Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts
Monday, February 6, 2023
தாவடியில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, மோட்டார் சைக்கிள் - ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் மிகை வேகத்தில் பயணித்ததாகவும் அதில் 2வதாக வந்த மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞன் உயிரிழந்த நிலையில், ஜெயசீலன் ரகுசான் (வயது 17) என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞனுக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Sunday, February 5, 2023
எரிவாயு விலை அதிகரிப்பு..!!!
இன்று (05) முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இதன் புதிய விலை 4,743 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 134 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் புதிய விலை 883/= ரூபாவாகும்.
Saturday, February 4, 2023
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு; கரிநாளாக பிரகடனம்..!!!
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சியினை வழங்குமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இன்று பாரிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பேரணி ஆரம்பமாகி பல்கலைக்கழக நுழைவாயிலை சென்றடைந்த போது, பொலிஸாரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், பொலிஸாரின் தடையையும் மீறி பேரணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறை வீதியூடாக யாழ். முற்ற வெளியை அடைந்த பேரணி அங்கிருந்து கிளிநொச்சிக்கான பயணத்தை ஆரம்பித்தது.
இன்று ஆரம்பமான இந்த பேரணி எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.
இதனிடையே, இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் 'தமிழருக்கு இருள் நாள்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் காந்திய அடிப்படையில் அஹிம்சையாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் வெள்ளைத் தொப்பிகளை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சியின் உறுப்பினர்களால் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேரணியாக கல்லடி பாலத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர்க் கந்தன் ஆலய நெற்புதிர் அறுவடை விழா..!!!
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(04) காலை இடம்பெற்றது .
தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் . அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன .அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இப் புதிர் விழா 289 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது .
படங்கள்: ஐ.சிவசாந்தன்