Wednesday 24 November 2021

பிரபாஸுக்கு சம்பளம் ரூ.150 கோடியா?

SHARE

தெலுங்கு சினிமாவில் இருந்த கதாநாயகர்களில் ஒருவராக இருந்தவர் பிரபாஸ். பவன் கல்யாண், மகேஷ் பாபு போன்ற இளம் கதாநாயகர்கள் முன்னணியில் இருந்தபோது இவருக்கு என்று ரசிகர்கள் ஆதரவு தனித்து இல்லை.

பாகுபலி முதல் பாகம் வெளியான பின்பு அகில இந்திய சினிமாவில் பிரபாஸ் அடையாளம் காணப்பட்டார். பாகுபலி இரண்டாம் பாகம் வெளியான பின் வணிக ரீதியான வெற்றி பிரபாஸ் சம்பளத்தை மட்டுமல்ல அவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் இந்திய அளவில் அதிகரித்தது.

இதனால் மற்ற தெலுங்கு நடிகர்களைக் காட்டிலும், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பிரபாஸ் உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். இப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. அடுத்து 'ஆதி புருஷ், சலார்' மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் 'ஆதி புருஷ்' படத்திற்கே அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. அடுத்து அவர் நடித்து வரும் படங்களுக்கும் அதே அளவில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் இந்தி நடிகர்களான சல்மான்கான், அக்க்ஷய் குமார் ஆகியோரை விடவும் பிரபாஸ் அதிக சம்பளம் பெறுகிறார் என மும்பை பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் இந்தியில் மட்டுமே வெற்றிபெற்றது. மற்ற மொழிகளில் வசூல் அடிப்படையில் தோல்வியடைந்தது.

அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இருந்தாலும் பிரபாஸைத் தேடி பல பிரம்மாண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பது இந்திய திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE