நவம்பர் 7ஆம் திகதிக்கு பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து யாழ் வந்தோர் பதிவு செய்ய கோரிக்கை..!!!


நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தற்போது நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.

எனவே கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமையிலிருந்து வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த பிரதேசங்களின் நோய் நிலமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தர வேண்டும்.

இதன் மூலம் தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும் – என்றுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here