இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 17 சிசுக்கள் உள்ளிட்ட 67 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 18 வயதுக்கு குறைவான 69 ஆயிரத்து 130 சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், கொரோனா தொற்றால் 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நாளந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
அதேபோன்று, நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சிறுவர்கள் குறித்து குடும்ப நல சுகாதார பணியகம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய, ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய 17 சிசுக்களும், ஒரு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு இடைப்பட்ட 17 சிசுக்களும், ஒரு வயது முதல் 5 வயதுக்கு இடைப்பட்ட 13 சிறுவர்களும், 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 5 சிறுவர்களும் 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்களும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொரோனா பரவலில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் கபில ஜயரத்ன பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து, பாடசாலைகளை மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான சுகாதார வழிகாட்டி கல்வி அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த சுகாதார வழிகாட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு மாணவர்களை வழி நடத்த வேண்டும் எனவும், குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news