யாழ்ப்பாணம், பருத்தித்துறை – தும்பளை வீதியில் சிவன் கோவிலுக்கு அண்மித்தாக அமைந்துள்ள இத்தெருமூடி மடமானது பல்வேறு காலகட்டங்களில் திருத்தப்பட்டும் புதுப்பிக்கபட்டும் வந்துள்ளமையைக் காண்கின்றோம்.
அதன் தொன்மையான வடிவத்தினைக் கண்டு கொள்ள முடியாமலுள்ளது. தற்போதுள்ள கல்லால் அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியானது 150 வருடகாலப் பழமை மிக்கது என்பது குறிப்படத்தக்கது.
திராவிடக்கலைப்பாணியில் அமைந்துள்ள அதன் அடித்தளம், தூண்கள், மற்றும் சுவர்ப்பாகங்கள் கட்டிடக்கலை ரீதியாக விரிவாக ஆராயத்தக்கதாகும். வெண்வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள், அதன் கபோதங்கள், மற்றும் தளம் ஆகியன சிறந்த கொத்து வேலைப்பாடுகளைக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம்.
“பொழிந்த வெண்வைரக்கற்சதுரங்கள்” பிரதான வீதியின் இருமருங்கிலுமுள்ள உயர்ந்த திண்ணை போன்ற தளத்திற்கு மிகவும் செம்மையான முறையில் பரவப்பட்டு, அடுக்கி ஒழுங்கமைக்கப்பட்ட முறையைப் பார்க்கும்போது அவற்றின் சிறப்புக்கூறுகள், அதன் நீண்டகாலப்பாவனை ஆகியன வெளிப்படுகின்றன.
