Friday 26 November 2021

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை அழைத்துவர ஏற்பாடு..!!!

SHARE

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 7000 குடும்பங்களை அடுத்த வருடம் அழைத்து வருவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக பிரதி உயர்ஸ்தானிகர் சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, கொழும்பு – மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (26) சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் இது பற்றிக் கூறிய அவர்,

“இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இந்தியாவில் தங்கியிருக்கின்றவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படவுள்ள இலங்கையர்களுக்கு பயண ஏற்பாடுகளை இலவசமாக வழங்குவதற்கும் பொருட்களை எற்றிவருவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அழைத்து வரப்படுகின்றவர்களின் செலவுகளுக்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முதல் கட்டமாக தலா 30,000 ரூபாவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அழைத்து வரப்படுகின்றவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் சர்வதேச தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இந்த முயற்சிகளை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்ற இலங்கையர்கள், தங்களுடைய பூர்வீக இடங்களில் மீள்குடியேறி இயல்பு வாழ்கையை தொடர்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தானும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
SHARE