Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

Wednesday, May 25, 2022

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 21 பேர் பலி..!!!

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 21 பேர் பலி..!!!


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகினர்.

அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

18 வயதான ஒருவரினால் நேற்றைய தினம் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தரங்களில் கல்வி கற்ற 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில், சந்தேகநபர் கொல்லப்பட்டார்.

அவர், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, May 22, 2022

ஆஸ்திரேலிய தேர்தல்! ஆச்சரிய முடிவுகளில் சில அபூர்வ தகவல்கள்..!!!

ஆஸ்திரேலிய தேர்தல்! ஆச்சரிய முடிவுகளில் சில அபூர்வ தகவல்கள்..!!!


ஆஸ்திரேலியாவின் 47 ஆவது நாடாளுமன்றத்திற்காக நடைபெற்ற தேர்தலில், லேபர் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் எல்லா தேர்தல்களும் போல் அல்லாமல், சில அபூர்வமான நிகழ்வுகள் இம்முறை நடந்தேறியிருக்கின்றன. தொகுதி வாரியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களின் வழியாக இந்த தகவல்களின் பின்னணி –ஆஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் தமிழர் ஒருவர். அவர் பெயர் திருமதி மிஷேல் ஆனந்தராஜா. மெல்பேர்னின் தொகுதியில் போட்டியிட்டவர். தொழில் ரீதியான மருத்துவரான இவர், கோவிட் தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ரா-செனிக்காவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டதால், கடுமையான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்தவர். 1972 ஆம் ஆண்டு முதல், உடைக்கமுடியாத லிபரல்களின் கோட்டை எனப்பட்ட ஹிக்கின்ஸ் தொகுதியை, லேபர்களுக்காக வென்று கொடுத்ததன் மூலம், வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார் மிஷேல் ஆனந்தராஜா. மெல்பேர்னில் மிக முக்கிய தொகுதிகளில் – இம்முறை தேர்தலில் – லிபரல்களை அடித்துக் கலைத்த பெண் வேட்பாளர்களில் மிக முக்கியமான வெற்றியைப் பெற்றவர் மிஷல் ஆனந்தராஜா என்பது குறிப்பிடத்தகது.

மெல்பேர்னின் “அஸ்ரன்” தொகுதியில் போட்டியிட்ட லிபரல்களின் நம்பிக்கை நட்சத்திரம் அலன் டட்ஜ், ஆச்சரியமாக மீண்டும் வென்றிருக்கிறார். லிபரல் கூட்டணி அரசில் பல்-கலாச்சார அமைச்சராகப் பதவி வகித்த இவர், தன்னோடு பணிபுரிந்த பெண் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கடந்த டிசெம்பர் மாதம், அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். விசாரணைகள் முடியும்வரைக்கும் தான் பின்வரிசை உறுப்பினராகவே இருப்பதாகச் சொன்னார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற பெண், தொலைக்காட்சியில் பேட்டிகொடுத்து, அழுது புலம்பினார். கடைசியில் அவருக்கு ஐந்து லட்சம் டொலர்கள் பணம் கொடுத்து, சமரசம் செய்துவிட்டதாக வந்த செய்தியுடன், அந்தப் பெண்ணின் சத்தத்தையும் ஊடகங்களில் காணவில்லை. இவ்வளவு, சிக்கல்களின் பின்னணியில் இம்முறையில், அலனுக்கு ஆப்பு நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்பேர்ன் எங்கும் ஏனைய லிபரல்களுக்கு மக்கள் கலைத்துக் கலைத்து அடிகொடுத்தபோதும், அஸ்ரன் தொகுதியில் அலனை, தொகுதி மக்கள் வாரி அணைத்திருக்கிறார்கள்.

