Tuesday 5 October 2021

1,064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு..!!!

SHARE


கற்பிட்டி நுரைச்சோலை கடற்கரையோரப் பகுதியில் இருந்து 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடற்கரையோரப் பகுதியில் உள்ள மீன்வாடியொன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1064 கிலோ கிராம நிறையுடைய 32 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த மீன்வாடிக்குள் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, 1064 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்தனர். நுரைச்சோலை நரக்களி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த மீன்வாடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், உலர்ந்த மஞ்சள் மூடைகளும், சந்தேக நபரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம்; ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 4770 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பத்து பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE