23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்ற உத்தரவு..!!!


இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் திகதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்க்குள் வந்த வேளை, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையே இவ்வாறு யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதனிடையே, நேற்று மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி குறித்த மீனவர்களை நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை தளத்தில் தங்கியுள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

மேலும், மீனவர் வழக்கில் ஆஜரான யாழ்ப்பாண இந்திய துணை தூதரக அலுவலக வழக்கறிஞர், மீனவர்கள் 23 பேரையும் தமிழகத்தில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தூதரக அதிகாரிகள் வழங்கவும் நீதிபதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களை இந்திய துணை தூதரகம் சார்பில் யார் நேரில் சந்திக்கிறார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.

தீபாவளி பண்டிகை வரும் நிலையில், இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், மீனவர்களை சிறைக்கு மாற்றியுள்ளது, நாகை மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Previous Post Next Post


Put your ad code here