Thursday 4 November 2021

பிக்பாஸ் 5 : 32ம் நாள் | பாவனிக்கும் நிரூப்புக்கும் சண்டை… அதை வீடே வேடிக்கை பார்க்குது..!!!

SHARE


‘சினிமா டாஸ்க் முடிந்தது’ என்று பிக் பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டதோ, இல்லையோ... நமக்குள் அப்படியொரு பெரிய ஆசுவாசம் ஏற்பட்டது.

“பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணெண்ணெய் ஊத்தினேன். அதுவும் விலை ஏறிடுச்சேன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன். இப்ப எந்த ஆயில்ல ஓடுதுன்னு எனக்கும் தெரியல… வண்டிக்கும் தெரியல” என்று ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி சொல்வார். அதுபோல சீசன் 5 எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பது பிக் பாஸிற்கும் தெரியவில்லை; நமக்கும் தெரியவில்லை.

கடந்த வாரத்தில் நெருப்பைக் குறிக்கும் பாடல்களை ஒலிபரப்பிய பிக் பாஸ், நிரூப் என்று வரும்போது மொத்தமாக ஏறக்கட்டி விட்டார். ‘ஒரு குச்சி... ஒரு குல்பி’ பாடல் ஒலித்தது. ‘யாரு… யாரு… அண்ணாத்த யாரு’ என்கிற வரிகளை ஒலிக்க விட்டு, தீபாவளி ரிலீஸ் படத்திற்கு பிரமோஷன் செய்தார்கள்!

போட்டியாளர்களை எப்படியெல்லாம் இம்சை செய்யலாம் என பிரியங்காவிடம் ஐடியா கேட்டுக் கொண்டிருந்தார் நிரூப். “ஆனா ஹர்ட்டிங்கா இருக்கக்கூடாது” என்று கருணையுடன் அவர் சொன்னது சிறப்பு. (உண்மையிலேயே ‘அந்நியன்’ அம்பிதான் போலிருக்கிறது). ‘blindfold makeup’ போடலாம் போன்ற சில டெர்ரரான ஐடியாக்களை அள்ளித் தெளித்தார் பிரியங்கா.

 
அபினய் ஆட வேண்டிய ‘தெய்வத் திருமகள்’ பாடல் ஒலித்தது. அபினய் பாவம், தனக்கிருக்கிற திறமையை வைத்து ஏதோ ஒப்பேற்றிக் கொண்டுதான் இருக்கிறார். இந்தப் பாடலுக்கு கூட பொம்மையை வைத்து நன்றாகத்தான் ஆடினார். ஆனால் குசும்பு பிடித்த அண்ணாச்சி, அபினய்யை ஏதாவது சொல்லி நோண்டிக்கொண்டே இருக்கிறார்.

அடுத்ததாக ‘படையப்பா’ நீலாம்பரி பாடல் ஒலித்தது. ‘நான்தானா?” என்று பதறியபடி சென்று மேடையில் ஆடினார் அக்ஷரா. அது நீலாம்பரியாகத் தெரியாமல் கே.எஸ்.ரவிக்குமார் ஆடியதைப் போல்தான் தெரிந்தது. ரஜினி ஸ்டைலில் சிபி ஜதி சொல்லும்போது அதற்கு ஆவேசமாக ராஜூ தந்த ரீயாக்‌ஷன்கள் பிரமாதம். தலையில் இருந்த விக் கழன்று விழுமளவிற்கு வேகமாக உடலை ஆட்டி அவர் செய்த அசைவுகளும் சூப்பர். ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் ஜதி சொல்லும்போது இப்படித்தான் எம்.ஆர்.ராதா தாவித் தாவிக் குதிப்பார். ராஜூவின் ரீயாக்‌ஷன் அதை நினைவுபடுத்தியது. நேற்றைய ஏமாற்றத்தை இன்று ராஜூ சற்று ஈடு கட்டி விட்டார் எனலாம்.

‘தெய்வத் திருமகள்’ பாடல் தந்த உணர்ச்சி காரணமாக தன் மகளின் நினைவு வந்து வெளியில் சென்று அழுத அபினய்க்கு ஆறுதல் சொன்னார் அக்ஷரா. ஆனால் “அவரோட பாட்டு முடிஞ்ச பிறகு ஃ.பீல் பண்ணாம, நீலாம்பரி பாட்டுக்கு அபினய் ஃபீல் பண்றாரே... லாஜிக் இடிக்குதே” என்று அண்ணாச்சி தன் குசும்பை விடாமல் குத்தலாகச் சொல்ல, “பாவம் அவர்” என்று பரிந்து வந்தார் ராஜூ.

 
நாணயம் எடுத்ததை தவிர சுருதி இதுவரை பிக்பாஸ் வீட்டில் எதையும் சிறப்பாக செய்யவில்லை. ஷோடைமில் யாரையும் சிரிக்க வைக்க முடியாமல் போக, குடை பிடிக்கும் தண்டனையைப் பெற்றார். சீசன் 3 கவின் போல, பாத்ரூமையும் வருணையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. “ரெஸ்ட் ரூம் போகணும்” என்று சொன்ன வருணிற்கு குடை பிடித்தார் சுருதி. ‘அற்பனுக்கு வாழ்வு வந்தா…’ பழமொழிதான் நினைவிற்கு வந்தது.