மெல்பேர்னில் “ஸ்கலின்” தொகுதியில் லேபர் கட்சியில் போட்டியிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த விரோஷ் பெரேரா படுதோல்வியடைந்தாலும் தொகுதியில் கிட்டத்தட்ட – 32 வீதமான – 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்றியிருக்கிறார். இவர் கட்டட விற்பனைத்துறையில் பெரும் தொழிலதிபர் என்று பீலா விட்டுக்கொண்டு திரிகிறார் என்று அண்மையில், ஆஸ்திரேலிய ஊடகமொன்று ஆதாரங்களுடன் தாறுமாறாகக் கிழித்தது. இருந்தாலும், தான் நிச்சயம் வெல்லுவேன் என்று சூளுரைத்திருந்தார். மெல்பேர்னின் வடக்கு பகுதியான ஸ்கலின் தொகுதி, ஏகப்பட்ட தமிழர்கள் செறிவாக வாழும் பிரதேசம். இறுதியில், இவருக்கான தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இம்முறை தேர்தலில் – மெல்பேர்னின் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் டன்டிநொங் பிரதேசத்தை உள்ளடக்கிய “ஹோல்ட்” தேர்தல் தொகுதியில் சுவாரஸ்யமாக போட்டியொன்று இடம்பெற்றது. அதாவது, முன்னணி வேட்பாளர்கள் இருவருமே சிறிலங்கர்கள். ஒருவர் லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கஸன்ட்ரா பெர்னாண்டோ. சிறிலங்காவிலிருந்து 11 வயதில் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். இவரை எதிர்த்து லிபரலில் இன்னொரு சிறிலங்கரான ரஞ்ச் பெரேரா நிறுத்தப்பட்டார். இருவருக்குமான இறுக்கமான போட்டியில் கஸண்ட்ரா 8614 வாக்குகளால் ரஞ்ச் பெரேராவைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கிய இந்தியத் தமிழர் ரவி ரகுபதி வெறும் 1972 வாக்குகளைப் பெற்று அடிவாங்கிக்கொண்டார்.

மெல்பேர்னிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தியர்களின் குடிவரவு அதிகமானதையடுத்து, இம்முறை இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வேட்பாளர்களை இரண்டு பிரதான கட்சிகளும் முன் நிறுத்தின. ஆனால், அநேக இடங்களில் அவர்கள் அடி வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இம்முறை தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்துள்ள பாடம் அடுத்தடுத்த தேர்தல்களின் சரியாக அரசியல் அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடும். விக்டோரியாவின் “கொரியோ” தொகுதியில் லிபரல் ஆசனத்துக்கு இறக்கப்பட்ட மனீஷ் பட்டேல், “ல ட்ரோப்” தொகுதியில் லேபர் ஆசனத்துக்கு இறக்கப்பட்ட அபிமன்யூ குமார், “மரிபனொங்” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறக்கப்பட்ட மிரா டி சில்வா, “லேலூர்” தொகுதியில் லிபரல் சார்பில் களமிறக்கப்பட்ட ரவி கதிபதி, “ஹோதம்” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறங்கிய சாவித்ரி பெவினகொப்பா, நியூ சவுத் வேல்ஸ் “சிவ்லி” தொகுதியில் லிபரல்களின் சார்பில் களமிறக்கப்பட்ட ஜூகந்தீப் சிங், “கிறீன் வே” தொகுதியில் லிபரல்களின் சார்பில் இறகப்பட்ட பிரதீப் பதி, “மக்மோஹன்” தொகுதியில் லிபரல்களால் இறக்கப்பட்ட விவேக் சிங்ஹா, “மிச்சல்” தொகுதியில் லேபர்களின் சார்பில் இறக்கப்பட்ட இம்மானுவேல் செல்வராஜ், “சிட்னி” தொகுதியில் கிறீன் கட்சியில் இறக்கப்பட்ட சேட்டன் சஹாய் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார்கள். பார்க்கப்போனால், சிட்னி – மெல்பேர்ன் பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் – ஆச்சரியத்தக்க வகையில் – லிபரல்கள் இந்தியர்களை நம்பித்தான் இம்முறை களமிறங்கியிருக்கிறார்கள். அவ்வளவுதூரம் அந்தந்த பகுதிகளில் இந்திய வாக்காளர்கள் செறிவடைந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய செனெட் தேர்தலில் விக்டோரியாவில் போட்டியிட்ட அரன் மயில்வாகனத்தின் விக்டோரிய சோஷலிசக் கட்சி 9276 வாக்குகளை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. குவீன்ஸ்லாந்தில் போட்டியிட்ட One Nation என்ற நிறவாதக் கட்சி 84 644 வாக்குகளைப் பெற்றுக்கொண்டபோதும் எந்த ஆசனத்தையும் வெற்றி பெறவில்லை. இந்தக் கட்சியில் இந்தியத் தமிழரான முத்துராஜ் குருசாமி போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலின் இன்னொரு விநோதமாக, லேபர் கட்சி எதிர்க்கட்சியாக பதவி வகித்த காலத்தில் நிழல் குடிவரவு அமைச்சராக – லேபர் கட்சி சார்பில் குடிவரவு விவகாரங்களில் லிபரல் அரசின் கொள்கைகளை விமர்சித்துவந்த – அகதிகள் விவகாரத்தில் லிபரல்களை தோலுரித்த – கிறிஸ்டீனா கெனெலி நியூ சவுத் வேல்ஸ் “ப்ளவொர்” தொகுதியில் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட – வியட்நாமிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாகத் தஞ்சமடைந்த – டெய் லீ என்ற பெண்ணிடம் படுதோல்வியடைந்தார். அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த கிறிஸ்டினா கெனலி, லேபர் கட்சியில் பிரதித் தலைவராகப் பதவி வதித்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

