‘நான் கறுப்பா இருக்கேன்னுதானே எங்கிட்ட பேச மாட்றீங்களா?’ன்னு கேட்கறாங்க… அப்ப ஆடியன்சுக்கு என்ன தோணும்... என்னைத்தானே தப்பா நெனப்பாங்க...” என்றெல்லாம் அகஷ்ராவின் தன்னிலை விளக்கம் நீண்டது.
கமல் நேற்று அணிந்து வந்திருந்த ஆடை, 'கோட்டுக்கும் தாவணிக்கும்' செய்து வைத்த கலப்புத் திருமணம் போல் விநோதமாக இருந்தது. இதை ஒரு சராசரி நபர் அணிந்து சாலையில் இறங்கினால், யாராவது அவர் மீது புகார் செய்யும் சாத்தியம் இருக்கிறது.
புத்தகப் பரிந்துரையோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது நல்ல விஷயம். ‘உலக மனநல தினம்’ என்பதால் அதனுடன் தொடர்புடைய புத்தகத்தைப் பரிந்துரைத்தார் கமல். புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணரான வில்லியனூர் ராமச்சந்திரன் எழுதிய ‘The Emerging Mind’ என்கிற அந்த நூல் ‘மனித மனம் எவ்வாறெல்லாம் தன்னை உருவாக்கிக் கொள்ளும்/ஏமாற்றிக் கொள்ளும்’ என்பதைப் பற்றிய ஆய்வு உரைகளின் தொகுப்பு. மூளையின் வியத்தகு செயல்பாடுகளைப் பற்றி பல ஆய்வுகளை செய்துள்ளார் ராமச்சந்திரன்.

அகம் டிவி வழியாக உள்ளே கமல் ‘‘இன்னிக்கு எலிமினேஷன் கிடையாது. ஃப்ரீயா பேசுங்க’’ என்று ஆரம்பத்திலேயே போட்டியாளர்களை ரிலாக்ஸ் மோடுக்கு கொண்டு சென்றார். வீட்டுப் பணிகளைச் செய்யும் அணிகள், தங்களின் பங்களிப்பை ஒழுங்காக அளிக்கிறார்களா? என்கிற விசாரணையோடு சபை தொடங்கியது. இந்த ரிப்போர்ட்டை சம்பந்தப்பட்ட அணியைத் தவிர மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
“அதெல்லாம் வேளா வேளைக்கு செமயா சமைச்சுப் போட்டுடறாங்க. பூண்டு குழம்பு சூப்பர். அக்ஷரா தோசை ஸ்பெஷலிஸ்ட். நாங்க உணவை வீணாக்குவதில்லை. சின்னப்பொண்ணு சமையல் ஆட்சியில் நாங்கள் பரம செளக்கியமாக இருக்கிறோம்... ஐயா” என்று அனைவரும் கோரஸ் பாடினார்கள்.
சமையல் அணியில் இருக்கும் பிரியங்கா சொன்ன விஷயம் கவனிக்கத்தக்கது. “பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் நான் டைனிங் டேபிளைத் தாண்டி கிச்சன் பக்கம் போனதில்லை. இங்க வந்து சமைச்ச ஆரம்பிச்சப்புறம் சாப்பிடத் தோண மாட்டேங்குது. யாருக்காவது இல்லாமப் போயிடுமோன்னு கவனமா இருக்கத் தோணுது. சாம்பார் குறைய ஆரம்பிச்சா லைட்டா தண்ணி ஊத்தி சமாளிச்சிடறோம்” என்று கிச்சன் அறையின் பக்கத்திலிருந்து பேசினார். பிரியங்காவின் ஸ்டேட்மென்ட்டை கிச்சன் பக்கமே செல்லாத ஆண்கள் கட்டாயம் குறித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தட்டில் விழும் எக்ஸ்ட்ரா உணவுக்கு பின்னால் சமைக்கும் பெண்களின் தியாகம் இருக்கிறது.

“ஓ... பிரவுன் கலர்ல வந்தா அது டீயா?” என்று முன்னர் கேட்டு நம்மை ஜெர்க் ஆக்கிய சிபி, “பால்ல கொஞ்ஞூண்டு தயிர் ஊத்தினா.. அது தயிராயிடும் விஷயமே இப்பத்தான் எனக்குத் தெரியும்” என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார். “ஓ... அப்ப விமர்சனங்களே இல்லையா?” என்று சொல்லி கிச்சன் பாலிட்டிக்ஸை முடித்து வைத்தார் கமல்.
