இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி..!!!




இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவுடன் நேற்று (01) நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் - ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் (2020 இல்), ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்தது.

இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி. + வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை (2020/2021) தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது. இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட பங்கேற்பாளர்களையும் இந்தத் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
Previous Post Next Post


Put your ad code here