Tuesday 19 October 2021

பிக்பாஸ் 5 : 16ம் நாள் | கூட்டு சேர்க்கும் பிரியங்கா, காட்டு கத்து கத்தும் அபிஷேக், சுந்தரத் தெலுங்கில் பாவனி..!!!

SHARE

“முட்டைக்கண்ணி... அங்கே என்னடி பார்க்கறே?” என்று ஏக வசனத்தில் இசைவாணியிடம் அபிஷேக் செய்த இம்சைகள் எல்லாம் ‘உவ்வேக்’ ரகம். இதன் உச்சக்கட்ட இம்சையாக அபிஷேக்கும் நிரூப்பும் பெண் ஆடைகளை அணிந்து வந்து எரிச்சல் ஊட்டினார்கள்.

‘’சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’’ என்பது மிகவும் ரகளையான பாட்டுதான். ஆனால் பிக்பாஸ் ஏன் அப்டேட் ஆகாமல் இருக்கிறார் என்பது புரியவில்லை. நான் எல்கேஜி படிக்கும் போது கேட்ட பாட்டு இது. ஆனால் ஒன்று, அவர் மறந்து போய் ஏதோ நினைவில், ‘சின்னப்பொண்ணுதான்.. வெட்கப்படுது… அம்மா.. அம்மாடி..’ என்கிற பாட்டை மட்டும் போட்டு விடக்கூடாது. பெரிய பஞ்சாயத்தாகி விடும்.

அக்ஷராவும் வருணும் மெயின் கேட் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசுவதை விடுங்கள்... அந்த மெயின் கேட் இருக்கிறதே?!.. ஆஹா.. எத்தனை வரலாற்றுச் சம்பவங்களுக்கான சாட்சியாக அது நிற்கிறது தெரியுமா? சட்டென்று நினைவுக்கு வருவது மூன்றாம் சீசன்தான். சாண்டி, கவின், லாஸ்லியா, முகேன், தர்ஷன் என்கிற ஐவர் டீம் இங்கு அமர்ந்து எத்தனை சுவாரஸ்யமான கலாட்டாக்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்?! குறிப்பாக வனிதா கிச்சன் ஏரியாவில் சேரனுடன் பேசிக் கொண்டிருந்ததை, கண்ணாடிக்குப் பின்னால் இருந்து சாண்டி கொடுத்த அந்த டப்பிங் சீனை மறக்க முடியுமா? ஹூம்... அதெல்லாம் ஒரு அழகிய நிலாக்காலம். கல்லூரி நண்பர்களின் பிரிவைப் போல் அவர்களை உணர முடிகிறது.

 
“வோட்டிங் பர்சன்டேஜ் உனக்கும் நாடியாவுக்கும் ஏறத்தாழ சமமா இருந்துச்சு போல. நீ ஜஸ்ட் எஸ்கேப் ஆகியிருக்க... ஏதாவது செஞ்சித் தொலை” என்று வருணிற்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா. “நான் என்னத்தைப் பேசுறது? தேவை இருந்தா மட்டும் பேசறதுதான் என் பாலிசி” என்று தன் குணாதிசயத்தை சொன்னார் வருண். ‘ஆமாம்... இவர் பெரிய அறிஞரு. வாயில முத்து வந்தா மட்டும்தான் உதிர்ப்பாரு’ என்பது அக்ஷராவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம்.

பாவனி உதட்டுக்குள் பேசுவது மணிரத்னம் படங்களின் ரகசிய வசனம் மாதிரியே இருக்கிறது. அதிலும் தெலுங்கையும் தமிழையும் ஒரு விநோதக் கலவையில் அடித்து அவர் பேசும் மிக்ஸி தமிழ் இருக்கிறதே?! பாவனி பேசும் போதெல்லாம் பிக்பாஸ் சப்டைட்டில் போட்டால்தான் நாம் பிழைத்தோம். அபிஷேக்கும் பாவனியும் சமாதானம் ஆகிக் கொண்டிருந்தார்கள். “நேத்திக்கு அண்ணன் டென்ஷன்ல இருந்தன்டா பட்டுக்குட்டி’ என்று ‘கிழக்குச்சீமையிலே’ விஜயகுமாராக மாறி உருகிக் கொண்டிருந்தார் அபிஷேக். (இவரு இன்னமும் எத்தனை அவதாரம் எடுப்பாருன்னு தெரியல!).