வீடு சுத்தம் செய்யும் அணியும் பாவனி தலைமையில் சிறப்பாகச் செயல்படுகிறதாம். கழிப்பறை சுத்தம் செய்யும் அணியின் தலைவரான ராஜூ, “இவன் என் டீம்தான். ஆனா பாத்ரூம் பக்கம் இவனைப் பார்த்ததேயில்ல” என்று அபிஷேக்கை சபையில் போட்டுக் கொடுத்தார். “இவங்க சாப்பிடற அளவுக்கு பாத்ரூம் பக்கம் வர்றதில்லை” என்று இயற்கைக்கு மாறான புது விஷயத்தை ராஜு சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. (அது எப்படி? உள்ளே போனது வெளியே வந்துதானே ஆகணும்... ராமச்சந்திரன் இதைப் பத்தி ஏதாவது புக்கு எழுதியிருக்காரான்னு தேடிப் பார்க்கணும்).
அடுத்ததாக பாத்திரம் விளக்கும் அணி. இதற்கு நமீதா தலைவராக இருந்தார். இப்போது தலைவர் இல்லையென்றாலும் அணி சிறப்பாக செயல்படுகிறதாம். இந்த அணி தொடர்பான வேலைகளைத் தவிர ‘தேங்கா உடைச்சுத் தர்றது, உயரத்துல இருக்கற ரவா டப்பாவை எடுத்துத் தர்றது...’ போன்ற விஷயங்களையும் நிரூப் சிறப்பாக செய்கிறாராம். (எடுபிடி பையன்றதை நாசூக்காக சொல்கிறார்களாம்!).
“ஓ... அப்ப நாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லையா... அது சரி. நாமினேஷன் ஆரம்பிச்சப்புறம்தான் உங்க லட்சணம் தெரியும். கன்ஃபெஷன் ரூம், கன்ஃப்யூஷன் ரூமா மாறப் போகுது. அதுவரை எல்லோரும் நல்லவரே. இந்த ஒற்றுமை நீடிக்கட்டும். ஆனா அது ஆடியன்சுக்குப் பிடிக்காதே” என்றெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே போனார் கமல். “அவங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நாங்க ஒற்றுமையா இருப்போம்” என்று பதில் வந்தது. (‘அது சரி... இந்த அஞ்சு சீசன்ல நான் எவ்ளோ ஒத்துமையை பார்த்திருப்பேன்’ என்பது கமலின் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்).
சர்வதேச விமர்சகரும் மனிதர்களைக் கூட ரிவ்யூ செய்யும் அசாதாரண திறமை கொண்டவருமான அபிஷேக்கை அழைத்து மற்ற போட்டியாளர்கள் பற்றி ஓரிரு வார்த்தைகளில் அபிப்ராயம் சொல்லச் சொன்னார் கமல். அனைவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்த அபிஷேக், பிரியங்கா பற்றி பேச ஆரம்பிக்கும்போது தனது அக்காவின் நினைவு வந்து கண் கலங்கத் தொடங்கி விட்டார் அபிஷேக். (அதென்னமோ? பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தப்புறம்தான் நிறைய பேருக்கு பாசமழை பீறிட்டு வருது!).

நேர்காணல்களில், விமர்சனங்களில் அபிஷேக் வெளிப்படுத்தும் அலட்டலான உடல்மொழி, அநாவசியமான ஆங்கில வார்த்தைகள் போன்றவற்றை வைத்து சமூகவலைத்தளங்களில் அவரைக் கிண்டல் செய்கிறவர்கள் ஏராளம். ஆனால் பிக்பாஸ் வீட்டில் அபிஷேக்கின் ‘பாசக்காரப்பய’ என்கிற இன்னொரு முகத்தை பார்க்க முடிகிறது. இதுதான் இந்த நிகழ்ச்சியின் பலம். “இவன் பண்ற வீடியோல்லாம் பார்த்து நான் ரொம்ப எரிச்சலாகியிருக்கேன்” என்றார் பிரியங்கா. (நீங்க தனி ஆளு இல்லம்மா!). “ஆனா.. இவன் நிறைய நாலேட்ஜ் இருக்கிற குழந்தை. இவனைப் பத்தி தப்பா நெனச்சுட்டேன்” என்று நற்சான்றிதழ் தந்தார் டிவி அக்கா.
போட்டியாளர்களுக்குள் சிண்டு முடிந்து விடுவது ரியாலிட்டி ஷோக்களின் ஒரு மாறாத கெட்ட வழக்கம். எனவே அந்த ஏரியாவுக்கு அடுத்து நகர்ந்தார் கமல். ஒவ்வொரு போட்டியாளரும் தனக்குப் பிடித்த / பிடிக்காத போட்டியாளரைப் பற்றி பொதுவில் அறிவிக்க வேண்டும். “ஒரு வாரம்ன்றது குறைந்த நேரம்தான்… இருந்தாலும் அதை வெச்சு சொல்லுங்க... ‘பிக்பாஸூக்கு முன்னாடி அவரைப் பத்தி இப்படி நெனச்சிட்டு இருந்தேன். இங்க வந்து பார்த்தப்புறம்தான் தெரியுது... வேற மாதிரி இருக்காரு’ன்னுலாம் தோணுமில்லையா. அதைச் சொல்லுங்க” என்று எடுத்துக் கொடுத்தார் கமல்.
“ஆளுதான் பார்க்க எல்ஐசி பில்டிங் மாதிரி உயரமா இருக்கானே தவிர அவன் ஒரு எல்கேஜி குழந்தை சார்” என்று நிரூப்பின் வெள்ளந்திதனத்தை பலரும் புகழ்ந்தனர். ‘’இதுவே எனக்கு எரிச்சலாகுது. ஆளு பொன்னம்பலம் மாதிரி இருந்துக்கிட்டு செந்தில் காமெடி பண்றாரு” என்று வித்தியாசமாக யோசித்து டிஸ்லைக் தந்தார் ராஜூ. (ரைட்டர்னா சும்மாவா!)
இதில் அதிக டிஸ்லைக் பெற்று முன்னணியில் இருந்தவர் அக்ஷரா. “பேச வந்தா கூட பேச மாட்டேன்றாங்க. Attitude காண்பிக்கறாங்க” என்பதை இசை உள்ளிட்டவர்கள் அக்ஷராவுக்கு எதிரான புகாராக தெரிவித்தார்கள். தன்னைப் பற்றிய சுயபரிசீலனையோடு ஒரு பிரச்னையைப் பற்றி மற்றவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கும் திறமை அக்ஷராவிற்கு இருக்கிறது. தனக்கு டிஸ்லைக் குத்தியவர்களைப் பற்றி தன் தரப்பு விளக்கத்தை சொல்ல ஆரம்பித்தார்.
“நான் ஒரு செலக்டிவ் Introvert/Extrovert. ஒருத்தர் என் கிட்ட வந்து பேசினா நல்லாவே பேசுவேன். ஆனா கொஞ்சம் விலகிப் போனா… சரி. அவங்க தனிமையை நாம கெடுக்க வேண்டாம்னு தள்ளி வந்துடுவேன். நாடியா என் பெட்மேட்தான். ஆனால அவங்க தனியாப் போய்த்தான் படுக்கறாங்க. சரி.. அவங்க இஷ்டம்னு விட்டுட்டேன். இசை பேச வந்தா நானும் தயாராத்தான் இருக்கேன். தாமரை அக்கா... வெள்ளந்தியானவங்கதான்.. ஆனா அவங்க வெகுளியா பேசறது... சமயங்கள்ல நெருடலா இருக்கு. பிரச்னையா மாறிடுமோன்னு பயமா இருக்கு. ‘நான் கறுப்பா இருக்கேன்னுதானே எங்கிட்ட பேச மாட்றீங்களா?’ன்னு கேட்கறாங்க… அப்ப ஆடியன்சுக்கு என்ன தோணும்... என்னைத்தானே தப்பா நெனப்பாங்க...” என்றெல்லாம் அகஷ்ராவின் தன்னிலை விளக்கம் நீண்டது.
தன்னோடு பேச முற்படுகிறவர்களிடம் அக்ஷரா கலகலவென்று சிரித்துப் பேசுவதை வந்த நாளிலிருந்து பார்க்கிறோம். “தாமரையும் அக்ஷராவும் அன்னியோன்யமாக அமர்ந்திருந்த காட்சி பார்க்க சந்தோஷமாக இருந்தது” என்று முந்தைய கட்டுரை ஒன்றில் கூட நான் எழுதியிருந்தேன். ஆனால் ‘வெள்ளை பாப்பா’வுக்கு எதிராக தாமரை டிஸ்லைக் குத்தியது ஆச்சரியம்.

