எரிபொருள் இறக்குமதிக்கான செலவைக் குறைக்க மாற்று நடவடிக்கை - ஜனாதிபதி..!!!




இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக அதிக நிதியை செலவிடும் ஒரு நாடாகக் காணப்படுகிறது. இதற்கான செலவானது ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக காணப்படுகிறது. எரிபொருள் இறக்குமதிக்காக காணப்படும் செலவைக் குறைப்பதற்காக அரசாங்கம் மாற்று நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்று ஞாயிறுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏதுவாய் அமைந்த பிரதான காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் பங்கேற்புடன் இடம்பெற்ற வாழ்க்கை செலவு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக மசகு எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்றமை அதில் பிரதான காரணியாகும்.

தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் தாங்கியொன்றின் விலை 70 டொலராக அதிகரித்துள்ளதோடு , இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக அதிகளவிலான நிதியை செலவிடும் நாடு மாத்திரமல்ல. அந்த இறக்குமதியின் காரணமாக நாட்டின் போக்குவரத்து சேவை, மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளையும் நடத்திச் செல்லும் நாடாகவும் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் எண்ணெய் இறக்குமதிக்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 3677 மில்லியன் டொலர்களாகும். வாகன இறக்குமதியை தடை செய்தமை மற்றும் சர்வதேச எண்ணெய் விலை 2019 இல் தாங்கியொன்று 68.80 டொலரிலிருந்து 2020 இல் 45.57 டொலர் வரை குறைவடைந்தமையால் இந்த செலவு 2325 ஆகக் குறைவடைந்தது.

தற்போது காணப்படும் விலை உயர்வின் காரணமாக 2021 இல் எண்ணெய் தாங்கியொன்றின் விலை 70 டொலர் வரை அதிகரித்துள்ளது.

வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 4000 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. இந்த செலவானது ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.

அந்நிய செலாவணியை செலவிடுவதற்கு அப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனமானது நஷ்டத்தில் செல்லும் நிறுவனமாக உள்ளதால் வருடாந்தம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக்கு கடன் செலுத்த வேண்டிய நிலையும் காணப்படுகிறது.

இந்த இரு வங்கிகளுக்கும் இதுவரையில் 652 பில்லியன் ரூபா கடன் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபையும் இவ்விரு வங்கிகளுக்கும் 85 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. கடனுக்காக அதிக வட்டியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்காக நூற்றுக்கு 60 வீதம் எரிபொருள் பாவனையைக் குறைக்க வேண்டும்.

அத்தோடு போக்குவரத்திற்காக இலத்திரனியல் வாகனங்களையும் , இயன்ற வரை புகையிரத சேவையை மின்சாரத்தில் இயங்குபவையாகவும் மாற்றியமைக்க வேண்டும்.

எரிபொருள் மூலம் ஓடும் வாகன இறக்குமதியை தடை செய்வதோடு , இலத்திரனியல் வாகன பாவனையை அதிகரிக்கவும் முச்சகரவண்டிகளுக்கு மின்சார எஞ்சின்களை வழங்கவும் நவடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எரிபொருள் ஊடாக பயணிக்கும் வானங்களின் பாவனை அதிகரிப்பதால் நகர்புறங்களில் காற்று மாசடைதல் , மக்களுக்கு நுரையீரல் நோய் அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே சூழலுக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்கள் எரிபொருளுக்காக செலவிடும் தொகையை கட்டுப்படுத்த வேண்டும்.

இலங்கை மின்சார சபையானது மின் உற்பத்திகாக நூற்றுக்கு 30 வீதம் எரிபொருளை உபயோகிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதன் காரணமாக வீடுகளிலும் , பாடசாலைகளிலும், வைத்தியசாலைகள் மற்றும் அரச கட்டடங்களுக்கும் சூரிய மின் உற்பத்திக்கான ஏற்பாடுகளை வழங்குவதால் மக்களுக்கு ஏற்படக் கூடிய அதிக செலவைக் குறைப்பதோடு , மின்சாரசபைக்கு வருமானத்தை அதிகரிகக் கூடிய வழியாகவும் இருக்கும்.

அதற்கமைய இவ்வாறு விலையை அதிகரிப்பது தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் ஒரு பொது வேலைத்திட்டத்திற்கான ஒரு காரணி மாத்திரமேயாகும்.

நாட்டின் வங்கி கட்டமைப்புக்களை வலுப்படுத்தி குறைந்த வட்டி வீதத்தை பேணுவதற்கும் , இறக்குமதி செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் , மக்களின் நலனை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

Put your ad code here

Previous Post Next Post