Sunday 29 November 2020

தமிழர் விடுதலை கூட்டணி அறிக்கை..!!!

SHARE


சமல் ராஜபக்ச அவர்களின் பாராளுமன்ற உரை தமிழ் மக்களிற்கு பெரும் நம்பிக்கையை ஊட்டும் நீண்ட நாட்களின் பின் பொறுப்பு மிக்க ஓர் பெரும் அரசியல் தலைவரால் பாராளுமன்றம் ஊடாக தமிழ் மக்களிற்கு விடுக்கப்பட்ட அழைப்பானது தமிழ் மக்களிற்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுகின்றது. ஆனால் அதில் ஒரு திருத்தத்தை அவருடய சம்மதத்துடன் மக்கள் வரலாற்றினை அறிய வேண்டும் என்பதற்காக ஒரு சொல்லை இணைக்க விரும்புகின்றேன். அது உண்மையும் ஆகும். தமிழ் மக்களின் கடந்தகாலம் என்ற சொற்பதத்திற்கு பதிலாக சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்த நிலைமையை நினைவு கூர்ந்து வாழ்வோமாக என மாற்றம் பெற்றிருப்பின் பொருத்தமாக இருக்கும். பெரியார் சமல் ராஜபக்ச அவர்களின் முயற்சி தமிழ், சிங்கள ஒற்றுமைக்கு வலுவூட்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகின்றது.

சுதந்திரம் கிடைக்கின்ற வேளையில் தமிழ் மக்களுடைய ஒற்றுமையை மூச்சாக பெறும் நோக்கோடு அன்றைய சட்ட சபையின் முதலமைச்சராக இருந்து பிரதம மந்திரி பதவியை ஏற்க இருந்த அதி மதிப்பிற்குரிய டி எஸ் சேனநாயக்க அவர்கள் அன்றைய சட்ட சபையின் தமிழ் உறுப்பினர்களை அழைத்து பிரித்தானியர் ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? அல்லது நாம் எல்லோரும் இணைந்து நம்மை நாம் ஆளும் நிலைமையை ஏற்க தயாரா? என வினவி, தானும் தனது கட்சியாகிய காங்கிரசும், சிங்கள சகோதரர்களும், தமிழ் மக்களிற்கு எதுவித குறையும் வைக்கமாட்டோம் என உறுதி அளிக்கின்றேன் என்று கூறியதுடன், அனைவரினது ஆதரவையும் பெற்று ஆட்சியும் அமைத்தார். அவரின் நடு நிலமைக்கு சான்றாக “தேசபிதா” என பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டதும், பிரித்தானிய அரசால் வழங்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்த பட்டமான “அதி உத்தமர் ” என்ற பட்டத்தை கொடுத்தும் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அந்த நேரத்தில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் எவ்வாறு ஒற்றுமையாகவும், அன்னியோனியமாகவும் பழகினார்கள் என்பதை சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நான் அவதானித்து வந்துள்ளேன். எமது ஆசிரியர்கள் பலர் சிங்கள மாணவர்களிற்கு பல பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றியிருக்கின்றார்கள்;. தற்போதைய தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அம்பலாங்கொடை பாடசாலையில் கல்வி கற்கும்போது, எனது மூத்த சகோதரர்களிடம் கணிதம் படித்ததாக பெருமையுடன் கூறுவார். பல சிங்கள இளைஞர்கள் யாழ்ப்பாண பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்கள். குறிப்பாக கே.பி ரட்நாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்ற பலரை குறிப்பிடலாம். அத்துடன், யாழ்ப்பாணத்தில் உயர் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் குறிப்பாக எனது தந்தையார் அதிபராக கடமையாற்றிய ஸ்ரீ சோமாஸ்கந்தா கல்லுரியிலும் பௌத்த குரு சிங்கள ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளார். தமிழ் மக்கள் வாழாத, மதிக்கப்படாத கிராமங்கள் இருக்கவில்லை. கண்டி, நீர்கொழும்பு, கொழும்பு போன்ற பல உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்களாகவும் செயலாற்றியுள்ளார்கள். கொழும்பு திட்ட கண்காட்சிக்கு வருகை தந்த இளவரசி எலிசபெத் அவர்களை கப்பலுக்கு சென்று வரவேற்றவர் முதல் பிரஜை என்ற கோதாவில் கொழும்பு மாநகர சபை முதல்வர் மேயர் உருத்திரா என்ற தமிழரே.