லிபரல்களுக்கு அநேக இடங்களில் அடி விழுந்திருந்தாலும் முக்கிய புள்ளிகள் தங்களது ஆசனத்தை இழக்கவில்லை. ஸ்கொட் மொறிஸன், தேசியக் கட்சியின் பானபி ஜொய்ஸ் போன்றவர்கள் தங்களது தொகுதியில் பெருவாரியான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீற்றர் டட்டன், லிபரல் கட்சிக்கே ஆப்படித்து, முன்னாள் பிரதமர் மல்கம் ரேன்புல் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். குடிவரவு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், ஆஸ்திரேலியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல்வாதி என்று பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டவர். ஆச்சரியமளிக்கும் வகையில், குவீன்ஸ்லாந்தில் அவர், தனது தொகுதியில் பெருமளவான வாக்குகளுடன் வென்றிருக்கிறார். ஆனால், லிபரல் கூட்டணி அரசின் கருவூலக் காப்பாளராக – தினமும் அரச முகமாக மக்கள் முன் தோன்றிக்கொண்டிருந்த – ஜொஷ் பைடின்பேர்க், மெல்பேர்னில் அவரது “கூயொங்” தொகுதியில் தரும அடி வாங்கி, ஆசனத்தையே இழந்திருக்கிறார். 12 வருடங்களுக்குப் பிறகு, அரசியலில் இருந்து கலைக்கப்பட்டிருக்கிறார்.

Sunday, May 15, 2022

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி: இருவர் கைது..!!!

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் பலி: இருவர் கைது..!!!


இந்தியாவின் புது டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில் நேற்று மாலை பற்றிய தீ அனைத்து தளங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலையும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தன

40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தீ பரவிய வேளையில், கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாகவும் அத்தளத்திலேயே அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இக்கட்டடத்தில் இயங்கிய நிறுவனமொன்றின் உரிமையாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கட்டடம் பாதுகாப்பு அனுமதியை பெற்றிருக்கவில்லை எனக் கூறும் பொலிஸார், கட்டடத்தின் உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர். இக்கட்டடத்தில் ஒரேயொரு படிகட்டு மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Sunday, May 8, 2022

குழந்தைகளைக் குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்: கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்; மருத்துவர்கள் கூறுவது என்ன?

குழந்தைகளைக் குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்: கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்; மருத்துவர்கள் கூறுவது என்ன?


இந்திய கேரளா மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்னும் புதுவகையான வைரஸ் பரவிவருகிறது. குழந்தைகளை குறிவைக்கும் இந்த வைரஸால் த் சுமார் 86 குழந்தைகள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சற்று தணிந்து மக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பியிருக்கும் நிலையில், கேரளத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் புதுவகையான வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பரவலாகவே கை, கால்கள் வெளிரி போதல் அல்லது வெள்ளை நிறமாதல், உடல் முழுவதும் வலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.

