Monday 18 October 2021

பிக்பாஸ் 5 : 15ம் நாள் | கமலுக்கே விபூதி அடிக்கப்பார்த்த அபிஷேக், `குரூப்பிஸம்' பிரியங்கா, நாடியாவின் அழுகை..!!!

SHARE

‘சபை விசாரணைக்குள் கமல் ஆழமாகச் செல்ல மாட்டேன்கிறாரே’ என்கிற பொதுவாக கேள்வி பலருக்குள் எழலாம். அது கமலின் ஸ்ட்ராட்டஜி. விட்டுப்பிடிக்கும் உத்தி. தனது வலைக்கு பூச்சி வரும் வரை காத்திருக்கும் பொறுமை சிலந்திக்கு இருக்க வேண்டும்.

முதல் சீசனில் இருந்து இந்த விஷயத்தை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். “இந்த வாரம் எலிமினேட் ஆனவர் யார்?" என்கிற தகவலை கசிய விடாமல் பிக் பாஸ் டீம் கறாராக கண்காணித்து தடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் டீமிற்கு தெரிவதற்கு முன்பே இந்தத் தகவல் ‘பப்பரப்பே’ என்று இணையத்தில் வெளியாகிவிடுவதால் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட யார் எலிமினேஷன் என்று தெரிந்துவிடுகிறது.

இதனால் ஞாயிறு எபிசோடுகளை “சரி... என்ன பண்றது… சொல்லித் தொலைங்க...” என்று சம்பிரதாயமான சலிப்புடன் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த லீக் மேட்டர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கணிசமான அளவு கெடுக்கிறது. எனவே மறுபடியும் இந்தச் சங்கை ஊதி வைக்கிறேன். பிக் பாஸ் டீம். தயவு செய்து ஆவன செய்யுங்கள்.

 
கமல் வருவதற்கு முன்பே வீட்டில் வழக்கம்போல் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். “என்னை ஒதுக்கறாங்கன்னு இசை சொல்லிட்டு இருக்கா... நேத்துகூட என்கிட்ட அவ நல்லாத்தானே பேசிட்டு இருந்தா” என்று அபிஷேக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “இன்செக்யூரிட்டி பிரச்னை. அவளும் மாஸா வரட்டுமே... என்ன இப்போ… யார் தடுத்தா..?” என்று லெப்ட் ஹாண்டில் பதில் அளித்தார் அபிஷேக்.

இதில் இரண்டு கோணங்கள் இருக்கின்றன. சமூகத்தில் நமக்கான இடத்தை அடைவதென்பது சலுகையல்ல. உரிமை. இது இசைக்கு நன்றாகத் தெரியும். அவரது கானா பாடல்களின் அடிநாதமே அதுதான். ஆனால் அவருக்குள் இயல்பான தயக்கம் இருப்பது புரிந்து கொள்ளக்கூடியது. அதே சமயத்தில் “வா... வந்து பேசு... உன்னை யார் தடுத்தது?” என்று பிரியங்காவும் அபிஷேக்கும் தெனாவெட்டாகப் பேசுவதில் நியாயமில்லை. இவர்கள் ஊடகத்தில் புழங்கியவர்கள். அது சார்ந்த தன்னம்பிக்கை அவர்களிடம் இருக்கும். ஆனால் இந்த வாய்ப்பு ஏதுமில்லாத பின்னணியில் இருந்து வருகிறவர்களை இவர்கள்தான் தானாக முன்வந்து புரிந்துகொண்டு அரவணைக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் நாகரிகம். அதுதான் சமூக நீதியும் கூட.

கமல் என்ட்ரி. இன்று இவர் அணிந்திருந்த ஆடை உண்மையிலேயே அட்டகாசமாக இருந்தது. ஆடையின் கலர் காம்பினேஷன் கனகச்சிதம். நேற்று வாக்கிங் போய்விட்டு வந்தவர்போல் இருந்த கமல், இன்று ஒரு கருத்தரங்கத்தில் உரையாற்றவிருக்கும் பேராசிரியர் போல் கெத்தாக இருந்தார். “பிக்பாஸிற்கு வருடா வருடம் ஆதரவு கூடிக் கொண்டேயிருக்கிறது. நாங்க சும்மா சொல்லல. அதற்கான கணக்குகள் இருக்கின்றன” என்று ஒவ்வொரு சீசனிலும் பாடும் அதே பல்லவியை இப்போதும் பாடினார். என்ன கணக்கோ.. பிக்பாஸிற்கே வெளிச்சம். (நூறு கோடியாம்ல... ஏம்ப்பே... நீ பார்த்தே?!). "நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கிறதா?" என்பதே நமக்கு முக்கியம். கணக்கு அல்ல.

 
அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “இந்த சீசனுக்கு ஆரம்பத்திலிருந்தே மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது” என்றதும் போட்டியாளர்கள் ஸ்கூல் பிள்ளைகள் போல் ‘ஓ’வென்று கூச்சலிட்டார்கள். அதிலும் பிரியங்காவின் சிரிப்பு மற்றும் கத்தலை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் தந்து தனி லேயராக பிரித்து ஒலிபரப்புவார்கள் போலிருக்கிறது. அவரது சத்தம் மட்டும் ஹைடெஸிபலில் ஒலிக்கிறது. “+2 பசங்களா... ஆரம்பிச்சிட்டிங்களா..?’ என்று மனதில் நினைத்துக் கொண்ட கமல், “இந்தப் பெருமையோடு உங்களுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும்” என்று கூடவே குட்டத் தவறவில்லை.

“யாரெல்லாம் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்ததில்லை?” என்று கமல் ஆரம்பிக்க சிலர் சொன்னது மட்டுமே உண்மையாகத் தெரிந்தது. "நான் பார்த்ததே இல்லை சார்” என்று தாமரை சொன்னது ஓகே. “அப்பப்ப பார்த்திருக்கேன்” என்று இமான் சொன்னதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் முழு பூசணிக்காயை வாயில் மறைக்க முயன்றதைப் போல “நான் பார்த்ததே இல்லை” என்று அபிஷேக் சொன்னதை மட்டும் நம்பவே முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் குறித்து அவர் எப்பவோ நக்கலாக ஒரு மேடையில் செய்த விமர்சன வீடியோ இன்று இணையத்தில் வைரலாக சுற்றிக் கொண்டிருக்கிறது. (அதை நிச்சயம் கமலும் பார்த்திருப்பார்).

 

“பார்த்ததில்லை" என்று சொன்ன புளுகோடு அபிஷேக் அதற்கு அளித்த விளக்கம் இருக்கிறதே... முடியல. “வேறு யாராவது ஹோஸ்ட் செய்திருந்தால் பார்த்திருப்பேன். நான் திரைப்படங்களை நிறைய ஆய்வு செய்வதால் (?!) உங்கள் திரைப்படங்களின் மீது அதன் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்” என்று அபிஷேக் சொன்ன போது “எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கறியா?” என்று கமல் உள்ளுக்குள் நினைத்திருக்கலாம்.

“சினிமா அரங்கங்களை விடவும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகம்” என்கிற யதார்த்த விஷயத்தைச் சொன்ன கமல், டிஸ்கிளைய்மராக “Ofcourse... சினிமாதான் எனக்கு சோறு போடுது. பிரியாணின்னு கூட வெச்சிக்கலாம்’ என்றது அவரது அக்மார்க் கிண்டல். (DTH என்கிற விஷயத்திற்காக அவர் பல வருடங்களுக்கு முன்பே போராடியதெல்லாம் நினைவிற்கு வந்திருக்கும்).

“எதுக்கு இதைக் கேட்டன்னா... திட்டம் ஸ்ட்ராட்டஜின்னுல்லாம் நீங்க பேசிக்கறீங்களே?” என்று அடுத்த தூண்டிலை கமல் போட, அப்பாவியாக எழுந்த ஐக்கி, "அபிஷேக், நிரூப் கிட்டலாம் ஏதோ திட்டம் இருப்பதைப் போன்று தெரிகிறது. ஆனா பிரியங்காகிட்ட எதுவும் இருக்கற மாதிரி தெரியல” என்று வெள்ளந்தியாகச் சொன்னார். (நீங்க திரும்பி அமெரிக்காவிற்கே போயிடுங்கம்மா. ஸ்ட்ராட்டஜியோட தலைவியையே உங்களுக்கு அடையாளம் தெரியல!). "நான் பிக்பாஸ் பார்த்ததில்லை” என்கிற தகவலை மறுபடியும் அபிஷேக் உறுதிப்படுத்த, “நோட் பண்ணிக்கிட்டேன்... இருக்குடா உனக்கு” என்கிற மாதிரியான பதிலைச் சொன்னார் கமல். (அப்ப ஒரு சம்பவம் இருக்கு!).

