INTRO :
பாடகி யோஹானியை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நியமித்துள்ளதான ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Vasantham FM என்ற பேஸ்புக் கணக்கில் ” “மெனிகே மகே இதே” பாடல் மூலமாக பிரபலமான பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது. “ என இம் மாதம் 21 ஆம் திகதி (21.09.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த டுவிட் மூலமே இந்த குழப்பநிலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை கண்டறியப்பட்டது.
குறித்த பதிவானது அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.
மேலும் நாம் குறித்த பதிவினை ஆய்வு செய்த போது, மும்மொழிகளில் பதிவிட்டிருந்த குறித்த பதிவில் எங்கும் புதிய கலாசாரத் தூதுவராக பாடகி யோஹானி நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இது குறித்தான தெளிவினை பெற எமது குழுவினர் கொழும்பு இந்திய தூதரகத்தின் ஊடக பிரிவின் பிரதானியை தொடர்புகொண்டு வினவிய போது, அவ்வாறான எவ்விதமான நியமனங்களும் பாடகி யோஹானிக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, நாம் குறித்த பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவு தொடர்பாக வினவியபோது, இலங்கை மற்றும் இந்திய மக்கள் இடையே குறித்த பாடல் பிரபல்யம் அடைந்தமையினால், மீண்டும் இரு நாடுகள் இடையே கலாசார ரீதியில் பிணைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளமையால் அவர் ஒரு கலாசார தூதுவராக மாறியுள்ளமையினை குறிப்பிடவே அவ்வாறு அவர்கள் பதிவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், பாடகி யோஹானியின் சமூக ஊடக கணக்குகளில் இந்தியாவிற்கான கலாச்சார தூதுவர் என்று எங்கும் பதிவிட்டு இல்லை. இது பற்றி விசாரிக்க பிரபல பாடகி யோஹானி டி சில்வாவை நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், இதுவரை எந்த பதிலும் இல்லை, மேலும் மெனிகே மகே இதே பாடலுக்கு இசையமைத்த சாமத் சங்கீத், யோஹானிக்கு அவ்வாறான எவ்வித நியமனங்களும் வழங்கப்படவில்லை என்பதை எமக்கு உறுதி செய்தார்.
யோஹானி மற்றும் குழுவினரை இந்திய கலாசார மையத்தின் இயக்குநர் டாக்டர் ரேவந்த் விக்ரம் சிங் கண்டு பாராட்டு தெரிவித்துள்ள புகைப்படங்களை யோஹானி வெளியிட்டிருந்தார்.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பாடகி யோஹானியை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நியமித்தாக பகிரப்படும் செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
மூலம்:- srilanka.factcrescendo.com/tamil/
Tags:
sri lanka news