மதுமிதாவிற்கான பாடல் ஒலித்தது. பாவம், அவருக்கும் மைனஸ் இருபத்து மூன்றாம் புலிகேசிக்கும் கூட சம்பந்தமில்லை. திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி எதையோ செய்து கொண்டிருந்தார். எந்தப் பாடல் ஒலித்தாலும் அதைக் கேட்டு ரசித்து ஆடும் பிரியங்காவின் எக்ஸ்பிரஷன் சூப்பர்.

 
வருணுக்கான ‘ஷோடைம்’ வந்தது. இவராலும் யாரையும் சிரிக்க வைக்க முடியவில்லை. ஏற்கெனவே ரோபோ மாதிரி நடந்து கொண்டிருந்த இவரை ‘ஸ்லோமோஷனில்’ இயங்க வேண்டும் என்று பிக்பாஸ் தண்டனை கொடுத்து விட்டார். சார்ஜ் தீர்ந்து போன சிட்டி ரோபோ போல பரிதாபம் காட்டிக்கொண்டிருந்தார்.

பிக் பாஸ் தந்த தண்டனையை வருண் சீரியசாக எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. மூடப்பட்ட பாத்ரூமிலும் அவர் ஸ்லோமோஷன் தண்டனையை தீவிரமாகப் பின்பற்ற, வெளியே மற்றவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்து உள்ளே பாய்வதற்காக அபினய் பரபரக்க, "உள்ள கண்ணாடியை மறந்து வெச்சுட்டேன்” என்று அந்த சமயத்திலும் வருண் செய்த குறும்பு ரசிக்க வைத்தது.

பிரியங்காவிற்கான பாடல் ஒலித்தது. மற்றவர்களின் பாடல்களுக்கு ரசித்து ஆடிய பிரியங்கா, தன் பாடலுக்கு ஆடிய நடனம் ‘தேவலை’ ரகம்.

இமானின் இருபக்கமும் பிரியங்காவும் மதுமிதாவும் தலைவைத்து படுத்துக் கிடக்க “இது என்னோட சிங்கிள்பெட். இதுல இருந்து சில சத்தங்கள் வரும். அதன் பாதிப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி உங்களுக்கு இருக்கா?” என்று குறும்பு செய்து கொண்டிருந்தார் அண்ணாச்சி.

ஐக்கிக்கான ‘ஷோடைம்’. உண்மையாக சிரிக்க வைத்தாரோ, அல்லது பாவப்பட்டு சிரித்தார்களோ, மதுமிதாவும் பிரியங்காவும் சிரித்து விட ஐக்கிற்கு ‘ஸ்டார் பேட்ஜ்’ கிடைத்தது.

 
‘மாமா... மாப்ளே...’ பாடலுக்கு அட்டகாசமாக ஆடி அசத்தி விட்டார் ராஜூ. தாமரை உள்ளிட்டவர்கள் கூட ஆடியதும் சிறப்பு. சம்பிரதாயமான பாராட்டாக இல்லாமல் சபையின் உண்மையான பாராட்டை ராஜூ சம்பாதித்தார். பாடலின் இடையே ராஜூவின் விக் விழுந்ததும் கூட காமெடியாகி விட்டது. காமெடியன்களுக்கு இது ஒரு வசதி. ஒரு ஃப்ளோவில் அவர்கள் எது செய்தாலும் நகைச்சுவையாகி விடும். நிச்சயம் அவர் கலக்கி விடுவார் என்று தெரியும். இரண்டு பேருக்கும் மேலாகவே சிரிக்க, அவர் ஸ்டார் பேட்ஜ் பெற்றார். நகைச்சுவையாளர்களுக்கு இதுவும் ஒரு வசதி. அவர்களின் முந்தைய நகைச்சுவைகள் நினைவிற்கு வந்து அவர்களைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.

வருண் கேரக்டராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னேன். அதை மெய்ப்பிக்கும் வகையில் ‘பேட்டரி டவுன்’ என்று கீழே படுத்துக் கொண்டு அவர் சார்ஜ் ஏற்றிக் கொண்ட காட்சி ரசிக்க வைத்தது.

 
‘சினிமா டாஸ்க் முடிந்தது’ என்று பிக் பாஸ் அறிவித்ததும் போட்டியாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டதோ, இல்லையோ... நமக்குள் அப்படியொரு பெரிய ஆசுவாசம் ஏற்பட்டது. ‘இந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்றவர்களாக இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். ராஜூவைத் தவிர்க்கவே முடியாது என்பது நிதர்சனம். தனது பங்களிப்பைத் தாண்டி பெரும்பாலான நேரத்தில் கேரக்டருக்குள் இருந்தார்.

