மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் - மாணவி கீர்த்தனா..!!!


பல ஆசைகளின் மத்தியில் தான் பாடசாலை போனோம்.மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் போனோம். முதலாவது கால் வைக்க முதலாவதாக வந்த வாகனம் நின்றது. தொடர்ந்து நடந்தோம் அடுத்த அடி வைக்க அடுத்த வாகனமும் நின்றது. மூன்றாவதாக வந்த சி. ரி.பி பஸ் தான் சரியான வேகத்திலை வந்து அடிச்சது. அது வேகமாக வராட்டி விபத்து நடந்திருக்காது நண்பியும் தப்பி இருப்பா.அவா எங்களை விட்டு போயிட்டா.என்னுடைய நண்பி மதுசாலினிக்கு சிகிச்சைகள் செய்தும் பலனளிக்கவில்லை.எனக் கண்ணீருடன் தெரிவித்தார் மாணவி கீர்த்தனா.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் அனுமதியுடன் இணையவழி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றும் போதே இவ்வாறு கூறினார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாணவிகள் மீதான விபத்தின் போது மஞ்சள் கோட்டில் பயணித்த மாணவி மதுசாலினி பலத்த காயங்களுடன் சிகிச்சை பலனின்றி மரணித்த நிலையில் வீதி விபத்துக்களைத் தடுப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றிய போதே குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலானது செயல்நிலைக்கான திட்டங்களை முன்மொழியும் வகையில் 100 பேர் மட்டுப்படுத்தப்பட்டு கலந்துரையாடினார்கள். பாடசாலை அதிபர்கள். மாணவர்கள். பெற்றோர். வைத்தியர்கள் மற்றும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பலம்பெயர்தோர் எனப் பலரும் பங்குகொண்டனர்.

இக் கலந்துரையாடலை கிளி. பீப்பில் ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி.
Previous Post Next Post


Put your ad code here