பிக்பாஸின் விதிமுறைகளை ஒழுக்கத்துடன் கடைப்பிடித்த முதல் நால்வர் மட்டுமே தலைவர் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று சலிப்புடன் அறிவித்தார் பிக்பாஸ். எனில் பிக்பாஸே நொந்து போகும் அளவுக்குப் பிரியங்கா உள்ளிட்டவர்கள் அத்தனை அழிச்சாட்டியம் செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இசைவாணி, சிபி, பாவனி, ராஜூ என்கிற அந்த நால்வரோடு ஐந்தாவதாக இமானும் குகனாக இணைந்தார்.

தலைவர் போட்டிக்காக நிற்கும் இந்த ஐவரும், ‘என்னா ஃபீலிங்கு?' என்கிற சவாலை எதிர்கொள்ள வேண்டும். முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் நிற்கப் போகிற இந்தப் போட்டியில் சிபிதான் வெல்வார் என்பது எனக்கு முன்னமே தெரியும். ஏனெனில் முகத்தில் சலனம் இல்லாமல் இருக்கும் அந்த வரம் இயற்கையிலேயே அவருக்கு வாய்த்திருக்கிறது.

 
“இந்தாளு தலைவரா வரக்கூடாதுப்பா” என்று எண்ணுபவர்கள், சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் சென்று பல்வேறு இம்சைகளைத் தந்து அவரது முகத்தில் ஏதாவது ஒரு உணர்ச்சியை வரவழைக்க வேண்டுமாம். “இப்ப வரேன் பாரு.. இதுவரை அடக்கி வெச்சிருந்த என் மைண்ட் வாய்ஸையெல்லாம் ஓப்பனா சொல்றதுக்கான டைம் வந்துடுச்சு” என்று ஆவேசத்துடன் களத்தில் இறங்கினார் அபிஷேக்.

இந்த சீசன் முடிவதற்குள் பல ENT மருத்துவர்கள் செல்வந்தர்களாகி விடுவார்கள் என்று தோன்றுகிறது. ஆம், பிரியங்காவும் அபிஷேக்கும் இது போன்ற போட்டிகளின் போது நிகழ்த்தும் காட்டுக்கத்தல்கள் பல பார்வையாளர்களின் காதுகளை நிச்சயம் பதம் பார்த்திருக்கும். (பிக்பாஸ்... இந்தச் சமயத்துல மட்டுமாவது இவங்க மைக்கை ஆஃப் பண்ணி வையுங்கள். காது இன்னமும் கூட ‘ஙொய்க்’ என்கிறது!).

அபிஷேக் கேங்கின் மோசமான இம்சைகளைத் தாங்க முடியாமல் முதலிலேயே சிரித்து அவுட் ஆகி விட்டார் இமான். ‘’மிக புத்திசாலி ராஜூவுக்கு ஹியூமர் செட் ஆகாது. வேற ஏதாவதுதான் அவனுக்கு ட்ரை பண்ணணும்” என்று வித்தியாசமாக சிந்தித்துக் கொண்டிருந்தார் அபிஷேக். நல்ல நகைச்சுவைக்கு விழுந்து விழுந்து சிரிப்பவன்தான், திறமையான நகைச்சுவையாளனாகவும் இருக்க முடியும். அது சரி, இவர்கள் செய்வதுதான் நல்ல நகைச்சுவை இல்லையே?! எனில் அபிஷேக்கின் லாஜிக் சரிதான்.

“சூடு இருக்கா... சொரணை இருக்கா?” என்று கூவிய ஹைடெஸிபல் பிரியங்காவின் சத்தம், அந்த ஏரியா முழுவதுக்கும் கேட்டிருக்கும். “உன் மேல எனக்கு ஹெவியான க்ரஷ் இருக்கு” என்று சிபியிடம் சொன்ன பிரியங்கா, 'ஓ... மயக்கும் சீமானே’ என்கிற பாடல் மாதிரி சிபியை மயக்கும் வகையில் டான்ஸ் வேறு ஆடிக் காட்டினார். பிரியங்காவின் இந்த நடனத்துக்கு யாராக இருந்தாலும் நிச்சயம் கோபம் வந்திருக்கும். ஆனால் சிபி ‘ஆர்ட் ஃபிலிம்’ ஆர்டிஸ்ட் போல சலனமில்லாமல் நின்றிருந்தார்.