நான் ஒரு தமிழராக இருந்தும் சிங்கள பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்றபோது ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் தனித்தனியே பிரியாவிடை வைத்து ஞாபக சின்னங்களையும் பரிசாக தந்து கண்ணீருடன் அனுப்பி வைத்தனர்.. எனது கிராமத்தில் மருத்துவ மாதுவாக கடமையாற்றிய சிங்கள பெண்மணி அந்த பகுதியில் விசுவாசமாக கடமையாற்றி விடைபெற்றபோது அவருக்கு அப்பகுதியில் வாழ்கின்ற தமிழ்த் தாய்மார்கள் கண்ணீர்மல்க கொடுத்த பாராட்டு போன்ற பல சம்பவங்கள் சிங்கள தமிழ் மக்கள் எவ்வளவு உண்மையாக உடன் பிறப்புக்கள் போல் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை சான்று பகிர்கின்றது. இது போன்று பல நூற்றுக்கணக்கான சம்பவங்களை குறிப்பிட முடியும். ஆனால் நீண்டுவிடும் என்பதனால் அவற்றை குறிப்பிடவில்லை.

“தமிழ் மக்களும் எமது மக்களே” என விழித்து கூறியமைக்கு பதிலாக தமிழ் மக்களும் எமது உறவுகளே என்று அவர் கூறியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எத்தனையோ சந்தர்ப்பங்கள் கடந்த காலத்தில் நடந்த போதெல்லாம் சிங்கள சகோதரர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு ஆற்றிய பணி வார்த்தைகளில் அடங்காது. சுனாமியால் பெரும் அவலம் ஏற்பட்டபோது சிங்கள மக்கள் இல்லாத சில பகுதிகளில் சில பௌத்த குருக்கள் அகதி முகாம் நடத்தியதையும் குறிப்பாக ஒரு சம்பவத்தையும் கூறுகின்றேன். வயது முதிர்ந்த சிங்கள பெண்மணி ஒருவர் உணவு சமைத்துக்கொண்டு நீண்ட தூரம் நடந்து சென்று அகதிகளாக இருந்த சிறுபாண்மை இனத்தவர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கிய பெருமையை பற்றி ஏற்கனவே நான் கூறியிருக்கின்றேன். இன்று சமல் அவர்களுடைய பேச்சு ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பத்தினுடைய அழைப்பாகவே பார்க்கின்றோம்.
தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தவரை இன ஒற்றுமையை மிக பிரதானமானதாகக் கொண்டு இலகுவாக தீர்க்கக்கூடிய வகையில் இந்திய முறையிலான அமைப்பை வலியுறுத்தியே வந்திருக்கின்றது. வேறு கட்சிகள் பற்றி கருத்து தெரிவிக்க இச்சத்தந்தர்ப்பத்தை நான் உபயோகிக்கவில்லை. இது சம்மந்தமாக ஒரு பூரணமான அறிக்கையை விடவுள்ளேன். இந்த அரசாங்கமே நாட்டில் காணப்படுகின்ற இனப் பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்கும் என பல சந்தர்ப்பங்களில் நான் வலியுறுத்தியிருந்த நிலையில், அதன் வெளிப்பாடாகவே சமல் ராஜபக்சவினுடைய நாடாளுமன்ற உரை அமைந்துள்ளதாக நான் பார்க்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் இந்திய முறையிலான அரசியல் தீர்வு பற்றி அரசாங்கம் முயற்சிகள் எடுக்குமானால் அதனை தமிழ் மக்களும் ஏற்பார்கள் என்பதுடன், அதனை சிங்கள மக்களும் மறுக்கமாட்டார்கள். அவ்வாறான தீர்வு திட்டத்திற்கு எடுக்கப்படும் முயற்சிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் குறிப்பிடுகின்றேன்.

-நன்றி-

வீ.ஆனந்தசங்கரி 

செயலாளர் நாயகம்- த.வி.கூ



SHARE