Monday 18 October 2021

கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 14 வாக்குகளுகளால் ஏகமனதாக நிறைவேற்றம்..!!!

SHARE





கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 14 உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (18) திங்கட்கிழமை இடம்பெற்ற சபையின் விஷேட அமர்வில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தார்கள்.

ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் மாத்திரம் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறினார். ஏனைய ஆளுங்கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து தலைவர் ராஜமணி பிரசாந்த் உரையாற்றுகையில், கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது ஆதரவு வழங்கியது போல, இந்த ஆண்டும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். நாட்டில் நிலவிய கொரோனா பரவல் காரணமாக எமது சபையின் வேலைத் திட்டங்கள் தாமதமாகிய போதிலும் பெரும்பாலானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மக்களுக்கு கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வழங்கியுள்ளோம்.

நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி எமது சபைக்கு உட்பட்ட வட்டாரங்களுக்கு இன்றைய தினம் 50 ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் யார் பதவிக்கு வந்தாலும் எமது வேலைத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக சிறந்த முறையில் வழிகாட்டி வந்துள்ளோம்.

2022 ஆம் ஆண்டுக்கான சபைக்கான வரவு 14 கோடியே 65 இலட்சத்து 20 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாவாகவும், செலவினமாக 14 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 506 ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எமது சபையானது அரசியல், தொழிற்சங்க பேதத்துக்கு அப்பால் எல்லோருக்கும் பொதுவான சேவையை வழங்கி வருவதால் எந்த விதமான பேதமும் இல்லாமல் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது மக்கள் எதிர்பார்க்கின்ற சேவையை நாம் நிச்சயம் வழங்குவோம்.

எமது சபையின் ஊடாக கொரோனாவை முற்றாக ஒழித்தல், சகல வட்டாரங்களுக்கும் வாசிகசாலை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல், எல்லோருக்கும் குடிநீர் பெற்றுக் கொடுத்தல், சகல தோட்டங்களுக்கும் கொங்கிரீட் பாதைகளுக்குப் பதிலாக கார்பெட் பாதைகளை அமைத்தல் முதலான பிரதான விடயங்கள் மேற்கொள்ளபப்டவுள்ளன.

தோட்டங்கள், நகரங்கள், கிராமங்களின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்வி மேம்பாடு, சுகாதார வேலைத் திட்டங்கள், விஷேட தேவை உடையோருக்கான உதவிகள், பொருளாதார சுபிட்சம், கைத்தொழில், விவசாய உற்பத்திகளை ஊக்குவித்தல், சிறந்த சபையாக உருவாக்குதல் முதலான எதிர்கால இலக்குகள் அனைத்தும் வெற்றி பெறவும், அதற்கு ஆலோசனைகள் வழங்கிய எமது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண மற்றும் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர்கள், செயலாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
SHARE