சக்திவாய்ந்த பூகம்பம் - 20 பேர் பலி - 300 பேருக்கு காயம்..!!!




பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது

பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மிர்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற பல வாகனங்கள் கவிழ்ந்தன, சில கார்கள் சாலை இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.

பூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் இருந்தமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

பூகம்பத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர், பலர் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

இந்த பூகம்த்தின் அதிர்வு பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய அணைக்கட்டான மங்களா அணை, பூகம்பம் நடந்த பகுதிக்கு அருகே இருந்தது அந்த அணை எந்தவிதமான சேதாராமும் இன்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here