 
“முட்டைக்கண்ணி... அங்கே என்னடி பார்க்கறே?” என்று ஏக வசனத்தில் இசைவாணியிடம் அபிஷேக் செய்த இம்சைகள் எல்லாம் ‘உவ்வேக்’ ரகம். இதன் உச்சக்கட்ட இம்சையாக அபிஷேக்கும் நிரூப்பும் பெண் ஆடைகளை அணிந்து வந்து எரிச்சல் ஊட்டினார்கள். நிரூப்பின் சிகையலங்காரத்துக்கு அவர் அதிகம் மெனக்கெடவே தேவையில்லை.

காணாமற் போனவர்களின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டதாலோ என்னவோ… சின்னப்பொண்ணுவும் தன்னால் இயன்ற அளவிற்கு கத்திக் கொண்டிருந்தார். திருநங்கைகளின் உடல்மொழியில் அவர் செய்த கிண்டல் சகிக்க முடியாமல் இருந்தது. நல்ல வேளையாக நமீதா இப்போது போட்டியில் இல்லை. இருந்திருந்தால் பெரிய கலாட்டா ஆகியிருக்கலாம்.

ராஜுவுக்கு உடல்நலம் சரியில்லை போலிருக்கிறது. எனவே டல்லாக இருந்தார். அபிஷேக்கின் லாஜிக் விளக்கத்தையெல்லாம் கேட்டு கேட்டு அவருக்கு எப்போதோ மரத்துப் போயிருக்க வேண்டும். எனவே அபிஷேக் செய்த அசட்டுக்காமெடி எதற்கும் அசைந்து கொடுக்காமல் சிலை போல கெத்தாக நின்றிருந்தார்.

 
இசைவாணியிடம் கிண்டல் செய்த போது வருண் சொன்ன ஒரு வசனம் நிச்சயம் ஆட்சேபகரமானது. “சட்டை வாங்கக்கூட காசில்லாம இருந்தேன்” என்பது போல் இசையின் இளமைக்கால வறுமையை வைத்து அவர் கிண்டல் செய்தது மிக மிக மோசமான முயற்சி. என்னதான் இது போட்டி என்றாலும் அதற்கென்று சில நாகரிக எல்லைகள் இருக்கின்றன. கோபத்தை வரவழைக்கிறேன் என்கிற பெயரில் நுண்ணுணர்வற்ற விஷயங்களில் ஈடுபடுடக்கூடாது.

வருணின் இந்த எல்லைதாண்டிய தீவிரவாத நகைச்சுவையை இமான் மட்டுமே முன்வந்து சரியான முறையில் ஆட்சேபித்தார். ஆனால், ‘இவனுக்கும் நமக்கும் ஏற்கெனவே வாய்க்கா தகராறு இருக்கு... எதற்கு வம்பு?” என்று நினைத்தாரோ என்னமோ... பின்னர் தன் ஆட்சேபத்தை ‘டிராமா’ என்பது போல் மாற்றிக் கொண்டார் இமான். சற்று சொரணையுள்ளவனைக் கூட நுண்ணுணர்வற்ற சமூகம் தனக்குள் விழுங்கி செரித்து விடும் என்பதற்கு இமானின் இந்த மாற்றம் ஓர் உதாரணம்.

எதற்கும் அசைந்து கொடுக்காமல் நின்றிருந்த இசைவாணியை ‘பே’ என்று கத்தி அபினய் அவுட் ஆக்கிய விதம் இருக்கிறதே?! கொடுமை. எல்கேஜி குழந்தை கூட அப்படியொரு அபத்தமான முயற்சியை செய்யாது. ஆனால் விளையாட்டில் புது உத்திகளை கண்டுபிடிக்கும் அபினய், இதை ஒரு சாதனையாகவே நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. கோபம் வருவது போல் காமெடி செய்வதில் பிரியங்கா டீம் கில்லியாக இருக்கிறது.

 
இவர்களின் இம்சை பிக்பாஸுக்கே தாங்கவில்லையோ என்னமோ?! ‘’இது டைபிரேக்கர் நேரம். யார் தலைவராக வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களோ அவருக்கு மாலை அணிவித்து தேர்ந்தெடுங்கள்” என்று ஆட்டத்தை மாற்றி விட்டார். ராஜூ தலைவராக ஆவதில் வழக்கம் போல் அபிஷேக்கிற்கு விருப்பமில்லை. எனவே மூளைச்சலவை டெக்னிக்கை ஆரம்பித்தார். மாலைகள் விழ ஆரம்பித்தன. ராஜூவுக்கு அக்ஷரா முதல் மாலையை அணிவித்தார். ஒரு கட்டத்தில் பாவனியும் ராஜூவும் தலா ஐந்து மாலைகள் பெற்று சமமான எண்ணிக்கையில் இருந்தனர். சிபியின் கழுத்தில் மூன்று மாலைகள் மட்டும் இருந்தன.

