வடமாகாண சுற்றுலாப் பணியகமும் தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலா தினம் இன்று (29.09.2023) காலை 9.00மணிக்கு யாழ்.இந்திய கலாசார மையத்தில் இடம்பெற்றது.
காலை, மாலை என திட்டமிடப்பட்ட இந் நிகழ்வில் காலையில் வடமாகாணத்தைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழிற் சந்தையும் மாலை நிகழ்வுகளாக மான் ஆட்டம்,மயில் ஆட்டம், வசந்தன் ஆட்டம், வீணை இசைக் கச்சேரி என்பனவும் இடம் பெற்றன.
மேலும் உள்ளூர் உற்பத்திகளான அழகு சாதனப் பொருட்கள் சமையலறைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் ,துணிப் பொருட்கள் ,தோல் பொருட்கள்,கிருமி நீக்கிகள் சலவைத் திரவங்கள் ,கடதாசிகளில் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு என்பனவும் விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் பாரம்பரிய உணவு வகைகளாக அல்லை விவசாயியின் குரக்கன் கூழ் இலைக்கஞ்சி என்பனவற்றுடன் அம்மாச்சி உணவகத்தின் அப்பம் மரக்கறி கூழ் கட்லட் போன்றனவும், பல்வேறு உணவு தயாரிப்புக்களும் காட்சிக் கூடங்களை அ லங்கரித்தன.
குறித்த நிகழ்வு பற்றி பெண்மணி ஒருவர் கூறுகையில்
"பைகளில் அடைக்கப்பட்ட சில உணவுகளை வாங்கும் போது கவனம் தேவை. சிலவற்றை சாப்பிட்டு பார்த்து வாங்கலாம். சிலவற்றை பார்த்து வாங்க முடியாது. அதனால் வாடிக்கையாளர் நாம் ஏமாறுகின்றோம்.
கடந்த முறை கண்காட்சியில் நூறு ரூபா படி 7 கஜு பிஸ்கட் வாங்கினோம். அவை முடிவுத் திகதி திகதி முடிவடைந்துள்ளது.அதன் மேல் புதிய லேபல் ஒட்டி விற்பனை செய்துள்ளனர். அதே போன்று உள்ளி ஊறுகாய் நெத்தலி ஊறுகாய் போன்றன ஒரு வருடத்திற்கான திகதியிடப்பட்டு இருந்தும் அவை தரமற்றதாகவே இருந்தது.நாம் எம்மவர்களை ஊக்குவிக்கவே விரும்பி வாங்கினோம்.ஆனால் ஏமாந்தோம்.
அதனால் இம்முறை வற்றல் பொருட்களை கொள்வனவு செய்தோம். கூழ் வகை இலைக்கஞ்சி பனங்காப் பணியாரம் பாணிப்பூரி சாப்பிட்டோம். சில உடன் உணவுகள் சூடாக உண்பதற்கு ஏற்ற வகையில் காற்று விடவில்லை. காஸ் அடுப்பு அடிக்கடி அடுப்பு அணைந்து கொண்டிருந்தது. இப்படி சிலவற்றை சொல்ல முடியும்.
ஆயினும் இந்த வாரம் முற்றவெளிப் பண்ணைப் பக்கத்திலும் யாழ் பல்கலையிலும் உணவுத் திருவிழா இடம்பெற்று வருகின்றது. எம்மவர்கள் தயாரிப்பிலும் சுத்தத்திலும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றேன் என்றார். அதிகம் இளைஞர்கள் ஆவலுடன் இந்நிகழ்வில் பங்குபற்றி வருவதனை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி