மாணவர்கள் வீடுகளில் இருந்தே கற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது: வடமாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்..!!!


கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள காரணத்தினால் மாணவர்கள் வீடுகளில் இருந்தவாறே கற்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் செல்லத்துரை உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. அந்த வகையில் மாணவர்கள் தற்போது வீட்டில் இருந்து கற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு தெரிவித்தார் 

தற்போதைய நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடமும் இதே போன்ற ஒரு நிலைமை காணப்பட்டது. பரீட்சைகள் கால தாமதமாக இருந்தாலும் உரிய பாடத்திட்டத்தின்படி பரீட்சைகள் இடம்பெற்றது அறியக் கூடியதே. அதேபோல் இந்த வருடமும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தர பரீட்சை என்பன பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட இருக்கின்றன.

அந்த வகையில் மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே எங்களுடைய அன்பார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால்.

நீங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். உங்களுடைய கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே மாகாண கல்விப் பணிப்பாளராகிய நான் கூறிக்கொள்ள கூடிய ஒரு விடயமாகும்

ஏராளமான பாட திட்டங்கள் எங்களுடைய இணையதளங்களில் இப்பொழுது தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் மாதிரி பரீட்சைகளை ஒன்லைன் மூலம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை மாணவர்களுக்கும் நாங்கள் ஆன்லைன் மூலம் மாதிரிப் பரீட்சைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம் .

அதில் மாணவர்கள் பங்கு பற்றி தங்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் மாணவர்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால் வீட்டில் இருக்கும் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கல்வியில் ஊக்கம் செலுத்துங்கள். உங்களுடைய கற்றல் செயற்பாடுகளை வீட்டிலிருந்து இணையதளங்கள் மூலம் கற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



Previous Post Next Post


Put your ad code here