யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள பொதுச் சந்தைகள் தனிநபர் சுகாதாரங்களை பேணுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன், நெல்லியடிசந்தை மட்டும் சுகாதார ஏற்பாடுகளை பூரணப்படுத்திய பின்னர் மீண்டும் திறக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் பொதுச் சந்தைகள் இயங்க ஆரம்பித்துள்ளமை சந்தைகளிலுள்ள சுகாதார ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்தில் 70 நாட்களின் பின்னர் மீண்டும் பொதுச் சந்தைகள் இயங்கஅனுமதி அளிக்கப்பட்டது. பொதுச் சந்தைகள் மீள திறக்கப்பட்டு வழமையான வியாபார செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
கொரோனாவைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களின் பின்னர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுச் சந்தைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருநெல்வேலிச் சந்தை சுன்னாகம் பொதுச்சந்தை போன்ற பிரதான பொதுச் சந்தைகள் தனிநபர் சுகாதாரங்களை முறைமையாகப் பேணி சிறப்பாக நடைபெற்று வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனினும் மருதனார்மடம் மற்றும் நெல்லியடி பொதுச் சந்தைகள் சுகாதார ஏற்பாடுகள் பூரணமல்லாத நிலைமை பொதுச் சுகாதார பரிசோதகரினால் கண்டறியப்பட்டுள்ளது. அதில் மருதனார்மடம் பொதுச் சந்தை உடனடியாக சுகாதார நடைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது. எனினும் நெல்லியடி பொதுச் சந்தையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது மந்தமான நிலைகாணப்படுவதால் பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவறுத்தலுக்கு அமைய தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது. எனினும் மிக விரைவில் சுகாதார ஏற்பாடுகளுடன் மக்களுக்கான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுச் சந்தைகளுக்கு செல்லும் பொது மக்கள் முகக் கவசங்களை கட்டாயமாக அணிவது அவசியமாகும். மேலும் பொதுச் சந்தை நுழைவாயிலில் அறிவுறுத்தப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்கப்படுகின்றீர்கள் என்றார்.