Sunday 10 October 2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!!!

SHARE



மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வாகனப்பதிவு, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் வாகனங்களை மாற்றுவது போன்ற ஒரு நாள் சேவைகள் அதன் கீழ் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒரு நாள் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவை வெரஹெரா, அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களங்களின் அலுவலகங்களில் மட்டுமே உள்ளது.

ஒரு நாள் வாகனப்பதிவு சேவை நாரஹேன்பிட்ட, கம்பஹா, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் அலுவலகங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் 25 மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட கிளை அலுவலகங்கள் மூலம் இந்த சேவைகளை விரிவுபடுத்தி மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கப் போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இ-மோட்டரிங் முறையை நடைமுறைப்படுத்தல், வாகன இலக்கத் தகடுகளை விநியோகிப்பதற்கான கூரியர் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சேவைகளை ஒருங்கிணைப்பது போன்ற திட்டங்கள் துரிதமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் தினமும் சுமார் 2 ஆயிரம் சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆயிரத்து 500 வாகனப் பரிமாற்ற உரிமங்கள் மற்றும் சுமார் ஆயிரத்து 200 வாகனப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE