வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்..!!!


கொரோனா இரண்டாம் அலை ஊரடங்குக்கு பின் திரையரங்குகள் செயல்பட கடந்த ஜூலை மாதம் அனுமதி வழங்கியது. செப்டம்பர் முதல் வாரம் விஜய்சேதுபதி- ஸ்ருதிஹாசன் நடித்த லாபம், கங்கணா ரணாவத், அரவிந்தசாமி நடிப்பில் வெளியான தலைவி. இரு படங்களும் வணிக ரீதியாக மோசமான வசூலை சந்தித்தன. மூன்று இலக்க பார்வையாளர்களை தியேட்டருக்கு இந்த படங்களால் கொண்டுவர முடியவில்லை.

செப்டம்பர் 17 அன்று அர்ஜூன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ’பிரண்ட்ஷிப்’ விஜய்ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் கோடியில் ஒருவன் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் 367 திரைகளில் வெளியான இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு அரசியல் படம். சமீப கால அரசியல் படங்களில் ஏழைகளின் குடியிருப்புதான் கதையின் மையக் கருவாக உள்ளது. அதுபோலவே இந்தப் படத்திலும் அதுவே மையக் கரு. பொதுவாக காவல்துறை, நீதித்துறை, அரசியல்வாதிகள் பற்றிய படங்களுக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கும். இதுவரை வந்த படங்களில் அரசியல்வாதிகள் ஊழல், நிர்வாக சீர்கேடு, செயல்படா தன்மை பற்றி பேசப்பட்டிருக்கிறது. ஆனால் கோடியில் ஒருவன் படம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை பற்றி மட்டும் விரிவாக பேசியிருக்கிறது. விஜய் நடித்த தமிழன் படத்தில் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலப்பது பற்றி ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியின் முழுமையான விரிவாக்கம்தான் கோடியில் ஒருவன். கூடுதலாக படத்தின் கதாநாயகன் முதல்வன் அர்ஜூன் போன்று அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் காரணமாக அரசியல்வாதியாக மாற்றம் கண்டு மாநிலத்தின் முதல்வர் ஆகும் சூழல், அவரை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படுகிறது.

மக்களால் இந்தப் படம் ரசிக்கப்படுவதற்கும், அதன் காரணமாக குடும்பங்கள் திரையரங்கை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். இப்படத்தின் தமிழக விநியோக உரிமை நான்கு கோடி ரூபாய் விலை என்று கூறப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் விஜய் ஆண்டனி நடித்த படத்தை அவுட்ரேட் முறையில் வாங்க விநியோகஸ்தர்கள் விருப்பம் காட்டவில்லை. மதுரை மற்றும் தென்னாற்காடு, வட ஆற்காடு பகுதி விநியோக உரிமை மட்டும் வியாபாரம் ஆனது. மற்ற ஏரியா அனைத்தும் தயாரிப்பாளர் நேரடியாக ரிலீஸ் செய்துள்ளார். கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் முதல் வெற்றியை கோடியில் ஒருவன் பெற்றிருக்கிறது. கடந்த 3 நாட்களில் 50% இருக்கை அனுமதியில் சுமார் 6 கோடி ரூபாய் டிக்கெட் விற்பனை மூலம் வசூல் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. படம் ஓடி முடியும் பொழுது சுமார் 4.5 கோடி தயாரிப்பாளருக்கு பங்குத்தொகையாக கிடைக்கும் என்கிறது வியாபார வட்டார தகவல்.
Previous Post Next Post


Put your ad code here