 
‘சபை விசாரணைக்குள் கமல் ஆழமாகச் செல்ல மாட்டேன்கிறாரே’ என்கிற பொதுவாக கேள்வி பலருக்குள் எழலாம். அது கமலின் ஸ்ட்ராட்டஜி. விட்டுப்பிடிக்கும் உத்தி. தனது வலைக்கு பூச்சி வரும் வரை காத்திருக்கும் பொறுமை சிலந்திக்கு இருக்க வேண்டும். தூரத்தில் பார்த்த போது ‘அவுட்.. அவுட்’ என்று கத்தினால் ஆட்டம் சுவாரஸ்யம் இழந்து விடும். இதை கமல் நன்கு அறிவார்.

இது மட்டுமில்லாமல் சில விஷயங்களை சபையில் வெளிப்படையாக விசாரிக்க முடியாது. உதாரணத்திற்கு "என் மேல ஃபிலீங்ஸா?” என்று பாவனி, அபினய்யிடம் கேட்டதை பொதுவில் கேட்டு இருவரையும் சங்கடத்திற்கு ஆளாக்க முடியாது. இந்தச் சபை நாகரிகம் கமலுக்கு தெரியும். இதுவே சற்று உச்சமாகி ‘மருத்துவ முத்தம்' அளவிற்கு போனால் அப்போது நிச்சயம் விசாரணைக்கு வந்தே தீரும்.

 
“எனக்கும் இந்தச் சூழல் புதுசாத்தான் இருக்கு. ரெண்டு ஸ்டாப் முன்னாடியே இறங்கிட்டனோன்னு இப்ப தோணுது” என்று தனக்குரிய நகைச்சுவையோடு சொன்னார் இமான். “தனித்தனியா பேசும்போது நல்லாத்தான் பேசறாங்க. ஆனா க்ரூப்பா சேரும் போதுதான் கொலைவெறியா மாறிடறாங்க” என்று பாவனி சொல்வதும் உண்மை. கன்னடப் பைங்கிளி ‘சரோஜாதேவி’ மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசும் மதுமிதாவிற்கு மொழிப் பிரச்னை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இதனாலேயே அம்மணியை விரைவில் எலிமினேஷன் லிஸ்ட்டில் எதிர்பார்க்கலாம்.

“நான் வட்டார வழக்குகளின் ரசிகன். ஆனால் இங்கு தமிழை ஒழுங்காகப் பேசினால்தான் புரியவில்லை என்கிறார்கள்” என்று தனது விமர்சகர்களுக்கு போகிற போக்கில் ஒரு குட்டு வைத்தார் கமல். மேலும் சிலரிடம் பேசிவிட்டு நாடியா பக்கமாக நாடி வந்த கமல் “உங்களை விடவும் உங்க கணவர் ஃபேமஸ் ஆயிட்டார். ஒரு ஹீரோவா எங்க மனசுல நின்னுட்டார்” என்று சொன்னவுடன் நாடியா மிகவும் நெகிழ்ந்தார். (இதே விஷயத்தை என் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தேன்). சாங்க் என்கிற பெயரை கமல் பின்னணி இசையாக மாற்றிய குறும்பு ரசிக்கத்தக்கது.

 
“கதை டாஸ்க்கில் யாருடைய கதை உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது? யாருடைய கதை கவரவில்லை?” என்று அடுத்து கமல் கேட்ட கேள்விக்குப் பெரும்பாலும் பூசி மெழுகியே பலர் பதில் அளித்தார்கள். “பிடிக்கலைன்னு சொல்ல மாட்டேன். ஆனா அந்த அளவிற்கு இம்ப்ரஸ் ஆகலை” என்கிற முன்னெச்சரிக்கையுடன்தான் பதில்கள் வந்தன. அக்ஷராவின் கதைக்கு இந்தச் சபையிலும் பிரியங்கா டிஸ்லைக் போட்டார். இதற்கு அடுத்த நொடியிலேயே அக்ஷராவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. (விட்டால் வழக்கம்போல் ஆட்டோ பிடித்து மெயின் ரோடிற்கு சென்று ஃப்ரீயாக அழுதிருப்பார்).

