Wednesday, December 1, 2021

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்..!!!

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்..!!!




அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கடந்த 26 ஆம் திகதி விடுத்துள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண, வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் ,பிரிவேனாக்களுகும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறும். க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அத்தியாவசிய கற்றல் உள்ளடக்கம் குறித்த வழிகாட்டுதல்களில் வெளியிடப்பட்ட ED/01/44/01/01-2 மற்றும் 2021-11-09 திகதியிட்ட கடிதம் இரத்து செய்யப்படும்.

தற்போதைய தரங்களில் உரிய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு போதிய கால அவகாசம் உள்ளதால், அந்தப் பாடத்திட்டங்களை முழுமையாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அனைத்து பாடசாலைகளும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று விடுமுறை வழங்கப்படும். அந்த விடுமுறையின் பின்னர் டிசம்பர் மாதம் 27ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளும் 2022 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விடுமுறை வழங்கப்படும். எவ்வாறாயினும், இந்த பரீட்சையை நடத்துவதில் ஆரம்ப பிரிவு வகுப்புகளுக்கு விடுமுறை வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் மார்ச் மாதம் 07 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

சித்திரை புத்தாண்டுக்காக ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

முஸ்லிம்களுக்கான நோன்பு காலங்களில் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். 2021 க.பொ.த க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்வியாண்டு 2022 ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

எவ்வாறாயினும், அந்த மாணவர்களுக்கு கருத்தரங்குகள் அல்லது வேறு மாற்று வழிகள் மூலம் பாடத்தை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 2022ம் ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
2021 டிசம்பர் 1 - பிரதான நகரங்களுக்கான வானிலை..!!!

2021 டிசம்பர் 1 - பிரதான நகரங்களுக்கான வானிலை..!!!




சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் குறிப்பாக பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.


கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!!!

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!!!




அடுத்த 2 வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் ஆகிய 2 அரச நிறுவனங்களும் பாரிய நட்டத்தில் இயங்கி வருகின்றன. இதில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பயிர்ச்செய்கையை முறைப்படுத்தி வருவதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியதன் மூலம் நட்டத்தில் இயங்கும் 2 நிறுவனங்களும் நட்டத்தை குறைக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

ஆத்துடன், மவுன்ட்சின் தோட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து தோட்டங்களின் கட்டுப்பாடும் முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பல வருடங்களாக மீள்பயிரிடப்படாத காணிகள் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் தேயிலை பயிர்ச்செய்கையின் மறுமலர்ச்சிக்காக இந்த அனைத்து தோட்டங்களிலும் மீண்டும் தேயிலை பயிரிடுவதற்கு தேவையான அனைத்து மானியங்களையும், அதாவது செடிகள் மற்றும் உரம் போன்றவற்றை இலவசமாக வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் காணாமல் போன படகு சென்னையில்..!!!

இலங்கையில் காணாமல் போன படகு சென்னையில்..!!!




வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகு சென்னை காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் காணாமல் போன கடற்றொழிலார்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காணாமல் போன நிலையின் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த படகின் மூலம் திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் நாளிலேயே படகு என்ஜின் பழுது ஏற்பட்டு விட்டது என்றும் மேலும் காற்றுவாக்கில் அந்தமான் பகுதிக்கு சென்றதாகவும் நேற்று சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த IND TN 02 MM 2543 என்ற படகின் மூலம் இரவு 11.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு தொலைபேசியில் தெரிவித்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

காணாமல் போன கடற்றொழிலார்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட கடற்றொலில் அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் இதனோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை..!!!

நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை..!!!




நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.

எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மிகவும் வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சிரமத்துடன் அமுல்படுத்தியது. அதன் பின்னர் நாடு திறக்கப்பட்டாலும் நாட்டில் இந்நோய் முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். சிறு வயதினர்களளுக்கு கூட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நாம் யாரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் தமது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சுகாதாரத் துறையினரால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி செயற்படுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அண்மையில் பதிவாகிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபினால் உலகில் ஆபத்தான சூழ்நிலையொன்று மீண்டும் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் காலம் தாழ்த்தாது, விரைவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள். மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை நம் அனைவரின் விவேகமான மற்றும் பாதுகாப்பான நடத்தையில் தங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் - வெளியான புதிய தகவல்கள்..!!!

உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரோன் - வெளியான புதிய தகவல்கள்..!!!


தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் தொடர்பாக சில ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் இறப்பு சதவீதம் குறைவு என்றும் தென்னாபிரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஒமிக்ரோன் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான ஒமிக்ரோன் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன. இதனால் இந்த வைரஸ் எளிதாக ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

டெல்டா வகை கொரோனாவால் உடலில் ஒக்சிஜன் அளவு வெகுவாக குறையும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், ஒமிக்ரோன் வகை காரணமாக அத்தகைய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறதும். மேலும், ஒமிக்ரோன் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்பு பாதிப்பும் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிபேர் தடுப்பூசி செலுத்தியவர்கள் என்றும் தென்னாபிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராக உள்ள ஏஞ்சலிக் கோட்ஸி (angelique coetzee).கூறியுள்ளார். ஏனைய வகை கொரோனா தொற்றுடன் ஒப்பிடும்போது இதனால் ஏற்படும் அறிகுறிகள் என்பது குறைவானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
முல்லை - கூழாமுறிப்பில் வயோதிபர் மீது காட்டு யானை தாக்குதல்..!!!

முல்லை - கூழாமுறிப்பில் வயோதிபர் மீது காட்டு யானை தாக்குதல்..!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் வீதியால் சென்ற நபர் மீது காட்டு யானை தாக்கியதில் குறித்த வயோதிபர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

நேற்று கூழாமுறிப்பிலிருந்து கெருடமடு செல்லும் வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வயோதிபர் மீது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

துவிச்சக்கர வண்டியை தூக்கி வீசியபோது முதியவரும் தூக்கி வீசப்பட்டு அவர் காயமடைந்துள்ள நிலையில் யானை அவருடைய துவிச்சக்கர வண்டியை கடுமையாக தாக்கியுள்ளது.

அவர் சத்தமிட்டவுடன் கிராமத்தவர்கள் சென்று யானையை விரட்டியுள்ளனர்.

குறிப்பாக குறித்த பகுதிகளில் காட்டு யானை அதிகம் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதோடு அண்மையில் கெருடமடு பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கடந்த 25ஆம் திகதி அன்று யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.