சங்கானை மரக்கறிச் சந்தை மற்றும் மீன் சந்தை ஆகிய இரண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அறிவித்துள்ளார்.
சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறிப்பட்டது. அதில் தொற்றுள்ள வியாபாரி ஒருவர் இன்று புதன்கிழமை சங்கானை மீன் சந்தைக்குச் சென்றுள்ளமை தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றதனையடுத்தே அந்தச் சந்தையும் மூடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆலோசனை கிடைக்கும் வரை இரண்டு சந்தைகளையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். எனவே மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது” என்றும் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.