நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி அதிகரித்துவரும் நிலையில் வட மாகாணம் கடுமையான மருத்துவர் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
வட மாகாண சபையின் ஆளுகையின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 240 மருத்துவர்கள் மற்றும் 253 தாதியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் கீழ் 4 மாவட்ட வைத்தியசாலைகள், 10 ஆதார வைத்தியசாலைகள், 45 பிரதேச வைத்தியசாலைகள், மற்றும் 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றிலேயே மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மாகாணத்தில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தற்போது இரண்டு பி.சி.ஆர். இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. பரிசோதனையை அதிகரிக்க வேண்டியுள்ளதால் மேலும் இரண்டு பி.சி.ஆர்.இயந்திரங்களைப் பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1,000 சோதனைகளை நடத்த முடியும். அதேநேரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள பி.சி.ஆர். இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 சோதனைகளை மட்டுமே முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாணத்தில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்படும் என அண்மையில் யாழ்ப்பாணம் வந்த மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தபோதும் அதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
