5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் பல முறைகேடுகள் - அரசாங்க அதிபர்


நாட்டில் கோரோனா இடர்காலத்தில் வழங்கப்பட்ட ஐந்தாயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பல முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவில் சில கிராம அலுவலர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்துள்ளன. எமக்குக் கிடைத்த முறைப்பாட்டினையடுத்து இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கப்படுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சமூர்த்திக் கொடுப்பனவு பெறுவோர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களுக்கு ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 2 ஆயிரம்ரூபாக் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பயனாணிகளின் பெயர்களுக் தானே கையொப்பமிட்டு பணத்தை முறைகேடு செய்துள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேபோன்று சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவில் இரண்டாயிரம் ரூபாவை மாத்திரம் வழங்கி எஞ்சிய தொகை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன என்றார்.
Previous Post Next Post


Put your ad code here