மறுபடியும் டைபிரேக்கர் என்பதால் ‘’ஆட்டத்தை மாத்துங்கப்பா” என்று மக்கள் கூவ, காற்று திடீரென்று சிபிக்கு ஆதரவாக மாறியது. ராஜூவின் கழுத்தில் இருந்த மாலைகள் ஒவ்வொன்றாக கழன்று சிபியின் கழுத்திற்கு மாறின. “பீஸூ பீஸா கிழிக்கும் போது ஏசு போல முகத்தைப் பாரு” என்கிற பாட்சாவாக, தனது மாலைகள் பறிபோன நிலையிலும் புன்னகை மாறாமல் நின்றிருந்தார் ராஜூ. ‘எப்படியாவது இந்த ஆட்டத்தை முடிங்கடா’ என்கிற சலிப்பே அவரது முகத்தில் இருந்தது. பிறகு அவரும் தனது மாலையை எடுத்து வந்து சிபியின் கழுத்தில் அணிவிக்க… இந்த வாரத்தின் தலைவர் ‘சிபி’ என்பதாக முடிவாகியது. அபிஷேக்கின் ஸ்ட்ராட்டஜி வென்று விட்டது போலிருக்கிறது. "ப்ரமோல என்னை வரவிடுங்கடா” என்று காட்டுக்கத்தலாக கத்திக் கொண்டிருந்தார் அபிஷேக். (கொஞ்சம் தண்ணி வைங்கப்பா... முடியல!).

 
“ரெண்டு பேரும் பொம்பளை கெட்டப்பல வந்தீங்க தெரியுமா... இன்னம் கொஞ்ச நேரம் நீங்க இருந்திருந்தா நிச்சயம் நான் சிரிச்சிருப்பேன். அதிலும் நீ பைத்தியக்கார கிழவி கெட்டப்பல வந்தது ரணக்கொடூர காமெடி” என்று பிறகு நிரூப்பிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. புதிய தலைவரான சிபி, ‘இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ போட்டு அணிகளைப் பிரித்தார். ‘பிரியங்கா, நீங்க சமையல் டீம்ல இருந்தே ஆகணும்” என்று இவர் கெஞ்ச, முதலில் மறுத்தாலும் பிறகு பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டார் பிரியங்கா. (வீட்டில் இருக்கும் அணிகளில் சமையல் டீம்தான் முக்கியம். எப்போதும் கேமராவில் காட்சியளிக்கலாம். மற்றும் உணவை நம்பி மற்றவர்கள் இருப்பதால் யாரும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள்).

தலைவர் போட்டியை விடவும் அதிக ரணகளமான டாஸ்க் அடுத்து தொடங்கியது. ஆனால் இது சத்தமில்லாமல் கத்தியில் குத்தும் போட்டி. நாமினேஷன் வைபவம். இந்த இரண்டாவது முறையிலும் அக்ஷராவையே முதலில் அழைத்தார் பிக்பாஸ்.

‘தேர்வுக்குழு ரகசியத்தை வெளியே சொல்லி விட்டார்’ என்கிற காரணத்தினால் அக்ஷராவிற்கு எதிராக வாக்குகள் விழுந்தன. ‘நாடகத்தை சிறப்பாக நடத்த விடாமல் செய்து விட்டார்’ என்கிற காரணத்தினால் சின்னப்பொண்ணுவுக்கும் வாக்குகள் வந்தன. அபிஷேக் எல்லாம் பட்டியலில் இடம் பெறாவிட்டால்தான் ஆச்சரியம். (விட்டால் நாமே உள்ளே சென்று கள்ள ஓட்டு போடலாம் என்கிற அளவுக்கு ஆவேசம் வருகிறது). நாமினேஷனுக்கு இசை சொன்ன காரணங்களில் லாஜிக்கே இல்லை. ஆனால் பிக்பாஸ் இதை ஆட்சேபிக்காமல் அனுமதித்தது ஆச்சரியம்.

 
“உங்க முழு பேரு என்ன?” என்று வாக்குமூல அறையில் இருந்து சட்டென்று வெளியில் வந்து பிரியங்காவிடம் ராஜூ கேட்டது நல்ல காமெடி. இதன் மூலம் தான் பிரியங்காவை நாமினேட் செய்யப் போகிறேன்’ என்பதை ஜாலியாக உணர்த்தினார். ஆனால் அவர் உண்மையில் நாமினேட் செய்தது, சின்னப்பொண்ணு மற்றும் பாவனியை.

நாமினேஷன் முடிவுகள் வெளிவந்தன. இந்த வார வெளியேற்றப் பட்டியலில் இடம் பெற்றவர்கள். அபிஷேக், பாவனி, அக்ஷரா, சின்னப்பொண்ணு, பிரியங்கா, தாமரை, ஐக்கி, இசை மற்றும் அபினய். கடந்த வாரம் தப்பித்த, ஒரே போட்டியாளரான பாவனி இம்முறை பட்டியலில் இடம் பெற்றார். ஆனால் கடந்த முறையைப் போல் வீட்டின் நாய்குட்டி முதல் எல்லோரும் இடம் பெறாமல் சிலர் தப்பியது ஆச்சரியம்தான்.

‘தாங்கள் யார் யாரை நாமினேட் செய்தோம்?’ என்பதை பிரியங்கா குரூப் வெளிப்படையாக பேசி அலசிக் கொண்டிருந்தது. ‘நீ யாருக்குப் போட்டே?” என்று ராஜூவிடம் கேட்டு இம்சை செய்தார் அபிஷேக். ‘’அதை வெளியில் சொல்லக் கூடாது. சொல்ல விருப்பமில்லை” என்று ராஜூ சொன்னது சரியான விஷயம். அபிஷேக்கை ராஜூ சைலன்ட்டாக நோஸ் கட் செய்யும் காட்சிகள் எல்லாம் பார்க்க அத்தனை பரவசமாக இருக்கின்றன.

“நீ சமையலில் வந்து ஏன் உதவவில்லை?” என்று ராஜூவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் பாவனி. இதை அவர் முதலிலேயே செய்திருக்கலாம். மாறாக ராஜூவைத் தவிர அனைவரிடமும் சென்று அவர் புலம்பியது அநாகரிகம். ஆனால் பாவனியை ராஜூ சமாளித்த விதம் இருக்கிறதே?.. வாய் சாமர்த்தியம் உள்ளவர்கள் எங்கேயும் பிழைத்துக் கொள்வார்கள் என்பதற்கான உதாரணக் காட்சி அது. அந்த அளவிற்கு சிரிப்புக்குள் உள்குத்தாக சீரியஸை கலந்து பதில் அளித்தார் ராஜூ. இதனால் எரிச்சல் அடைந்த பாவனி எழுந்து சென்று விட்டார். இதைப் பற்றி அவர் அனைவரிடமும் சுந்தரத் தெலுங்கு + தமிழில் புலம்பவிருக்கும் காட்சிகளை இனி நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

 
‘சின்னப்பொண்ணு, இசை, பாவனி... இவங்கள்லாம் டேஞ்சர். கொஞ்சம் பேசினாலே முகம் மாறிடறாங்க” என்று அபிஷேக்கிடம் உதட்டின் வழியாக சொல்லிக் கொண்டிருந்த பிரியங்கா, அபினய் அந்தப் பக்கம் வந்தவுடன் பேச்சை மாற்றி விட்டார். “ராஜபரம்பரையைச் சேர்ந்தவனைப் போய் இப்படி ரூம் பாயா மாத்திட்டாங்களே” என்று புலம்பியபடி படுக்கையறையை பெருக்கிக் கொண்டிருந்தார் ராஜூ. இதைக் கேட்டு அந்த அர்த்த ராத்திரியிலும் விழுந்து விழுந்து சத்தம் போட்டு சிரித்தார் தாமரை. (நீங்க இன்னமும் மாறலையா ஆத்தா?!).

நள்ளிரவைத் தாண்டியும் தூங்கச் செல்லாத ராக்கோழிகளான பிரியங்கா குரூப் ஒருவரின் மீது ஒருவர் ஷேவிங் க்ரீமை இறைத்து அந்த ஏரியாவையே ‘கலீஜ்’ செய்து கொண்டிருந்தார்கள். நிரூப் எவ்வித தனித்தன்மையும் இல்லாமல் பிரியங்காவின் வலது கரம் போல் மாறியிருப்பது பரிதாபம். “நீங்க வேஸ்ட் பண்ண க்ரீம் என்ன விலை தெரியுமா.. இருங்கடா உங்களுக்கு அரிசியை கட் பண்றேன்... அப்போதான் புத்தி வரும்” என்று பிக்பாஸ் உள்ளுக்குள் கறுவிக் கொண்டிருந்திருக்கலாம்.



- விகடன்-

SHARE