பாவனியின் கதையை ‘ரயில் பயணத்தோடு’ ஒப்பிட்டு அபிஷேக் சொன்ன விதம் உண்மையிலேயே சிறப்பு. (இது போன்ற சமயங்களில் இவர் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.) ஆனால் மதுமிதாவின் கதையை “நான் அனுபவித்த அதே வலி” என்று சொல்லி அவர் நிராகரிப்பதில் லாஜிக் இல்லை. தான் அனுபவித்த அதே வலியைச் சொல்லும் போதுதான் பொதுவாக கனெக்ட் ஆவார்கள். ஆனால் அபிஷேக்தான் வித்தியாச சிந்தனையாளர் ஆயிற்றே?!

 
“நமீதாவின் கதை என்னைப் பாதித்தது" என்று பெரும்பாலோனோர் சொன்னது நேர்மையான அபிப்ராயம். ஏனெனில் நமீதா இப்போது போட்டியில் இல்லை. எனவே சபையில் இருக்கும் போட்டியாளரின் பெயரைச் சொன்னால் அவரிடம் நல்ல பெயரைப் பெறுவதற்குச் சாதகமாக இருக்கும். ஆனால் அவ்வாறெல்லாம் இல்லாமல் தன் மனதிற்கு உண்மையாக பட்டதை சொன்னவர்களின் இந்த நேர்மை பாராட்டத்தக்கது. “துயரம் இல்லாமல் சிரிக்கச் சிரிக்க கதை சொன்ன காரணத்திற்காக” இமானும் ராஜூவும் ஒருவரையொருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள்.

அடுத்ததாக, ‘மிளிர்ந்தவர் யார்... ஒளிந்தவர் யார்?’ என்கிற முடிவுகளை அறிவிக்கச் சொன்னார் கமல். தேர்வுக்குழுவில் தன்னைத்தானே தலைவராக நியமித்துக் கொண்ட அபிஷேக் முடிவுகளை அறிவித்தார். இந்தக் கருத்துக் கணிப்பில் ராஜூவின் பெயர்தான் பெரும்பான்மையாக வந்தது. ஆனால் ராஜூ ஸ்கோர் செய்வது அபிஷேக்கிற்குப் பிடிக்கவில்லை. எனவே அதற்குப் பதிலாக இமானை முன்னிறுத்தி விட்டார். (இமானையும் அபிஷேக்கிற்கு பிடிக்காது என்பது வேறு விஷயம்). தான் முடிவு செய்தது மட்டுமல்லாமல், கூட இருந்த பாவனி மற்றும் அக்ஷராவையும் அபிஷேக் மூளைச்சலவை செய்துவிட்டார். அக்ஷராவிற்கு ராஜூவின் பெயர் வருவதில் உடன்பாடில்லை. அதேபோல் “கிச்சனில் உதவி செய்யாத காரணத்தினால்...” பாவனிக்கு ராஜூவின் மீது புகார் இருக்கிறது. எனவே மெஜாரிட்டி முடிவில் இமானை பதிலாக நிறுத்திவிட்டார்கள்.

 
“உனக்குப் பதிலாக இமானை ஏன் முடிவு செய்தேன் தெரியுமா?” என்று பிற்பாடு ராஜூவிடம் அபிஷேக் அளித்த விளக்கம் இருக்கிறதே? ஆகக் கொடுமையானது. “சின்னப்பொண்ணு சண்டையில் நீதான் முதலில் வந்திருக்க வேண்டும். ஆனால் நானும் பிரியங்காவும்தான் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டோம்” என்று அற்பமான காரணத்தைச் சொன்னார் அபிஷேக். அவரின் அரசியல் ராஜூவிற்கு எளிதாகவே புரிந்து விடுகிறது. எனவே ‘அப்படியா தம்பி?!” என்பது போலவே சாதாரணமாக கேட்டுவிட்டு கடந்துவிடுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இமானும் அந்த உரையாடலில் கலந்து கொள்ளவர, “பெரியவங்க பேசிட்டு இருக்கோம்ல... நீ போயிட்டு அப்புறம் வா” என்பது போல் இமானை, அபிஷேக் விரட்டிவிட்ட காட்சி ஆக அநியாயமானது.

