தொடர்ந்துள்ள வழக்குக்கு உரிய பதிலை, உண்மையை நீதிமன்றத்தில் சொல்வோம் என்கின்றனர் தயாரிப்பு தரப்பில்.

வில்லனை பாராட்டிய ரஜினி..!!!

வில்லனை பாராட்டிய ரஜினி..!!!


நவம்பர் 25ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ள மாநாடு படம் திரைக்கு வந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் இரண்டு நாளில் ரூ.14 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தும் மாநாடு படத்தைப்பார்த்து விட்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இயக்குநர் வெங்கட்பிரபு, சிலம்பரசன்,எஸ்.ஜே.சூர்யா ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
 
இதுகுறித்த தகவலைத் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள எஸ்.ஜே. சூர்யா, இன்று எனது நடிப்புத்திறமைக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்களின் அன்பான வாழ்த்து எனது சினிமா பயணத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்..!!!

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்..!!!


பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் இன்று(28) காலமானார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவசங்கரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முன்வந்தனர்.

இந்நிலையில் இன்று(28) சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.