தனி ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டது - யாழ். அரசாங்க அதிபர்..!!!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால்,  தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 1,144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இன்று (14.12.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று (13.12.2020)  சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் தற்போது மொத்தமாக 1,144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்ட 26 தொற்றாளர்களும் மாவட்டத்தில் பரவலாக கானப்படுவதனால், ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்கி பயனில்லை என்பதனாலே உடுவில் பிரதேச முடக்கம் தளர்ப்பட்டுள்ளது.

ஆனால் மருதனார்மடம் சந்தை மற்றும் அதனோடு அருகிலுள்ள கடை தொகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here