 
காணாமல் போனவர்கள் பட்டியலில் தன் பெயர் வந்ததும் மனமுடைந்து குழந்தை போல் அழத் துவங்கிவிட்டார் சின்னப்பொண்ணு. பொதுவாகவே கலைஞர்கள் சென்சிட்டிவ் ஆனவர்கள். அதிலும் கிராமப்புறத்தில் இருந்து கிளம்பி வந்து நகரத்தில் தன்னுடைய அடையாளத்தை நிரூபிப்பதற்கு பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டும். ஆனால் பிக் பாஸ் என்பது ரத்தபூமி. ஒரு பிரபலம் இந்தப் போட்டிக்குள் வரும்போது ‘தன்னால் இதைச் சமாளிக்க முடியுமா?' என்று தனக்குள் நிறைய கேட்டுக் கொள்ள வேண்டும். சின்னப்பொண்ணு அப்படி அழுத்தமாக கேட்டுக் கொள்ளவில்லை போலிருக்கிறது. “மக்கள் முன்னாடி நான் காணாமப் போக மாட்டேன்” என்று அவர் தன்னை பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டது நல்ல விஷயம்.

“நான் காணாமப் போயிட்டதா சொல்றாங்க. அப்படின்னா. என்னை கவனிச்சிட்டே இருந்தாதானே அதைச் சொல்ல முடியும்.” என்று தாறுமாறு லாஜிக் பேசினார் நாடியா. "இந்தம்மா பேசவேயில்லையே” என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போது ஆச்சரியமாக இப்படி ஒரு சிக்ஸரை நாடியா அளித்தது சிறப்பு. ஆனால் இது சிறப்பான சமாளிப்பு மட்டுமே. கதை டாஸ்க் தவிர இந்த இரண்டு வாரத்தில் எங்கேயும் அவரைப் பார்க்க முடியவில்லை.

வருண், மதுமிதா மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் காப்பாற்றப்பட்ட தகவலைச் சொன்னார் கமல். (வருண், மதுமிதா காப்பாற்றப்படுவதெல்லாம் என்ன கணக்கோ? வாக்கெடுப்பு எண்ணிக்கையில் ஜஸ்ட் மிஸ்ஸாகத் தப்பித்திருப்பார்கள் போல).

 
‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார் கமல். இந்த வாரம் அவர் பரிந்துரை செய்த நூல் 'தமிழர் நாட்டுப் பாடல்கள்’. இதைத் தொகுத்தவர் நா.வானமாமலை. இவர் நாட்டார் வழக்காற்றியலில் முக்கியமான ஆராய்ச்சியாளர்களில் ஒருவர்.

"பல சினிமாப்பாடல் வரிகளுக்கு நாட்டுப்புற பாடல்கள்தான் விதையாக இருந்திருக்கின்றன" என்ற கமல் ‘மருதநாயகம்’ திரைப்படத்திற்கு இது போன்றதொரு நாட்டுப்புற ஆய்வுதான் பெரிய உந்துதலாக அமைந்தது என்று பரவசப்பட்டார். ‘கான்சாகிபு சண்டை’ என்கிற நூல், அந்தப் பாத்திரத்தின் மீது பெரிய இன்ஸ்பிரஷனை எனக்கு ஏற்படுத்தியது என்று சொல்லி மகிழ்ந்தார்.

எலிமினேஷன் லிஸ்ட்டில் அபிஷேக் மற்றும் நாடியாதான் மீதம் இருந்தார்கள். முடிவு ஏற்கெனவே கசிந்துவிட்டதால் நமக்கு எந்தப் பரபரப்பும் இல்லை. ‘நாடியா’ என்கிற பெயர் காட்டப்பட்டதும் “எதிர்பார்த்ததுதான்’ என்கிற புன்னகையுடன் அந்த முடிவை ஏற்றுக் கொண்டார். ‘நான் அழமாட்டேன்’ என்று முதலில் சொன்னாலும் அவர் கண்கலங்கத் தயாராக இருப்பதை முகம் காட்டிக் கொடுத்தது. பிறகு மதுமிதாவைக் கட்டிக்கொண்டபோது உடைந்து அழுதேவிட்டார்.

 
ஒருவர் வீட்டைவிட்டு கிளம்பும் போது மட்டும் அவர் மீதான புகழுரைகளை உரைப்பது பிக்பாஸ் வீட்டின் சம்பிரதாயம். எனவே பிரியங்கா உள்ளிட்டு சிலர் இந்த ஃபார்மாலிட்டியை திறமையாகச் செய்தார்கள். வேறு சிலர் கண்கலங்குவது போல் முகத்தை வைத்துக் கொண்டார்கள். இதில் சிவாஜிக்கு நிகராக உச்சபட்ச நடிப்பை வழங்கியது அபிஷேக்தான். ‘சச்சசாய்ஙக்’ என்று கமல் கற்றுத்தந்த சத்தத்துடன் எல்லோரும் இணைந்து நாடியாவை வழியனுப்பி வைத்தார்கள்.

