பீஸ்ட் முதல் அண்ணாத்த வரை... எப்போது, எந்தப் பட ஷூட்டிங் ?



கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில் இருந்த தமிழ் சினிமா மீண்டும் இயங்கத் துவங்கியிருக்கிறது. சமீபத்தில் திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியதால், படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது தமிழ் சினிமா. குறிப்பாக, பெரிய ஹீரோஸ் படங்களின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது, ஷூட்டிங் அப்டேட் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது. அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் படம் உருவாகிவருகிறது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்துமுடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்குச் சென்னையில் மால் செட் தயாராக இருக்கிறது. நீண்ட ஷெட்யூலாக இருக்கும் என்கிறார்கள். ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்புத் துவங்குகிறது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா தேர்ந்தெடுத்த இயக்குநர் பாண்டிராஜ். சூர்யாவின் 40வது படமாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு மதுரையில் நடந்துமுடிந்துவிட்டது.

கிராமப் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம்மவீட்டுப் பிள்ளை, கடைக்குட்டிச் சிங்கம் மாதிரியான ஸ்டைலில் இந்தப் படமும் உருவாகிவருகிறது. பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அடுத்தக் கட்ட ஷூட்டிங் ஜூலை இரண்டாம் வாரத்தில் துவங்க இருக்காம். சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடவும் திட்டமாம்.

ஹாலிவுட் படமான ‘க்ரே மேன்’ ஷூட்டிங்கிற்காக நான்கு மாதங்கள் அமெரிக்காவில் இருந்த தனுஷ், சென்னை திரும்பிவிட்டார். முதல்கட்டமாக, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் தனுஷ். தனுஷூக்கு ஜோடியாக மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஏற்கெனவே முடிந்துவிட்டது. அட்டுத்தக் கட்ட படப்பிடிப்பானது ஜூலை மாதம் துவங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படத் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து சிம்புவுக்கு அடுத்த ரிலீஸ் ‘மாநாடு’. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் 90% மேலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமிருக்கிறது. அதையும், ஜூலையில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எப்படியும், இந்த வருட ரிலீஸாக நிச்சயம் மாநாடு இருக்கும்.

அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என நான்கு படங்களைக் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஆரம்பிப்பதற்கு முன்பே துவங்கியது. கொரோனாவுக்கு முன்பே 60% படப்பிடிப்பை முடித்தது படக்குழு. இந்நிலையில், முதல் அலை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கடந்த டிசம்பரில் படப்பிடிப்பைத் துவங்கியது படக்குழு. அதன்பின்னர், மார்ச் மாதம் மீண்டும் துவங்கிய படப்பிடிப்பில் முழுமையாக நடித்துக் கொடுத்தார் ரஜினி. தற்பொழுது, படத்துக்கான முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. படத்தை எடிட் செய்து பார்த்துவிட்டப் பிறகு, இன்னும் சில தினங்கள் படப்பிடிப்பு மட்டும் மீதமிருக்கிறதாம். அதனால், ஜூலையில் அண்ணாத்த படத்தின் பேட்ச் ஒர்க் முடித்து படத்தை முடித்துவிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. என்ன ஆனாலும் சரி, தீபாவளிக்கு திரையரங்கில் படம் வெளியாவது உறுதி.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. படத்துக்கான 95% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆக்‌ஷன் காட்சி ஒன்று மட்டும் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்தக் காட்சியை வெளிநாட்டில் எடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும் என இயக்குநர் வினோத் விரும்புகிறார். அதனால், வெளிநாட்டு ஷூட்டிங்கிற்காக படக்குழு தயாராகிவந்தது. தற்போதைய சூழலில் வெளிநாடு ஷூட்டிங் போக முடியவில்லையென்றால், அதை உள்ளூரிலேயே மேட்ச் செய்யவும் திட்டமாம். எப்படியென்றால், உள்ளரங்கில் நடக்கும் காட்சிகளை சென்னையிலேயே செட் போட்டு எடுக்க திட்டமாம். அவுட்டோர் ஷூட்டிங் மட்டும் வெளிநாட்டில் எடுக்க இருக்கிறார்கள்.

Previous Post Next Post


Put your ad code here