Wednesday 20 October 2021

முதலாவது சர்வதேச விமான சேவையின் ஆரம்பம்..!!!

SHARE



குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவை கொழும்பில் இருந்து ஆரம்பித்து வைக்கப்படும் வப் போயா தினமான 2021 ஒக்டோபர் 20 ஆம் திகதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

புத்தபெருமான் மஹாபரிநிர்வாண நிலையினை அடைந்த ஸ்தலமான குஷிநகர் மிகவும் தனித்துவமான ஸ்தானத்தைக் கொண்டுள்ளது.

2020 செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையானது இலங்கை யாத்திரிகர்கள் குழுவுக்கானதாக அமைய வேண்டும் என அறிவித்திருந்தார்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையிலான இலங்கையைச் சேர்ந்த பேராளர்கள் குழு இந்த அங்குரார்ப்பண விமானசேவையில் பயணிக்கவுள்ளது. அத்துடன் நான்கு இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோருடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள முக்கிய விகாரைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட100 சிரேஷ்ட பௌத்த மதகுருமாரும் இந்த முதலாவது விமான சேவையில் பயணிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இக்குழுவுடன் இணைந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பௌத்த வளாகத்தின் மையப் புள்ளியாக குஷிநகர் கருதப்படுவதுடன் புதிய சர்வதேச விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் தொடர்புகளை கணிசமான அளவில் மேலும் பலப்படுத்தும். இந்த அங்குரார்ப்பண விமானசேவை மக்களிடையிலான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல் இரு அயல் நாடுகளுக்கும் இடையேயான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நாகரிக உறவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த இருதரப்பு உறவில் கலாசார, ஆன்மீக மற்றும் மொழியியல் பிணைப்புகளுக்கு பௌத்த மதம் மையமாக உள்ளது.


இலங்கையை சேர்ந்த இப்பேராளர்கள் குழு இந்தியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் வாரணாசிக்கும் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். 2021 ஒக்டோபர் 20 ஆம் திகதி காசி, விஸ்வநாதர் ஆலயத்தில் விசேட வழிபாடு ஒன்றையும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2021 ஒக்டோபர் 21 ஆம் திகதி மாலை கொழும்புக்குத் திரும்புவதற்கு முன் கங்கை தரிசனத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், வஸ்கடுவா ராஜகுரு ஸ்ரீ சுபுதிமஹா விகாரையில் இருந்து புனித கபிலவஸ்து புத்தர் சின்னங்களும் வப் போயா நாளில் நடைபெறும் இந்த முதலாவது விமான சேவையில் பயணிக்கவுள்ளன. புத்தபெருமானின் நினைவுச் சின்னங்களை தற்போது பாதுகாத்து வரும், ராஜகுரு ஶ்ரீ சுபுதி மகாவிகாரையின் பிரதம குருவான சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக தேரர் இப்புனித சின்னங்களை குஷிநகருக்கான முதலாவது சர்வதேச விமான சேவையில் கொண்டு செல்லவுள்ளார்.

புனித சின்னங்களுக்கு குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் உரிய முறையில் வரவேற்பளிக்கப்படும். அத்துடன் இந்திய அரசாங்கத்தால் முழுமையான அரச கௌரவமும் வழங்கப்படும். மேலும் குஷிநகர் மற்றும் சாரநாத் உள்ளிட்ட பல இந்திய நகரங்களில் அவை காட்சிப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கபிலவஸ்து புனித சின்னங்களுக்கு புறம்பாக, 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட புனித பிப்ரஹ்வா சின்னங்கள் மாத்திரமே இலங்கையில் புத்தபெருமானின் வாழ்க்கைக்காலத்தை ஆவணப்படுத்தும் சின்னங்களாகும். அவை அதி வணக்கத்துக்குரிய வஸ்கடுவே ராஜகுரு ஶ்ரீ சுபுதி நாயக தேரர் அவர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன் களுத்துறையில் உள்ள வஸ்கடுவ விகாரையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 2020 புத்த பூர்ணிமா தினத்தன்று தனது மெய்நிகர் உரையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விகாரை தொடர்பாக விசேடமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த புனித சின்னங்கள் 2015 ஒக்டோபரில் இந்தியாவுக்கு கொண்டு செல்லபட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள கபிலவஸ்து புனித சின்னங்கள் கடந்த காலத்தில் 6 தடவைகள் மாத்திரமே இந்தியாவுக்கு வெளியில் எடுத்துச்செல்லப்பட்டிருந்ததுடன் 1978 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குஷிநகருக்கான முதலாவது விமானசேவையும் புனித சின்னங்களின் கண்காட்சியும் இந்திய இலங்கை மக்களால் பகிரப்படும் பொதுவான அம்சங்களுக்கு சான்றுபகர்கின்றன.
SHARE