தன் மீது டிஸ்லைக் குத்தப்படும் போதெல்லாம் மனம் கலங்கி அழுதார் தாமரை. அவர் அடிப்படையில் வெள்ளந்தியானவர்தான். ஆனால் ஒரு சபையில் எப்படிப் பழகுவது என்பதை இனிதான் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். யாராவது இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தால் சட்டென்று மூக்கை நுழைப்பது, தனக்கு பதில் வரும் வரை கேள்வியைத் தொடர்ந்து கேட்டு நச்சரிப்பது, பேசும் வார்த்தைகளில் கவனம் இல்லாமல் இருப்பது போன்ற சிறிய குறைகளை அவரிடம் பார்க்க முடிகிறது.
இன்னொரு வகையில் இதை நகரம் x கிராமம் என்கிற வகையில் பார்க்க முடிகிறது. கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனம் நகரத்துவாசிகளுக்கு சமயங்களில் எரிச்சலைத் தரும். (அதற்காக கிராமத்து மக்கள் அனைவருமே வெள்ளந்திகள், நல்லவர்கள் என்று ரொமான்ட்டிசைஸ் செய்ய விரும்பவில்லை. அங்குதான் சாதிய வன்மம், பங்காளிச் சண்டை உள்ளிட்ட பல எதிர்மறை விஷயங்கள் உச்சத்தில் இருக்கின்றன.)
கிராமத்து மனிதர்களாக இருந்தாலும் நகரத்து வாழ்க்கைக்கு பழகிய சின்னப்பொண்ணு, இமான் போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டின் சூழலை சரியாகப் புரிந்து கொண்டு அனுசரிக்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் இமான் மீது சின்னப்பொண்ணு டிஸ்லைக் குத்தியது சற்று ஆச்சரியம். “வந்த ரெண்டு நாளு சரியாத்தான் இருந்தாரு. அப்புறம்தான்...” என்று மென்று முழுங்குகிறார். “அது வந்து என்ன ஆச்சுன்னா...” என்று ஆரம்பித்து இமான் விளக்கம் அளிக்க “அது பிரச்னையில்ல” என்று சொல்லத் தயங்கி நிறுத்தினார் சின்னப்பொண்ணு. (பார்ப்போம்... கத்தரிக்கா முளைச்சா சாம்பாருக்குள்ள வந்துதானே ஆகணும்!).
டிஸ்லைக் வரிசையில் நாடியாவும் கணிசமாக இடம்பெற்றார். அவர் இந்த வீட்டில்தான் இருக்கிறாரா என்பதில் நமக்கே சந்தேகம் வருகிறது. இந்த வரிசையில் வருணையும் சேர்த்துக் கொள்ளலாம். தனக்கு டிஸ்லைக் தரும் போதேல்லாம் நாடியாவின் முகத்தில் துடிக்கும் மெல்லிய அதிருப்தியைக் காண முடிகிறது. ஆனால் அவார்டு பட நடிகை மாதிரி முகத்தை சலனமில்லாமல் வைத்துக் கொள்கிறார். இனியாவது சகஜமாகப் பழகுகிறாரா என்று பார்ப்போம்.
“இந்த வீட்டிற்கு வந்தப்புறம்தான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆடுறேன்... பாடுறேன்” என்று தாமரை சொல்லும் போது பார்க்க நெகிழ்வாக இருந்தது. “இவர் கிட்டதான் என் குறையெல்லாம் சொல்ல முடியுது” என்று ‘இமான் அண்ணாச்சியை’ பிடித்த நபராக தேர்வு செய்த தாமரை, பிடிக்காத நபர் என்று எவருமில்லை என்று diplomatic ஆக பேச ஆரம்பித்தார். (“சாமி சத்தியமா பிடிக்காதவங்கன்னு யாருமில்ல.. “என்று இவர் சொன்னது ப்ரமோவில் வந்தது. ஆனால் நிகழ்ச்சியில் துண்டிக்கப்பட்டு விட்டது.). “அந்த வெள்ளை பாப்பாதான் என் கூட பேச மாட்டேங்குது. பேச வந்தா தள்ளிப் போயிடுது” என்று அக்ஷரா மீது டிஸ்லைக் போட்டார் தாமரை.

ஒவ்வொருவரின் புகார்களையும் புகழுரைகளையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கமல்ஹாசனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. (நீங்க அமெரிக்காவுக்கே போயிடுங்க சிவாஜி!). “யாரு இங்க லைக், டிஸ்லைக் எதுவுமே வாங்கலை” என்று கமல் விசாரிக்க சின்னப்பொண்ணு, வருண், இசை ஆகிய மூவரின் பெயராக இருந்தது. “ஏதாவது ஒருவகையில் நீங்கள் மற்றவரை பாதித்து இருக்க வேண்டும். அதுதான் உங்கள் இருப்பின் அடையாளம். இல்லைன்னா எஸ்கேப்பிஸமா தோணும்” என்று தூண்டி விட்டார் கமல்.
