Thursday 7 October 2021

ஐவரடங்கிய குழு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு..!!!

SHARE



மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவின் அறிக்கை இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்த ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவின் தலைமையிலான இக்குழுவின் உறுப்பினர்களாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நிலூஷா பாலசூரிய, பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணாயக்கார, தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் எட்வட் பீரிஸ் மற்றும் அத்திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் மதுஷானி வர்ணசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

´மத்திய கலாசார நிதியம் தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது முழுமையாக மறுசீரமைக்கப்படும்´ என குறிப்பிடப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கு அமைய பயணித்து பிரதமர் அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக இக்குழுவை நியமித்திருந்தார்.

அதற்கமைய மத்திய கலாசார நிதியம் தொடர்பில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர்.

இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் மத்திய கலாசார நிதியத்தை அதன் நோக்கங்களை அடையக் கூடிய செயற்திறன் மிக்க நிறுவனமாக மாற்ற முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

அதற்கமைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை துரித கதியில் செயற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இதுவரை எவரது கண்களுக்கும் தென்படாத தொல்பொருள் தளங்கள் நாட்டில் காணப்படுகின்றன என்பது தனது நம்பிக்கை என தெரிவித்த பிரதமர், அவை தொடர்பில் ஆராய்ந்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சகல தொல்பொருள் தளங்களையும் பார்வையிடுவதற்கு இணையவழி ஊடாக ஒரு நுழைவுச்சீட்டை விநியோகிக்குமாறும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இது தொடர்பில் சுற்றுலா சபையுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானமொன்றை எட்டுமாறு பிரதமர் தெரிவித்தார்.

பல தொல்பொருள் அருங்காட்சியகங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை ஒரே பிரதேசத்தில் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால் அதனால் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரு குறிப்பிட்ட தொல்பொருள் வலயத்தில் அனைத்து அருங்காட்சியகங்களையும் உள்ளடக்கும் வகையில் நியாயமான விலையில் ஒரு நுழைவுச் சீட்டை அறிமுகப்படுத்துமாறு அறிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
SHARE