Monday, 9 December 2024

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் - ஜனாதிபதி..!!!

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் - ஜனாதிபதி..!!!


எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (09) நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.

இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கையை குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது.
திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்..!!!

திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்..!!!


திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர்கள் மூவரின் காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது,

இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.

ஆயினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!!


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஷமிகளால்  எரிக்கப்பட்ட ஆலயக் கதவு..!!!

விஷமிகளால் எரிக்கப்பட்ட ஆலயக் கதவு..!!!


ஆலடி - பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் எரிக்கப்பட்டுள்ளசம்பவம் பக்தர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.|

கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.








யாழில்.  கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றுக்குள் இருந்து குடும்பப் பெண் சடலம் மீட்பு..!!!

யாழில். கம்பி வலையால் மூடப்பட்ட கிணற்றுக்குள் இருந்து குடும்பப் பெண் சடலம் மீட்பு..!!!



யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் - வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை நேற்றுமுன்தினம் பிற்பகலில் இருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச் சென்ற வேளை குறித்த கம்பி வலையால் மூடிய கிணற்றடிப் பகுதியில் தொலைபேசி சத்தம் ஒலித்த நிலையில் அந்தக் கிணற்றை அவரது மகன் எட்டிப் பார்த்த போது சடலம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாகக் காணப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாயான விமலன் சிந்து என்கின்ற 42 வயதுடைய தாயார் ஆவார்.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (9) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.7043 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.1018 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 376.9306 ரூபா மற்றும் கொள்வனவு விலை 362.9192 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 312.6562 ரூபா எனவும் கொள்வனவு விலை 300.0925 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (09.12.2024) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.



யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு ..!!!

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு ..!!!



யாழ்ப்பாணம் - வடமராட்சி அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது - 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வீட்டிலிருந்த போது அவர் திடீர் சுகவீனமுற்றதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டநிலயில் சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ள்ளார். நெல்லியடிப் பொலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.