அடுத்ததாக இமானை அழைத்த கமல் “இந்த சீசன்ல காமெடியன்தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கணும்னு சொன்னீங்க. அப்ப இந்த வீட்ல ஹீரோ, வில்லன்லாம் யார் யாரு... சொல்லுங்க பார்க்கலாம்?” என்று கேட்க ஒவ்வொருவரையும் பற்றி தன்னுடைய அபிப்ராயத்தை சொல்ல ஆரம்பித்தார் இமான்.
நாடியாவின் அமைதியை மற்றவர்கள் நெருடலாக பார்க்க அதையே இமான் ப்ளஸ் பாயின்ட்டாகப் பார்க்கிறார். “சுருக்கமா பேசி... மத்தவங்களை இந்தப் பொண்ணு நல்லா கவனிக்குது. டாப் 5 போட்டியாளரா வரக்கூடிய சான்ஸ் இருக்கு” என்றவர் ‘டாப் 1 ஆக வரக்கூடிய சாத்தியம் சின்னப்பொண்ணுக்கு இருக்கு” என்றார். (வாய்ப்பில்ல ராஜா!).

“பிரியங்கா பத்தி சொல்லணும்னா. அவங்களும் ஆங்க்கர். நானும் ஆங்க்கர். என் கிட்ட எப்படி பழகுவாங்களோன்னு முதல்ல யோசனையா இருந்தது. ஆனா இங்க வந்தப்புறம் அவங்க சேட்டையைப் பார்த்து நாங்க ரொம்ப நெருக்கமான நண்பர்களாகி விட்டோம்” என்ற இமான் “பிரியங்காவின் சிந்தனையும் செயலும் என்னைப் போலவே உள்ளது” என்று இம்சை அரசனாக மாறினார்.
“மத்தபடி வில்லன்னு யாரும் கிடையாது சார்..” என்று தன் உரையை முடித்துக் கொண்ட இமானிடம்.. “இருங்க. அவசரப்படாதீங்க. அடுத்த வாரம் நாமினேஷன் இருக்கு. அப்ப வில்லன் கதையெல்லாம் வெளியே வந்துடும். நீங்க ஒரு கணிப்பு சொன்னீங்க. மக்கள் வெளில வேற ஒரு கோணத்துல பார்த்துட்டிருப்பாங்க. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்றபடி விடைபெற்றார் கமல்.
தாமரையை அமர வைத்து பிக்பாஸ் குறித்து வெகு நீளமானதொரு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார் பிரியங்கா. “இது ரத்த பூமி ஆத்தா... பார்த்து சூதானமா நடந்துக்கணும். உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணுங்க. அது உங்க உரிமை. ‘எனக்குப் பிடிக்காதவங்க யாருமில்லை’ன்னு தேவையில்லாம சீன்லாம் போடக்கூடாது. யாரைப் பிடிக்கலையோ தைரியமா சொல்லிடலாம். நாமினேஷன், எலிமினேஷன்னு இங்க நிறைய ரேஷன் இருக்கு. ஒவ்வொருத்தர் முதுகுலயும் குத்தியே ஆகணும். நான் கூட இப்ப உங்க கிட்ட நல்லா பேசிட்டு உள்ளே போய் உங்களுக்கு எதிரா நாமினேஷன் பண்ணலாம். இதுதான் பிக்பாஸ் வாழ்க்கை” என்று பிரியங்கா சொன்னதையெல்லாம் எல்கேஜி பிள்ளையாக கவனமாக கேட்டுக் கொண்டார் தாமரை. (தாமரை மலருமா?!).
தனக்கு டிஸ்லைக் போட்ட நாடியா, இசை, சுருதி ஆகியோர்களிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார் அக்ஷரா. ஆனால் பிறகு இரவின் தனிமையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அந்த வீட்டில் தனக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் டிஸ்லைக் வந்த விஷயம் அவரைப் பாதித்திருக்கும் போல. எல்லாவற்றையும் சரியாக யோசிக்கும் அக்ஷராவிற்கு ‘இது ஒரு கேம்தானே?’ என்கிற தெளிவும் இருந்திருக்கலாம்.
திங்கட்கிழமை நாமினேஷன் வைபவம் நிகழும். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று ‘லாலாலா’ பாடிக் கொண்டிருந்தவர்களின் மனதில் உள்ள பூதங்கள் எல்லாம் வெளியே வரும். என்ன நடக்கும்?!
- விகடன்-
Tags:
cinema news