“நான் முன்னாடியே சொன்னேன். 'முன்னாடியா’ வாங்கன்னு" என்று மேடைக்கு வந்த நாடியாவை சிலேடையுடன் வரவேற்றார் கமல். “முன்பெல்லாம் நான் இதை விடவும் அமைதியா இருப்பேன். எனக்கு கோபம் அதிகம் வரும். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளத்தான் இப்படி. இங்க நெகட்டிவிட்டி இருந்தது” என்ற நாடியாவிடம் “மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடும் போது நீங்கள்தான் புகழை நோக்கி முதலாவதாகச் செல்கிறீர்கள்” என்று ஐஸ் வைத்து வழியனுப்பினார் கமல். பிறகு நம்மிடமும் விடைபெற்றுச் சென்றார்.

வீட்டின் உள்ளே ரணகள பஞ்சாயத்துகள் நடந்தன. “இன்னமும் இங்க நெறய பேர் Open up ஆகாம இருக்காங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார் வருண். (தம்பி... அத நீ சொல்லக்கூடாது... தப்பு... தப்பு!).

 
“ஆமாண்டா... நாம குரூப்பாதான் இருக்கோம்... என்ன இப்போ... தெரிஞ்சா தெரியட்டும்” என்று சவடலாக சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா. எந்தவொரு மனிதக் கூட்டத்திலும் அணி உருவாகும் சமாச்சாரம் என்பது இயல்பானது. இதை பிரியங்கா வெளிப்படையாக ஒப்புக் கொள்வதை ஒருவகையில் பாராட்ட வேண்டும். ஏனெனில் கடந்த சீசனில் ‘அன்பு கேங்கில்’ சீனியராக இருந்த ரியோ ‘குரூப்பிஸம்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே டென்ஷன் ஆகி விடுவார். அது போன்ற பாசாங்குகள் பிரியங்கா குரூப்பிடம் இல்லாதிருப்பது ஒருவகையில் நல்லதே. ஆனால் இந்த குரூப்பிஸம் விளையாட்டுத் தர்மங்களுக்கு உட்பட்டு இயங்குவது முக்கியமானது.

“இந்த வீட்டில் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று மருகி ஒதுங்கும் இசைவாணி, சின்னப்பொண்ணு, மதுமிதா, பாவனி ஆகியோர் இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு சமாளிக்க வேண்டும். அதற்கேற்ப எதிர் உத்திகளை அவர்கள் யோசிக்க வேண்டும். அதுதான் இந்த ஆட்டத்திலுள்ள சவால்.

“பலூன் டாஸ்க்கில் மதுமிதாவை கேப்டன் ஆக்க பிளான் போட்டோம்” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருக்க, "அது எப்படி நீ முடிவு செய்யலாம்?” என்று பாவனி அப்பாவியாகக் கேட்டார். உடனே ‘I know. I know’ என்னும் ரகுவரன் மாதிரி டென்ஷன் ஆன அபிஷேக் “இந்த கேம் அப்படித்தான்.. உனக்குப் புரியலைன்னா நான் என்ன செய்யறது?” என்று எகிற ஆரம்பித்தார்.

 
“ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோவத்துல இருந்தானோ தெரியல. இம்மாம் பெரிய கத்திய உருவிட்டான்" என்கிற காமெடி மாதிரி “நான் கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு ஏன் இப்படி இவன் கத்துறான்..தம்பின்னு நெனச்சேன். இவனுக்கு ஒரு பாயாசத்தைப் போட்டுற வேண்டியதுதான்" என்று புலம்பிக் கொண்டிருந்தார்… பாவம் நீ... ச்சே! மன்னிக்கவும்… பாவனி.

விசாரணை சபையில் இமான் சொன்னது போல, வரும் திங்கட்கிழமையில் இருந்து பிக்பாஸ் வீட்டின் உக்கிரம் இன்னமும் அதிகமாகி விடும். ஆம். அது நாமினேஷன் நாள். என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.

- விகடன்-
SHARE