Friday 1 October 2021

பூஜித் மற்றும் ஹேமசிறியிடம் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு..!!!

SHARE

போதிய சாட்சியங்கள் இருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கடமைகளை அலட்சியம் செய்தமை மற்றும் கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைகளை கையளித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது மன்றில் ஆஜராகி இருந்த குறித்த இருவரிடமும் குற்றப்பத்திரிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக 864 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக 855 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முறைப்பாட்டின் சாட்சியாளர்களாக 1,215 நபர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த திருத்தம் குறித்து சட்டமா அதிபரினால் எழுத்துப்பூர்வமாக பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து தொடர பிரதம நீதியரசர் ஒப்புதல் அளித்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
SHARE