கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக ஜூன் மாதம் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும் .
பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே ஜூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