கேரளத்தின் நெடுவத்தூர், ஆரியங்காவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது, இது ‘தக்காளி காய்ச்சல்’ எனத் தெரியவந்துள்ளது.

கேரளா அரசு மருத்துவமனைகளில் தங்கியும், வெளிநோயாளிகளுமாக இதுவரை 86 குழந்தைகள் இந்த நோய்க்குச் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது,


” தக்காளி வைரஸ் என்னும் வார்த்தைதான் புதிது. நம் தமிழகத்தில் கை,கால்,வாய் நோய் என்று இந்த வைரஸைச் சொல்வார்கள். வைரஸ் உடலில் நுழைந்து மூன்று முதல் ஆறு நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல், உடல் சோர்வு பிரதானமாக இருக்கும். இது சிறியவர்களையே பெரும்பாலும் தாக்கும். சின்ன, சின்னக் கொப்பளங்களும் ஏற்படலாம். அரிதிலும், அரிதாகவே நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்த பெரியவர்களைத் தாக்கும். அறிகுறி தென்பட்ட ஒரு வாரத்தில் குணமாகிவிடும். இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை”என்கின்றனர்.

Monday, May 2, 2022

பிலிப்பைன்ஸில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 8 பேர் பலி..!!!

பிலிப்பைன்ஸில் தீ விபத்து : குழந்தைகள் உட்பட 8 பேர் பலி..!!!


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு அருகில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 05:00 மணியளவில் ஆரம்பித்த இந்த தீ விபத்தில் , 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீ விபத்து கியூசான் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் ஒரு நெரிசலான குடியிருப்பு தொகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.

தீயை அணைக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகியதாக தீயணைப்பு அதிகாரி கிரெக் பிச்சாய்டா தெரிவித்துள்ளார்.

தீ வேகமாக பரவியதால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.

பிலிப்பைன்ஸ் உலகின் மிக அதிக சனத் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் அதன் தலைநகரில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள் வாழ்கின்றனர்.

மெட்ரோ நகரமான மணிலா, தலைநகரை உள்ளடக்கிய பகுதி மற்றும் கியூசான் உட்பட மற்ற நகரங்களில் சுமார் 1 கோடியே 3 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இவ்வாறு தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படும் நெரிசலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, May 1, 2022

சீன கட்டட இடிபாட்டில் பலரும் சிக்கித் தவிப்பு..!!!

சீன கட்டட இடிபாட்டில் பலரும் சிக்கித் தவிப்பு..!!!


மத்திய சீனாவில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் பல டஜன் பேர் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பியோரைத் தேடி மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எட்டு மாடிகள் கொண்ட இடிந்த கட்டடத்தில் ஹோட்டல் ஒன்று, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் திரையரங்கு ஒன்று இருந்துள்ளது. ஹுனான் மாகாணத்தின் சங்ஷா நகரில் இருக்கும் இந்தக் கட்டடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

தொடர்ந்து 23 பேர் சிக்கி இருப்பதோடு மேலும் 39 பேரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக சங்ஷா மேயர் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகாத நிலையில் இடிபாடுகளில் இருந்து ஐவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார்  தெரிவித்தனர். கட்டடத்தின் உரிமையாளரும் கட்டடத்தின் வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றுக்கு பொறுப்பான மற்ற மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகச் சங்ஷா பொலிஸார் தெரிவித்தனர்.
உக்ரைனின் முற்றுகை நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்..!!!

உக்ரைனின் முற்றுகை நகரில் இருந்து மக்கள் வெளியேற்றம்..!!!


உக்ரைனின் தெற்கு நகரான மரியுபோலில் உக்ரைனிய துருப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான அசொவ்ஸ்டால் உருக்கு ஆலையில் இருந்து சுமார் 20 பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த பாரிய கைத்தொழில் வலயத்தை முடக்குவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பட்டின் கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் முதல் குழு இதுவாகும்.