ஆனால் இன்னொருவராக ‘மதுமிதா’ எப்படித் தேர்வானார் என்பது புரியவில்லை. நாம் பார்க்காத நேரத்தில் அவர் ஏதோ சிறப்பாக செய்திருக்கிறார் போலிருக்கிறது! நிரூப் பரிந்துரை செய்த ‘இமான் – ராஜூ’ என்பது சரியான சாய்ஸாக இருந்திருக்கும்.

சிறப்பாகப் பங்கேற்றவர்கள் தேர்வு முடிந்த பிறகும் இமான் எதற்கோ எழுந்து தன் விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். இதில் அக்ஷராவின் பங்களிப்பைப் பற்றி இமான் பலத்த சந்தேகங்களை எழுப்ப, பிறகு என்ன நடக்கும் என்பது அப்போதே நமக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. ஆம்... கார்டன் ஏரியாவிற்கு சென்ற அக்ஷரா வழக்கம் போல் பொலபொலவென கண்ணீர் சிந்த, மற்றவர்கள் அவரைத் தேற்றினார்கள்.

 
“என்னையே ஏன் அவர் மட்டம் தட்டுகிறார்” என்று அழுது புலம்பிய அக்ஷராவை “அண்ணாச்சி அந்த நோக்கத்தில் செய்திருக்க மாட்டார்” என்று ஆறுதல் சொன்னார் வருண். ‘‘அண்ணாச்சி செய்தது தவறு. பொதுவில் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது” என்று பிரியங்கா சொல்லிக் கொண்டிருக்க, தன் நண்பரை விட்டுக் கொடுக்க முடியாமல் மழுப்பலாகப் பேசினார் ராஜூ.

பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் கூடவே ஆட்டுவதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார் அண்ணாச்சி. வெளியே வந்து அக்ஷராவிடம் விளக்கம் சொல்ல ஆரம்பிக்க “நான் தனியா அழுதா உங்களுக்கென்ன பிரச்னை? நான் ‘நீலாம்பரி’ கேரக்டரா இருந்து கையைச் சொடுக்கி உங்களைக் கூப்பிட முடியுமா? மரியாதை இல்லாம போயிடும். அதான் நான் செய்யலை’’ என்று தந்த லாஜிக் விளக்கம் ஓரளவிற்கு சரியாகவே இருந்தது.

 
‘எந்த ஐந்து பேர் பெட்ரூமில் படுக்காமல் வெளியே படுக்க வேண்டும்?’ என்ற தேர்வை நிரூப் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலில் பாவனி மீண்டும் இடம் பெற்றதால் அவர் கோபித்துக் கொண்டார். பாவனிக்கும் நிரூப்பிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ‘பிக்பாஸ் சொல்றதைத்தான் நான் செய்யறேன். அதுக்கான காரணங்களும் இருக்கு” என்று ஒரு கட்டத்தில் நிரூப்பின் டெம்பரேச்சர் அதிகரிக்க, பாவனி சட்டென்று பணிந்து போனது புத்திசாலித்தனம். ஆனால், வாக்க்குவாதத்தின் இடையே, ‘‘வாய் பேசாத... வாய் பேசாத...’’ என்று நிரூப் சொன்னதில் மெலிதான ஆணாதிக்கத்தனம் தெரிந்தது.
 
கார்டன் ஏரியாதான் பிக் பாஸ் பிரச்னைகளுக்கான சமாதானப் பூங்கா போலிருக்கிறது. நிரூப்பும் பாவனியும் அங்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ‘தான் ஏன் அப்படிச் செய்ய நேர்ந்தது’ என்பதை நிரூப் விளக்க, பாவனி சமாதானம் ஆனார். “நாளைக்கு நீயும் தலைவர் ஆகலாம். இதை விடவும் கொடூரமான டாஸ்க் எல்லாம் தர வேண்டியிருக்கும்” என்று நிரூப் சொன்னது யதார்த்தமான உண்மை.

 
சேல்ஸ்மேன் - வாடிக்கையாளர் என்கிற விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதில் சேல்ஸ்மேன்களாக ராஜூவும் இமானும் இருந்தார்கள். ‘டிவி வாங்கினா வாஷிங் மிஷின் இலவசம்…’ என்று அதிரடி ஆஃபர்களை இஷ்டத்திற்கு அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் ராஜூ. கடை உரிமையாளர் இதைக் கேட்டிருந்தால் ஹார்ட் அட்டாக் வந்து விழுந்திருப்பார். இதில் சிறந்த வாடிக்கையாளராக சிபியும் சிறந்த விற்பனையாளராக இமானும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்களுக்கு பரிசாகக் கிடைத்தது என்னமோ கேக். ஆனால் நமக்கு கிடைத்தது வெறும் அல்வாதான். அல்வாவைச் சாப்பிடுவோம்… தீபாவளியைக் கொண்டாடுவோம்… தீபாவளி வாழ்த்துகள்.

- விகடன்-  

SHARE