யாழ். நகரில் பண்டிகைகால அங்காடி வியாபாரத்துக்கு தடை..!!!


யாழ்ப்பாணம் மாநகரிற்குள் பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகாத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இம்மானுவேல் ஆனல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழமையாக யாழ்ப்பாணம் மாநகரசபையினால் அனுமதிக்கப்படும் ‘பண்டிகைகால அங்காடி’ வியாபாரத்திற்கு இவ்வருடம் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என முதல்வரின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் பரவல் மற்றும் தாக்கங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பது தமது கடமை எனவும், தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னாயத்த நடவடிக்கைகளின் தொடராக சுகாதாரத்துறையினர், மருத்துவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை கருத்திற்கொண்டு பண்டிகைகால அங்காடி வியாபாரம் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றது எனவும் முதல்வரின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது தடையை மீறி யாரேனும் நடைபாதைகளில், வீதியோரங்களில், யாழ் நகர்ப்பகுதிகளில் மற்றும் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து எமது மாநகர வருமானவரிப் பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்படுமிடத்து குறித்த விற்பனைப் பொருட்கள் மாநகரசபையினால் கையகப்படுத்தப்படுவதுடன் அவை மீள ஒப்படைக்கப்படமாட்டாது என யாழ் மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உரிய நபர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் அறியத்தருவதாகவும் யாழ்.மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மாநகர குடியிருப்பாளர்கள், பண்டிகைகால நடைபாதை வியாபாரிகள், வெளிமாவட்ட பண்டிகைகால அங்காடி வியாபாரிகள் என அனைவரும் குறித்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என யாாழ். மாநகர முதல்வர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here