அங்கு தொடர்ந்து சிக்கி இருப்பதாக கூறப்படும் சுமார் 1,000 பொதுமக்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதேநேரம் கிழக்கு உக்ரைனில் தமது தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ஒரு வாரத்திற்கு முன் ரஷ்யா அறிவித்த நிலையில் “விமானங்கள் பறக்க முடியாத வகையில் இந்த கைத்தொழில் வலயத்தை முடக்கும்படி”, புட்டின் தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டார்.

எனினும் இந்த உருக்கு ஆலையில் இருந்து ஆறு சிறுவர்கள் உட்பட 25 பொதுமக்கள் வெளியேறியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றி கூறப்படவில்லை.

எனினும் 20 பெண்கள் மற்றும் சிறுவர்களே வெளியேறியதாக அந்த உருக்காலைக்குள் இருக்கும் உக்ரைன் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மரியுபோல் நகரை கைப்பற்றுவது உக்ரைனின் ஒட்டுமொத்த தெற்குக் கடற்கரையையும் கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டத்திற்கு உதவியாக உள்ளது. இது 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவுடன் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ் போன்ற ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை ஒன்றிணைப்பதாக அமையும். அதேபோன்று மொடோவாவில் உக்ரைனிய மேற்கு எல்லை பகுதியில் இருக்கும் ரஷ்ய ஆதரவு பகுதியை அணுக முடியுமானதாக இது அமையும்.

Thursday, April 28, 2022

உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை..!!!

உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை..!!!


உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிட முயற்சிக்கும் எந்த நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்மிடன் அனைத்து விதமான உபகரணங்களும் உள்ளதாக தெரிவித்த புட்டின், தேவையேற்படின் அவற்றை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் தொடர்பில் எவரேனும் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை உருவாக்கினால், யாராலும் கணிக்கமுடியாத கருவிகளை ரஷ்யா பயன்படுத்தும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் ஆயுத விநியோகத்தை ஆரம்பித்துள்ளதுடன், இந்த போரில் ரஷ்யாவை உக்ரைன் வெற்றிகொள்ளும் என அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

கிழக்கில் ரஷ்யாவின் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, April 27, 2022

இந்தியாவில் தஞ்சை தேர் திருவிழாவில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு..!!!

இந்தியாவில் தஞ்சை தேர் திருவிழாவில் விபத்து : 11 பேர் உயிரிழப்பு..!!!


இந்தியா - தஞ்சையில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில், அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தின் போது சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று நாட்கள் இவ்விழா தேரோட்டத்துடன் நடைபெறும். நள்ளிரவு தொடங்கி விடியும் வரை இவ்விழா நடைபெறும்.

அதன்படி 94ஆவது ஆண்டுக்கான திருவிழா நேற்று (ஏப்ரல் 26) காலை தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 10 அளவில் நடைபெற்றது. வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் அப்பர் உற்சவர் எழுந்தருளினார். அலங்கார விளக்குகள் எரிவதற்காகத் தேரின் பின் பகுதியில் பெரிய ஜெனரேட்டரும் இணைக்கப்பட்டிருந்தது.

தேரில் சிறுவர்கள், பெரியவர்கள், பூசாரி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். நள்ளிரவிலும் உற்சாகமாகத் தேரை இழுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வீடாகத் தேரை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர் செல்ல செல்ல வழிநெடுகிலும் தண்ணீர் ஊற்றப்பட்டது.

இந்த ஊர்வலம் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்தது. கடைசி வீட்டில் தேங்காய் உடைத்து வழிபட்டுவிட்டு திரும்பும் போது மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அப்பர் மடத்துக்குத் திரும்பும் போது தேர், சாலையிலிருந்து பள்ளத்தில் இறங்கியிருக்கிறது. தேர் சாய்ந்த சமயத்தில் அதன் மேல் இருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசி தீப்பிடித்து எரியத் தொடங்கியது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

“கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. தேரை இழுத்தவர்கள் எல்லாம் சுருண்டு சுருண்டு விழுந்தனர். தேரில் அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. காலை கீழே வைக்கும் போது எர்த் அடித்தது. மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அருகில் சென்று பார்த்தால் எல்லோரும் சுருண்டு விழுந்து கிடந்தனர். ஆர்வமாகத் தேருடன் வந்த சின்ன பசங்கள் எல்லாம் விழுந்து கிடந்தனர். பதற்றத்தில் எங்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இரண்டு நிமிடத்தில் எல்லாம் நடந்துமுடிந்துவிட்டது. கண் முன்னே எல்லாம் துடி துடித்து விழுந்தனர். ஜெனரேட்டர் அருகே அமர்ந்திருந்தவர் தீயில் கருகிவிட்டார்” என்கின்றனர். இந்த விபத்துக்குச் சாலையின் உயரம் தான் காரணம் எனவும் களிமேடு பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்குத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Monday, April 25, 2022

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது..!!!

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது..!!!


பிரிட்டனின் லண்டன் நகரில் 3 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் இன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 3 பெண்களும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் தென்பகுதியிலுள்ள சௌத்வாக் பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்றும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரி நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 24, 2022

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து..!!!

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து..!!!


ஜப்பானில் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. படகில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 மணி நேரத்திற்கும் மேலாகியும் படகில் சென்றவர்களில் ஒருவரும் உயிருடன் கண்டறியப்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
எண்ணெய் கிடங்கு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!!

எண்ணெய் கிடங்கு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!!
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தினால் நைஜீரியாவின் விவசாய நிலங்கள் மற்றும் சிற்றோடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Saturday, April 23, 2022

மசூதியில் குண்டு வெடிப்பு - பலர் பலி!

மசூதியில் குண்டு வெடிப்பு - பலர் பலி!

 


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுலவி செகந்தர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 17, 2022

தென்ஆபிரிக்காவில் கடும் மழை ; 395 பேர் உயிரிழப்பு..!!!(Video)

தென்ஆபிரிக்காவில் கடும் மழை ; 395 பேர் உயிரிழப்பு..!!!(Video)


தென்ஆபிரிக்காவில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளது.

தென்ஆபிரிக்காவில் குவாஜுலு - நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கடும்மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடும்மழையால் வீதிகள், வீடுகள், பாடசாலைகள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.


இதுபற்றி மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறும்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வீதிகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

எனினும், வருகிற நாட்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி லோமுகா கூறும்போது, கடற்கரை பகுதியில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்று வேகமுடன் வீச கூடும் என்றும் தொடர்ந்து, பரவலாக பல பகுதிகளில் கடும்மழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்துள்ளார்.Sunday, April 10, 2022

அரசு கவிழ்ந்தது - புதிய பிரதமா்?

அரசு கவிழ்ந்தது - புதிய பிரதமா்?


 பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.


புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது பாராளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீா்மானம் மீதான விவாதத்துக்காக பாராளுமன்ற கீழவை கூடியபோது அவையை வழிநடத்திய அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி, நம்பிக்கையில்லா தீா்மானம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி அறிவித்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 போ் கொண்ட அமா்வு, நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனவும், பிரதமரின் பரிந்துரைப்படி பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் தீா்ப்பளித்தது.

மேலும், பாராளுமன்ற கீழவையை சனிக்கிழமை கூட்டி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் பாராளுமன்றம் சனிக்கிழமை காலை கூடியது. அப்போது, அவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவையை அவைத் தலைவா் நடத்துவாா் என்று நம்புகிறேன்’ என்றாா். அவா் பேசும்போது ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, பாராளுமன்ற அவைத் தலைவா் ஆசாத் கைஸா் அவை நடவடிக்கைகளை பிற்பகல் பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தாா். அவை ஒத்திவைப்புக்குப் பிறகு எதிா்க்கட்சி உறுப்பினா்களும், ஆளும் கட்சி உறுப்பினா்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால், அவை மீண்டும் கூடுவது தொடா்ந்து தாமதமானது.

இந்த நிலையில், இஃப்தாா் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை பாராளுமன்ற தலைவா் இரவு 7.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நோன்பு திறப்புக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய நிலையில், உடனடியாக இரவு 9.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இரவுத் தொழுகைக்கு பிறகு அவை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் : இதற்கிடையே, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. அதில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

தீா்மானம் வெற்றி: இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

342 உறுப்பினா்கள் கொண்ட பாராளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Saturday, March 19, 2022

ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா பலி

ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா பலி

 


சீனாவில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு கொவிட் பாதிப்பு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது.

ஜிலின் மாகாணத்தில் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Friday, March 11, 2022

ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை தோல்வி

ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை தோல்வி


 துருக்கியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் வியாழக்கிழமை நடத்திய முதல்கட்டப் பேச்சுவாா்த்தை போா் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாமலேயே நிறைவடைந்தது.


ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

உக்ரைனில் போா் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

எனினும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் எந்த ஒப்பந்தமும் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்படவில்லை என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் டிமித்ரோ குலேபா கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது : லாவ்ரோவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள அவா் தயாராக இல்லை. அவா் முன்வைக்கும் அம்சங்கள் அனைத்தும் போரில் உக்ரைன் சரணடைய வேண்டும் என்பதைப் போல் உள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் ஒருபோதும் சரணடையாது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடம் அமைப்பதற்கான நம்பிக்கையையும் சொ்கெய் லாவ்ரோவ் பொய்யாக்கிவிட்டாா்

எனினும், போரால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடர வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டோம் என்றாா் குலேபா.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாவது :

உக்ரைன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அந்த நாடு அனுப்பும் எந்த பிரதிநிதிகளுடனும் பேச்சுவாா்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது.

எனினும், சண்டை நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்கு பெலாரஸில் தற்போது பல சுற்றுகளாக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைக்கு மாற்று ஏதும் இல்லை.

தற்போது உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடைபெற்றுள்ள பேச்சுவாா்த்தை அதனை நிரூபித்துள்ளது.

அந்தப் பேச்சுவாா்த்தையில், உக்ரைன் தனது மேற்கத்திய சாா்பு நிலையைக் கைவிட்டு நடுநிலை வகிக்க வேண்டும், ஆயுதங்களைக் கைவிடவேண்டும் என்ற ரஷ்யாவின் நிபந்தனைகளை முன்வைத்தேன். அதற்கான பதிலை உக்ரைன் அரசிடமிருந்து எதிா்பாா்த்துள்ளேன்.

அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள் பிரச்னையை மேலும் தீவிரமாக்குகின்றன.

இந்த விவகாரத்தில் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நாங்கள் சமாளிப்போம். பொருளாதார விவகாரத்தில் ரஷ்யா எப்போதுமே மேற்கத்திய நாடுகளை சாா்ந்து இயங்கவில்லை என்றாா் அவா்.

உலகின் 2 ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ (நேட்டோ) என்ற பெயரில் கடந்த 1949 ஆம் ஆண்டு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து எதிா்த் தாக்குதல் நடத்தும். மேலும், ஓா் உறுப்பு நாட்டில் மற்ற நேட்டோ நாடுகள் ராணுவ நிலைகளை அமைக்க முடியும்.

பிற்காலத்தில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷ்யா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷ்யா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24 ஆம் திகதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷ்யப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

இந்தச் சூழலில், ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் துருக்கியில் சந்தித்து தற்போது நடத்திய பேச்சுவாா்த்தை சண்டை நிறுத்த ஒப்பந்தம் இல்லாமல் முடிவடைந்துள்ளது.

Monday, March 7, 2022

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்


 உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார்.


இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு மக்கள் வெளியேறினால் மட்டுமே, அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், மக்கள் வெளியேறும் வகையில் போரை நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக மனிதாபிமான பாதை திறந்து விடப்படும் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.

Friday, March 4, 2022

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யா


ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படும் சபோரோஷியா அணுமின் நிலையத்தை ரஷ்யா இராணுவம் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tuesday, March 1, 2022

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

 


உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் தாக்குதலில் உக்ரைனில் வசித்து வந்த இந்திய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உக்ரைன் ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது.

கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உட்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை இந்திய மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.